Home பாலியல் ஆண்குறிப் புற்றுநோய் – காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுத்தல்

ஆண்குறிப் புற்றுநோய் – காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுத்தல்

125

ஆண்குறிப் புற்றுநோய் என்பது ஓர் அரிய வகைப் புற்றுநோய் ஆகும். இது ஆண்குறியின் தோலைப் பாதிக்கிறது அல்லது ஆண்குறிக்குள் இருக்கும் பகுதிகளில் உருவாகிறது.

ஆண்குறிப் புற்றுநோயின் வகைகள் (Types of penile cancer)
ஆண்குறிப் புற்றுநோயின் வகையானது, எந்த வகை செல்லிலிருந்து கட்டிகள் உருவாகின்றன என்பதைப் பொறுத்தது.

செதில் (ஸ்கோமாஸ்) செல் ஆண்குறிப் புற்றுநோய் : இதுவே பெரும்பாலும் காணப்படும் ஆண்குறிப் புற்றுநோய் வகையாகும் (>90%). இது சருமத்தின் மேற்பரப்பில் காணப்படும் செல்களில் உண்டாகிறது.
கார்சினோமா இன் சிட்டு (CIS): இது ஒரு குறிப்பிட்ட வகை செதில் செல் ஆண்குறிப் புற்றுநோயாகும். இந்த வகையில், ஆண்குறியின் தோலில் மட்டுமே புற்றுநோய் செல்கள் இருக்கும், ஆண்குறியின் உட்பகுதிகளில் பாதிப்பு இருக்காது.
அடினோகார்சினோமா : இந்த வகைப் புற்றுநோய், ஆண்குறியில் உள்ள சுரப்பி சார்ந்த செல்களில் உருவாகின்றன.
மெலனோமா: சருமத்திற்கு நிறத்தை அளிக்கும் மெலனோசைட் எனும் செல்களில் உருவாகிறது.
காரணங்கள் (Causes)
ஆண்குறிப் புற்றுநோய் உண்டாவதற்கான துல்லியமான காரணத்தை பெரும்பாலும் கண்டறிய முடிவதில்லை. சில குறிப்பிட்ட ஆபத்துக் காரணிகள், இந்நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது, அவற்றில் சில:

வயது: வயதானவர்களுக்கு அதிகம் காணப்படுகிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இந்தப் புற்றுநோய் பரவலாகக் காணப்படுகிறது, 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இது அரிதாகவே உள்ளது.
ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (HPV) தொற்று: இனப்பெருக்க உறுப்பில் மருக்களை உண்டாக்கக் காரணமான HPV வைரஸ், ஆண்குறிப் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை அதிகரிப்பதாகத் தெரிகிறது. ஆண்குறிப் புற்றுநோய் கொண்ட ஆண்களில் சுமார் 47% பேருக்கு HPV நோய்த்தொற்று உள்ளது.
புகைபிடித்தல்: சிகரெட் புகையில் இந்த நோய் பெறும் ஆபத்தை அதிகரிக்கக்கூடிய வேதிப்பொருள்கள் உள்ளன.
ஃபிமோசிஸ் – இறுக்கமான ஆண்குறி மொட்டு முனைத்தோல் இருப்பது, மொட்டுத் தோலழற்சி போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதும், சில வகை ஆண்குறிப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.
அறிகுறிகள் (Symptoms)
ஆண்குறிப் புற்றுநோய் என்பது அரிய நோயாகும், இதனைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டால் சிகிச்சை வெற்றியடைவதன் வாய்ப்பு குறையக்கூடும். புற்றுநோய் அல்லாத பல பிற பிரச்சனைகள் இருந்தாலும், இதே போன்ற அறிகுறிகள் இருக்கலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்:

