Home காமசூத்ரா திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல்

திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல்

76

திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு Sexless Marriage என்ற பெயர் வேறு வைத்துத் தொலைத்திருக்கிறார்கள்.
அளவில்லா காதலையும், எண்ணற்ற பரிசுகளையும் பகிர்ந்துகொண்டு காதலர் தினத்தை
கொண்டாடித்தீர்க்கும் ஜோடிகளும்கூட திருமணத்திற்குப் பிறகு அதே தீவிரத்துடன் அன்பை பரிமாறிக் கொள்வதில்லை என்றும் பொட்டிலடித்தால் போல் சொல்கிறது பாலியல் நலம் சார்ந்த ஆய்வறிக்கைகள்.

சர்வதேச அளவிலேயே குழந்தை பிறப்பு விகிதம் பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் ஜப்பான், வடகொரியா போன்ற பல நாடுகளில், ‘நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அரசாங்கமே பொதுமக்களிடம் கோரிக்கை வைக்கும் நிலை உண்டாகிவிட்டது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவிலேயே டேட்டிங் பயிற்சிகள் எல்லாம் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் வந்துவிட்டன. சர்வதேச அளவிலேயே இத்தகைய நிலை என்றால் தென்னிந்தியர்களின் தாம்பத்ய வாழ்க்கை பற்றிய புள்ளிவிபரங்கள் இன்னும் அதிகம் யோசிக்க வைக்கின்றன.
‘மோகம் 30 நாள்ஸ ஆசை 60 நாள்’ என்ற பழமொழி கண்கூடாக இன்று நிரூபணமாகியிருக்கிறது. ஜப்பானின் Family planning association மேற்கொண்ட சர்வேயில் திருமணமான ஜோடிகளில் 50 சதவீதம் பேர் மாதக்கணக்கில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதில்லை என்பது தெரியவந்துள்ளது. Sexless marriage என்னும் இந்த நிலை வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் அந்நாட்டு மக்களின் வேலை நேரம். பணிச்சுமையினால் வரும் மன அழுத்தம் ஜப்பான் மக்களை அழுத்துகிறது. தன் நாட்டு மக்களின் வேலைநேரத்தை குறைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது அந்த அரசு.கனடா நாட்டில் 2016-ல் மேற்கொண்ட சர்வேபடி அந்நாட்டின் திருமணமான தம்பதிகளில் 20 சதவீதத்தினர் பாலியல் உறவில் இல்லை என்று மதிப்பிட்டிருக்கிறது.

சீன நாட்டின் ஹாங்காங் நகரில் மேற்கொண்ட ஆய்வின்படி, திருமணமான தம்பதிகளில் 31.6 சதவீதம் பேர் பாலியல் உறவில்லா திருமண வாழ்க்கையை நடத்துவதாக சொல்லப்படுகிறது. 15 முதல் 20 சதவிகித தம்பதியினர் பாலியல் உறவில் இல்லை என அமெரிக்காவின் News Week இதழ் 2017-ம் வருடம் மார்ச் மாதத்தில் மேற்கொண்ட சர்வேயில் மதிப்பிட்டிருக்கிறது.
50 வயதிற்கு மேற்பட்ட தம்பதிகளில் 10 சதவீதத்தினர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் பாலியல் உறவு வைத்துக் கொள்ளவில்லை எனவும், 40 வயதுக்குட்பட்ட தம்பதிகளில் 20 சதவீதத்தினர் ஒரு வருடத்தில் ஒன்றிரண்டு முறை மட்டுமே பாலியல் உறவு கொள்வதாகவும் இந்த இதழின் ஆய்வறிக்கை சொல்கிறது.

இந்தியாவின் நிலை என்ன?

கடந்த 2013-ம் ஆண்டு ஒரு தேசிய பத்திரிகை நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் திருமணமான ஜோடிகளில் 20 சதவீதம் பேர் மட்டுமே வாரத்தில் ஒரு தடவைக்குமேல் மட்டுமே பாலியல் உறவு வைத்துக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. மற்ற 80 சதவீதத்தினரின் பெரும்பகுதியினர் பாலியல் இழப்பு அல்லது பாலியல் உறவற்ற திருமண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது இந்த சர்வே.

அதன்பின், 2015-16ம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS) இந்தியர்களின் பாலியல் வாழ்வு குறித்த சில சுவாரஸ்யமான முடிவுகளை வெளியிட்டது. அதிக அளவில் பாலியல் உறவு வைத்துக் கொள்வதில், வட இந்தியர்கள், தென்னிந்தியர்களை பின்னுக்குத் தள்ளுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

குறிப்பாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் போன்ற வடஇந்திய மாநிலங்கள் வாழ் இந்தியர்கள் இந்தவிஷயத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு மையம், சுமார் இரண்டரை லட்சம் 15-54 வயதுள்ள ஆண், பெண் இருபாலரிடத்திலும் சுய தகவல்கள் சேகரித்ததில், வடஇந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே தென்னிந்தியர்களைவிட பாலியல் செயலில் மிக ஆற்றலுடன் செயல்படுவதாக முடிவுக்கு வந்தது.

அடுத்து, பாலியல் செயல்பாட்டின் அடிப்படையில், 50 சதவீதத்துடன் குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரா, உத்திரப்பிரதேசம், பீஹார், ஹிமாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் இரண்டாவது இடத்தைப் பிடிக்கின்றன.

தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திராவைத் தவிர்த்து தமிழ்நாடு, கர்நாடாகாவைவிட கேரளா பாலியல் உறவு விஷயத்தில் சற்றே சிறப்பாக உள்ளது. ஜம்மு, நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாய் இருக்கிறது. இந்தியாவிலேயே அருணாச்சல பிரதேசம்தான் 29.2 சதவீதத்தில் மிகமோசமான செயல்திறனில் இருப்பதாக இந்த ஆய்வு முடிவு சொல்கிறது. வட இந்தியர்கள் பாலியல் உறவில் கில்லாடிகளாக இருந்தாலும், உலகின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில், இந்தியர்களின் பாலியல் செயல்பாடு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது.
உலகம் முழுவதும் 30 நாடுகளில் வாழும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்த, Men’s Health இதழ் 2017-ல் மேற்கொண்ட ஒரு சர்வேபடி, மற்ற நாட்டு மக்களோடு ஒப்பிடுகையில், ஓர் இந்திய ஆண் வாரத்தில் ஒரு தடவை மட்டுமே (பல சமயங்களில் அதுவும் இல்லாத அளவுக்கு) பாலியல் உறவு வைத்துக் கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 50 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள், ‘அதெல்லாம் வருஷக்கணக்காச்சுப்பா’ என்கிறார்கள். உலகுக்கே ‘காமசூத்ரா’ என்ற வழிகாட்டியை வழங்கிய இந்தியா இன்று, அதே மன்மதக்கலையை சொன்னால்தான் தெரியும் என்ற நிலைக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவுகள் பற்றி சிறுநீரகம் மற்றும் ஆண் மலட்டுத்தன்மை சிறப்பு மருத்துவரான கபிலனிடம் பேசினோம்ஸ
‘‘2015-16-க்குப்பின் பொருளாதார ரீதியிலும், சமூகத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் நிச்சயம் இந்த சதவீதம் மேலும் எகிறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிகரித்துவரும் திருமணமுறிவு வழக்குகளே இதற்குச் சான்று.உலகமயமாக்கலுக்குப்பின் அனைத்து நிறுவனங்களிலுமே வேலையாட்களின் பணிநேரம் அதிகரித்துவிட்டது.

8 மணி நேரம் சராசரி வேலை நேரம் என்றாலும் பெரு நகரங்களில் ஒருவர் வீடு வந்து சேர கூடுதலாக 2 மணி நேரம் போக்குவரத்தில் சென்றுவிடுகிறது. இதில், பெரும்பாலான நிறுவனங்கள் சனிக்கிழமைகளிலும் அலுவலகம் வைத்துவிடுகிறார்கள். அதன்பின் குடும்பப் பொறுப்பு இருக்கிறது. இத்தகைய நெருக்கடியில் தனிப்பட்ட ஒருவருக்கான ஓய்வு நேரமே மிகக்குறைவு எனும்போது, எங்கிருந்து காதலிப்பதற்கு நேரம் கிடைத்துவிடப் போகிறது.

அதுமட்டுமல்ல, அவனது உடலின் முழு ஆற்றலையும் அலுவலகமே உறிஞ்சிவிடுவதால், ஒரு ஆணால் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடிவதில்லை. தற்போதைய பெண்கள் மிகவும் முன்னேறிவிட்டார்கள். தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதாலேயே திருமண முறிவுகளும், சட்டத்திற்கு புறம்பான உறவுகளும் அதிகரித்துவிட்டது.

இந்தப் பிரச்னையை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் அதன் பணியாளர்களின் வேலைச்சுமையை குறைத்தாக வேண்டும் அல்லது பணிச்சுமையை தானே குறைத்துக் கொள்ளும் வழிவகைகளை ஊழியர்கள் திட்டமிட்டாக வேண்டும். ஏற்கெனவே சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அலுவலக பணி நேரத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன.

ஆணின் நிலை இவ்வாறென்றால், பெண்ணின் நிலை வேறு. முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்களில் பெரியவர்கள் பேரன், பேத்திகளை பார்த்துக் கொண்டு, சிறியவர்களை சந்தோஷமான வாழ்க்கைக்கு வழியமைத்துக் கொடுப்பார்கள். இன்று குழந்தைகளின் கல்வி, தன்னுடைய அலுவலக வேலை, வீட்டு வேலை என பல்வேறு சுமையைச் சுமக்கும் பெண்களுக்கு காதல் கசந்துதான் போய்விட்டது.

கூட்டுக் குடும்பங்களில்தான் தனிமை ப்ரைவஸி இருக்காது என்பார்கள். ஆனால், இளம் தம்பதிகளுக்கான நேரத்தை ஒதுக்கித் தருவதிலும், அவர்களுக்குள் இருக்கும் பிணக்குகளை தீர்ப்பதிலும் மிகவும் புத்திசாலித்தனமானவர்களாக அந்த காலத்து பெரியவர்கள் இருந்தார்கள். இன்று தனிக்குடித்தனமாக, அதிக பிரைவசியுடன் வாழ்வதாக நினைத்தாலும் நிலைமை தலைகீழ். தம்பதிகள் சுதந்திரமாக சண்டை போட்டுக்கொண்டு எளிதில் பிரிந்துவிடவும் மட்டுமே இந்த பிரைவஸி உதவுகிறது’’ என்கிறார் கவலையுடன்!