Home ஜல்சா ஆண்கள் அழைப்பார்கள். நான் செல்வேன்:வாக்குமூலம்!

ஆண்கள் அழைப்பார்கள். நான் செல்வேன்:வாக்குமூலம்!

52

கொடூரமானவை அதன் விளைவுகள் எந்தளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உலக வரலாற்று பாடங்கள் எமக்கு கற்பித்துள்ளன. ஒரு நாட்டின் மீதான ஆக்கிரமிப்புகள் , மக்கள் சமூகத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கள் என்பவற்றுக்கு உலகில் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.

தனி மானிடன் மீதான ஆக்கிரமிப்பு என்பது மிக கொடூரமானதாகவே அமையும் . அவ்வாறு ஆயுளில் மீளா ஆக்கிரமிப்பிற்குள்ளான ஒரு கைதியின் வாக்குமூலத்தை சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சந்ததிகளுக்காக பகிர்ந்துகொள்கின்றேன்.

ஆனால் இந்த கைதியின் ஆக்கிரமிப்புகள் படைப்பலம் கொண்டு மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல , அதே போன்று ஆயுத முனையில் சிறை வைக்கப்பட்டதும் அல்ல. பாலியல்சார் ஒரு சமூக நோயின் ஆக்கிரமிப்பிற்குள் சிறைப்பட்ட கைதியே இவள்.

ஆம் , கைதி என்ற சொல்லுக்கு ஆண் பால் பெண் பால் இல்லை. இந்த அடிமை தாயிற்கு விடுதலையும் இல்லை..கற்பனை வடிவில் சோடிக்கப்பட்ட கதையும் அல்ல. இன்றும் எம்முன் உயிருள்ள சாட்சியாக இருளில் வாழும் ஒரு இளம் தாயின் சத்திய வாழ்வின் விதியே இது…..

வன்னி வளமிக்க நிலப்பரப்பில் விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட மக்கள் வாழும் மிகவும் ரம்மியமான குக்கிராமம். மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டம் வடிந்து போன பின்னர் செழுமை பயிரில் மக்கள் வாழ்வை மீள் எழுப்பப் பாடு பட்ட தருணம். ஆனால் பின் தங்கிய சூழல் , வறுமை , அடிப்படை வசதிகள் போய்ச் சேராத நிலை . இவை இந்த குக்கிராமத்தின் அடையாளங்களாகும். சிறார்கள் கல்வியைத் தேடி கூரையற்ற பள்ளி அறைகளுக்கு ஓடினார்கள். ஒரு வேளை உணவு, கொஞ்சம் கல்வி இதுவே அந்த சிறார்களின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.
அவ்வாறு குறித்த பாடசாலைக்கு அனுப்பப்பட்ட – மாணவியே நவலக் ஷி

தனது வாழ்வில் இடம்பெற்ற இன்னல்கள் அழைத்துச் செல்லப்பட்ட இடங்கள் என்பவற்றை நவலக் ஷ்
இவ்வாறு விபரிக்கின்றார்,

ஆண்கள் அழைப்பார்கள். நான் செல்வேன். அவ்வாறு சென்று பொலிஸாரிடம் பிடிபட்ட பின்னர் இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
இந்த இடம் நன்றாக உள்ளது. காலையில் எழுவது, வேலைகளைச் செய்வது , வழிபாடுகளில் ஈடுபடுவது , சிகிச்சைக்குச் செல்வது அதன் பின்னர் புத்தகங்களை வாசிப்பது , நித்திரைக்குச் செல்வது என்பது எமது அன்றாட செயற்பாடுகளாகும்.

வரலாற்று நூல்கள் , தமிழ் புத்தகங்கள் மற்றும் ஒரு சில சிறிய ஆங்கில மொழி புத்தகங்களையும் விரும்பி வாசிப்பேன்.
அம்மா , அப்பா , அண்ணா , இரண்டு சகோதரிகள் . தம்பி உயிரிழந்து விட்டார். நான் குடும்பத்தில் இரண்டாவது.
தற்போது எனக்கு 25 வயது. ஒரு மகன் இருக்கின்றான். 10 ஆம் வகுப்பு வரை பாடசாலைக் கல்வியை கற்றேன்.
எமது கிராமத்தில் இருந்த அக்கா தான் எனக்கு பல்வேறு ஆசைகள் காண்பித்து இவ்வாறான நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். பின்னர் அடிமையாகி போனேன். 17 வயதில் இருந்தே ஆண்களுடன் செல்ல பழகினேன். அவர்கள் எனக்கு பணம் தருவார்கள்.