ஆண்குறியின் மீது பொறி பொறியாக தென்படுவது அல்லது புண் காணப்படுவது, பொதுவாக மொட்டு அல்லது மொட்டுத் தோலில் காணப்படும்.
ஆண்குறியின் தோல் தடித்தல்.
முனைத் தோலுக்கு அடியில் சிவந்த, வெல்வெட் போன்ற தோல் தடிப்பு
மொட்டுத் தோலுக்கு அடியில் சிறு சிறு கட்டிகள்
ஆண்குறியின் முனையில் சீரற்ற வீக்கம்
ஆண்குறியின் தோலில் நிற மாற்றங்கள்
முனைத் தோலுக்கு அடியில் திரவங்கள் அல்லது திரவம் போன்ற பொருள்கள் வெளியேறுதல் (துர்நாற்றத்துடன்)
ஆண்குறியின் முனையிலோ அல்லது மொட்டுத் தோலுக்கு அடியிலோ இரத்தம் கசிதல்
ஆண்குறித் தண்டு அல்லது முனையில் வலி
முனைத் தோலுக்கு அடியில் அல்லது ஆண்குறியின் பிரதான பகுதியில், நீலம்-பழுப்பு கலந்த தட்டையான கட்டிகள் (சீரற்ற அல்லது வளரக்கூடியவை) அல்லது குறிகள்
மேலே குறிப்பிட்ட அறிகுறிகளுடன், கவட்டைப் பகுதியில் வினோதமான கட்டி போன்றவை உருவாவது
நோய் கண்டறிதல் (Diagnosis)
மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை: உங்கள் மருத்துவர் உங்கள் கடந்த கால மருத்துவ விவரங்களை விவரமாகக் கேட்டறிவார், பிறகு ஆண்குறியில் ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா எனப் பார்த்து ஆய்வு செய்வார். ஆண்குறிப் புற்றுநோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டால், திசுப்பரிசோதனை, படமெடுத்தல் சோதனைகள் உள்ளிட்ட பிற பரிசோதனைகள் செய்யப்படலாம்.
திசுப்பரிசோதனை: வித்தியாசமாகக் காட்சியளிக்கும் பகுதியிலிருந்து திசுவின் ஒரு சிறு பகுதி அகற்றப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு நுண்ணோக்கியில் வைத்து, புற்றுநோய் செல்கள் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படும்.
படமெடுத்தல் சோதனைகள்: புற்றுநோய் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளதா எனக் கண்டறிவதற்காக, கமப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன் (CT ஸ்கேன்), மேக்னட்டிக் ரெசொனன்ஸ் இமேஜிங் (IMR), அல்ட்ராசவுண்ட் சோதனை போன்ற சோதனைகளும் செய்யப்படலாம்.
சிகிச்சை (Treatment)
பாதிக்கப்பட்ட பகுதியின் அளவு மற்றும் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பவற்றைப் பொறுத்து, சிகிச்சை முடிவு செய்யப்படும்.

தொடக்க நிலை (Early stage)

கார்சினோமா இன் சிட்டு (CIS) வகை புற்றுநோயாக இருந்தால், தோல் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கும், அப்போது கீமோதெரபி கிரீம் அல்லது லேசர் அறுவை சிகிச்சை மூலம் தோலின் பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்படும். பிறகு, தோல் மாற்றப்படும் (ஸ்கின் கிராஃப்ட்) செய்யப்படும்.

முற்றிய நிலை (Advanced stage)

முற்றிய நிலைகளில், ஆண்குறிப் புற்றுநோய்க்கு பின்வருபவை முக்கியமான சிகிச்சை அணுகுமுறைகளாகும்:

அறுவை சிகிச்சை: பாதிக்கப்பட்ட தோல் பகுதி அல்லது ஆண்குறியின் பகுதி அல்லது முழு ஆண்குறியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படும்.
ரேடியோதெரபி: புற்றுநோய் செல்களைக் கொல்ல கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும்.
கீமோதெரபி: புற்றுநோய் செல்களைக் கொல்லும் மருந்துகள் (வேதிப்பொருள்கள்) பயன்படுத்தப்படும்.

தடுத்தல் (Prevention)
ஆண்குறிப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகளைக் குறைக்க சில நடவடிக்கைகளை எடுக்கலாம், அவற்றில் சில:

புகை பழக்கத்தை விடுவது: இது ஆண்குறிப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
ஆண்குறியை சுத்தமாக வைத்துக்கொள்வது: ஆண்குறியைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம், இதனால் ஆண்குறிப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும். சிறுவயதில் மொட்டு முனைத்தோல் அகற்றப்பட்டவர்களுக்கு இது இன்னும் எளிது. மொட்டு முனைத் தோல் அகற்றப்படாதவர்கள், தினமும் முனைத் தோலை பின்னுக்கு இழுத்து ஆண்குறியை நன்கு கழுவ வேண்டும்.
பாதுகாப்பான பாலியல் பழக்கங்களை வைத்துக்கொள்ள வேண்டும். HPV நோய்த்தொற்று வராமல் தடுக்க ஆணுறை பயன்படுத்தலாம்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
ஆண்குறியில் புண்கள், கொப்புளங்கள், வெண்ணிறத் திட்டுக்கள், மருக்கள் அல்லது வித்தியாசமாகக் காட்சியளிக்கும் பகுதிகள் இருந்தால் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். பெரும்பாலும் இவை ஏதேனும் நோய்த்தொற்றினால் உருவாகியிருக்கும், புற்றுநோயாக இருக்காது.

புற்றுநோயாக இருந்தால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அகற்றுவது எளிது, ஆண்குறி சேதம் குறைவு அல்லது சேதத்தையே தவிர்க்கவும் வாய்ப்புள்ளது. முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால், ஆண்குறியின் பகுதி அல்லது முழுமையாக அகற்றப்பட வேண்டியிருக்கலாம். மேலும் பரவாமல் தடுக்க, இன்னும் கடினமான சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கலாம் அல்லது உயிருக்கே ஆபத்தானதாகிவிடலாம்.