பிரிட்டனைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆண் விபசாரியாக தொழில்புரிந்த குற்றச்சாட்டில் பொலிஸ் திணைக்களத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 39 வயதான டேனியல் மோஸ் எனும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் சசெக்ஸ் பிராந்தியத்தில் ஹாஸ்டிங்ஸ் நகரில் கடமையாற்றியவர்.
கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து அவர் சுகயீன விடுமுறையில் இருந்தார். மன அழுத்தம் தொடர்பான பாதிப்பின் காரணமாக தனக்கு விடுமுறை தேவை என அவர் கோரியிருந்தார். ஆனால், சுகயீன விடுமுறையில் இருந்தபோது டேனியல் மோஸ் ஆண் விபசாரியாக பணியாற்றுவதற்கு முன்வந்தமை அம்பலமாகியது. இணையத் தளமொன்றில் இதற்கான விளம்பரமொன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
டேனியல் மோஸின் காதலி ட்ரேஸியுடன் இணைந்தும் வாடிக்கையாளருடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்குத் தயார் என விளம்பரம் செய்திருந்தமை தெரிய வந்தது. இதையடுத்து, டேனியல் மோஸிடம் விசாரணை நடத்திய சசெக்ஸ் பொலிஸ் அதிகாரிகள், கடந்த வாரம் அவரை பதவியிலிருந்து நீக்கினர்.
பொலிஸாரின் தொழிற்சார் நெறிமுறைகள் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி நிக் வெய்ன்ரைட் இது தொடர்பாக கூறுகையில், “பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் சேவையின் மதிப்பை குறைக்கும் வகையிலோ அல்லது பொலிஸார் மீதான நம்பிக்கையை பாதிக்கும் வகையிலோ செயற்படக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.