அம்மா , அப்பா போதைக்கு அடிமையானவர்கள். வறுமை , பணம் இல்லை. சாப்பிட உணவு இல்லை. தம்பிக்கும் தங்கைக்கும் புத்தகம் வாங்க பணம் தேவைப்பட்டது. எனவே தான் ஆண்களுடன் போனேன்.
ஆரம்பத்தில் எனக்கு மிகவும் வேதனையாகவும் கஷ்டமாகவும் இருந்தது . ஒரு வகையான மருந்தினை அந்த அக்கா எனக்கு கொடுத்தார். அதன் பின்னர் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. என்னை கட்டுப்படுத்த முடியாது அந்த தொழில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

ஆரம்பத்தில் அம்மா அமைதியாக இருந்தார். ஆனால் பின்னர் என்னை கண்டித்து நிறுத்தினார். ஆனால் என்னால் நிறுத்த முடியாமல் போனது. பல சந்தர்ப்பங்களில் அம்மாவுடன் சண்டை பிடித்துக் கொண்டு ஆண்களுடன் சென்றேன்.
அம்மா , அப்பா போதைக்கு அடிமையானவர்கள். எனவே அவர்கள் எமது தேவைகளை நிறைவேற்றவில்லை. ஆகவே ஒரு கட்டத்தில் ஆண்களுடன் செல்வதை என்னை அறியாமலேயே தொழிலாக்கிக் கொண்டேன்.

இவ்வாறு செல்லும் போது ஒரு ஆணிடம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வரை பணம் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு பேருடன் செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு.

பாடசாலை 2 மணிக்கு விட்ட உடன் நான் வீட்டிற்கு வந்து விடுவேன் . அதன் பின்னர் ஆண்கள் என்னைத் தேடி வந்து வீட்டிற்கு சற்றுத் தொலைவில் இருந்து கொண்டு பணத்தை காண்பிப்பார்கள். அப்போது நான் செல்வேன்.

இவ்வாறு வரும் ஆண்கள் என்னை யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் வவுனியா போன்ற நகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். இவ்வாறு சென்றால் மாலை 6 மணியளவில் வீட்டிற்கு வந்து விடுவேன். இரண்டு ஆண்கள் வந்து விட்டால் வீட்டிற்கு வருவதற்கு மறுநாளாகிவிடும்.

இவ்வாறு ஆண்களுடன் செல்கின்ற விடயம் எனது அம்மாவிற்கு தெரியும் . ஆனால் தந்தைக்கு தெரியாது. அதே போன்று நான் கல்வி பயின்ற பாடசாலையில் குறிப்பிட்ட ஓரிரு ஆசிரியர்கள் என்மீது சந்தேகப்பட்டிருந்தார்கள்.

ஆனால் அவர்கள் என்னிடம் கேட்கவோ அது குறித்து விசாரிக்கவோ இல்லை. எவ்விதமான கட்டுப்பாடுகளோ கண்டிப்புகளோ எனக்கு இருக்க வில்லை. கிடைக்கும் பணத்தில் தம்பி தங்கைகளுக்கும் வீட்டுத் தேவை களுக்கும் செலவிட்டேன். அம்மாவிற்கும் கொடுத்தேன். நாளுக்கு நாள் என்னை அழைத்துச் செல்லும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 11 ஆம் வகுப்பு கல்வியுடன் பாடசாலை செல்வதை நிறுத்திக்கொண்டு முழு நேரமும் பணத்திற்காக ஆண்களுடன் செல்வதை வழமையாக்கிக் கொண்டேன்.

இவ்வாறான தீரா நோய்கள் மற்றும் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலை , உறவினர்களை பிரிந்திருக்கும் அவலம் ஏற்படும் என்பதை அன்று நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று எனது விதி தலைகீழாகியுள்ளது.
எனது வாழ்வில் மறக்க முடியாத நாள் அன்று….

ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் வழமைபோல் எனது வீட்டிற்கு அருகில் வந்து பணத்தைக் காட்டினார். காலையில் 9.30 மணி இருக்கும் . வீட்டில் யாரும் இல்லை. முல்லைத்தீவு போவோம் என்று அழைத்தான். அவசரமாக வேறு ஆடை அணிந்து கொண்டு அந்த ஆணுடன் சென்றேன். 11.45 மணியிருக்கும் முல்லைத்தீவு நகருக்குச் சென்று இறங்கினோம். என்னை அழைத்து வந்தவர் தான் முன்னே முதலில் செல்வதாகவும் அவரை பின்தொடருமாறும் கூறினார் . அதன் பிரகாரம் நானும் அவரை தொடர்ந்தேன்.

குறித்த விடுதிக்கு அருகில் சற்றும் எதிர்பாராதவாறு பொலிஸ் உத்தியோகஸ்தர் இருந்தார். அவர் என்னை நன்றாக பார்த்தார். எங்கே ? போகின்றீர்கள் என என்னிடம் கேட்டார். அவருடன் போகின்றேன் என்றேன். எங்கே ? என்றார். அங்கு என்றேன். ஏன் ? என்றார். ஆண்கள் அழைத்து செல்வார்கள் , நான் போவேன் பணம் தருவார்கள் என்றேன்.

பின்னர் அவர்கள் என்னை பிடித்து கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று நீதி மன்றில் ஆஜர்படுத்திய பின்னர் இங்கு அனுப்பப்பட்டேன். கடந்த ஒன்றரை வருட காலத்திற்கும் அதிகமான காலங்களாக இந்த மறுவாழ்வு இல்லத்தில் வாழ்கின்றேன். தனிமையின் உச்ச கொடூரங்களைப் பல சந்தர்ப்பங்களில் அனுபவித்துள்ளேன். விடுவிக்கப்படுவேனா ? அதன் பின்னரா வாழ்க்கை என்பவை தொடர்பில் சிந்திக்கவே முடியாதுள்ளது.

அதற்கு ஆழமான காரணம் உள்ளது. அதாவது நவலக் ஷி என்ற இந்த பெண் ஒரு இளம் தாய் என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன். அறியாத வயதில் பாலியலை தொழிலாக கொண்டிருந்தார். பள்ளிக்குச் செல்லும் போதும் கூட பணத்திற்காக ஆண்களுடன் சென்றதாக குறிப்பிட்ட நிலையில் ஏன் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது என்ற கேள்வி கூறிய வாளாக காணாப்பட்டாலும் அதற்கான விடைகள் சமூகத்தைச் சார்ந்து சிதறிக்கிடக்கின்றன.
பணத்திற்காக ஆண்களுடன் செல்வதும் பள்ளிக்குச் செல்வதுமாக இருந்த நவலக் ??ஷிவாழ்வில் திருமணம் என்ற பகுதியும் காணப்பட்டது .

வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக தாயுடன் நவலக் ஷி செல்வது வழக்கம் . அந்த வியாபார நிலையத்தில் வேலை செய்த இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு அது பதிவுத் திருமணம் வரை சென்றது. அதன் பலன் ஒரு மகனுக்கு தாயாகும் நிலைமை நவலக் ஷிக்கு ஏற்பட்டது.

ஆனால் இந்த திருமண பந்தம் நீடிக்க வில்லை. பல ஆண்களுடன் நவலக் ஷி தொடர்புகளை வைத்துள்ளார். பணத்திற்காக செல்கின்றார் என்பதை அறிந்த பின்னர் திருமணம் செய்து கொண்ட இளைஞனும் விட்டுச் சென்றான். ஏற்கனவே வீட்டில் வறுமையின் சுமைகள் போதாதற்கு குழந்தை வேறு. செலவிற்கு பணம் தேவை . அதனை எளிதில் எவ்வாறு அடைவது ?

ஆண்களுடன் செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற குறுகிய வட்டத்திற்குள்ளான தீர்மானத்தினால் முழு பாலியல் தொழிலாளியானால் நவலக் ஷி…
அதன் விளைவாக இன்று கொடிய பாலியல் சார் நோயினால் சிக்கி அனைத்தையும் இழந்தவளாக வாழ்கின்றார். தனது தாயின் பராமரிப்பில் உள்ள தனது மகனுடன் இறுதிவரை வாழ வேண்டும். மீண்டும் குடும்ப வாழ்விற்கு திரும்ப வேண்டும் என்பதே இந்த நவலக் ஷியின் எதிர்பார்ப்பாகும்.

இதே போன்று எத்தனையோ பெண்களும் ஆண்களும் பாலியல் சார் நோய்களில் சிக்குண்டு மரணிக்கின்றனர். அதே போன்று முழு சீவிய காலத்திலும் தனிமைப்படுகின்றனர். சந்தர்ப்பம், பாதுகாப்பற்ற சூழல் என்பன எந்தளவு குழந்தைகளை தவறான வழிகளுக்கு கொண்டு செல்கின்றதோ அதை விட பன்மடங்கு பெற்றோர்களின் கவனயீனத்தினால் அறியா வயதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்த வரையில் பாரம்பரிய பண்பாடுகள் மற்றும் ஒழுக்கமிக்க கட்டுக்கோப்பான மக்கள் வாழும் நாடாகும். இங்கு எவ்வாறு முறையற்ற பாலியல் ரீதியிலான நோய்கள் ஏற்படுகின்றது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று பாலியல் சார்ந்த நோய்கள் உலகிலும் எமது நாட்டிலும் தீவிரமாகப் பரவி வருகின்றது. இதில் மிகவும் கொடுமையானது என்றால் அது எயிட்ஸ் நோயாகும் . பிறக்கும் குழந்தைக்கும் தாய் வழியாக ஏய்ட்ஸ் தொற்றுகின்றமை மிகவும் மோசமானதாகும்.

இன்று சர்வதேச எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்ப்படுகின்ற நிலையில் இலங்கையில் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இத் தரவு பதிவேற்றங்களின் படி கடந்த 2015 ஆம் ஆண்டு அதிகளாவான எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 235 நோயாளிகள் புதிதாக இனங்காணப் பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் இறந்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் வரையிலான தரவுகளின் படி 196 பேர் புதிய எய்ட்ஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 34 பேர் இறந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு இறுதி வரையான காலப்பகுதி வரை 1,021,663 பேர் வரையானவர்கள் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

2015 ஆம் ஆண்டு தரவுகளுக்கமைய மொத்த பாதிப்படைந்தவர்களில் ஆண், – பெண் உறவின் மூலம் 49 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 115 பேர் ஓரினச் சேர்க்கையாளர்களாக 37 சதவீதமானோர் உள்ளனர். 87 பேருக்கு தாயிடமிருந்து 7குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் மூலமாகவும் பரப்பப்பட் டுள்ளமை , பதிவாகியுள்ளது. இத்தரவுகளின் படி 14 தொடக்கம் 50 வயது வரையானவர்களே அதிகமாகப் பாதிப்படைந்துள்ளனர்.

தாயின் மூலம் பரவும் முறை அதிகமாக இருந்த நிலை மாறி தற்போது புதிய நோயாளர்களாக 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் உருவாகி வரும் நிலை அதிகமாகவே காணப்படுகின்றது. இவை பாதுகாப்பற்ற பாலியல் தொழிலாளர்கள் மூலமே பரவுவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. கடந்த 10 வருட பாதிப்பு தரவுகளின் படி பெண்களின் பாதிப்பு விகிதம் சீராக இருக்கின்றது. ஆண்களின் விகிதம் மிக அதிகமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த தரவுகளுக்குள் ஒரு புள்ளியாகவே நவலக் ஷியின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. ஆகவே மற்றுமொரு நவலக் ஷி… உருவாகாமல் இருக்க சமூகம் பொறுப்புடன் செயற்படுவதும் அதற்கான வழிகாட்டலும் இன்றைய இளைய சமூகத்தினருக்கு இன்றியமையாத ஒன்றாகும்.