வாழ்க்கையில் அவ்வப்போது இன்பகரமான நிகழ்வுகள் இருந்தால்தான் உற்சாகம் நீடிக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். வாழ்க்கைத்துணையிடம் ஏதாவது ஒரு விசயத்திற்கு சண்டை போட்டிருக்கலாம். சில விசயங்களில் கோபித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் நம் துணையை மகிழ்விக்க சின்ன சின்ன சர்ப்ரைஸ் சந்தோசங்களை தருவது அவசியம். அதற்கான ஆலோசனைகளை கூறியுள்ளனர் நிபுணர்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
ஜோடியாக ஒரு போட்டோ
நீங்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகான ஒரு போட்டோவை உங்கள் டெஸ்க்டாப்பில் வால்பேப்பராக போடுங்களேன். உங்கள் துணைவி கம்யூட்டரை ஆன் செய்தவுடன் அந்த போட்டோவை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப்போவார்.இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகான போட்டோக்களை சேகரித்து சிடி யாக மாற்றித்தரலாம். அதேபோல் உங்கள் துணைவிக்கு பிடித்த ரொமான்ஸ் பாடல்களை பதிவு செய்து பரிசளிக்கலாம்.
பால் நிலவொளியில் பரிசு
பவுர்ணமி தினத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அழகான கடற்கரைக்கு துணைவியை அவுட்டிங் அழைத்துச் செல்லுங்கள். நிலவொளியில் உங்கள் துணைவியின் கண்கள் இன்ப அதிர்ச்சியில் மின்னுவதை கண்டு ரசியுங்களேன். அன்றைய தினம் எந்த தொந்தரவும் கூடாது. செல்போன், புத்தகம், டிவி என எந்த தொந்தரவும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டும் சந்தோச தருணங்களை அனுபவியுங்களேன்.
எதிர்பாராத விருந்து
இது கணவன், மனைவி இருவருக்குமே பொருந்தும் திடீரென ஒரு நாள் மாலையில் தொலைபேசியில் அழையுங்கள். அவர் வீட்டில் இருந்தாலும் சரி, அலுவலகத்தில் இருந்தாலும் சரி… உடனே கிளம்பி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொல்லுங்கள்.
அவர் வந்ததும், அங்கிருக்கும் ஓட்டலில் முன்பதிவு செய்யப்பட்ட டேபிளுக்கு அவரை அழைத்துச் சென்று அவர் விரும்பிய உணவுகளை வாங்கிக் கொடுக்கலாம். இதையே கொஞ்சம் மாறுதலாக ஒரு திரையரங்குக்கு அழைத்துச் செல்லலாம் அல்லது மனதிற்குப் பிடித்த கோயிலுக்கு அழைத்துச் சென்றுஇறைவனை தரிசிக்க வைக்கலாம்.
இந்த இன்ப அதிர்ச்சியில் உங்களவர் குளிர்ந்து போவார். வாரத்தில் ஓரிரு நாட்கள் அவர்களுக்குப் பிடித்த பூக்களை வாங்கி சர்ப்ரைசாக டிபன்பாக்ஸில் வைத்துச் செல்லலாமே. இதனால் டிபன் பாக்சினை திறக்கும் போது பூக்களை கண்டவுடன் உங்கள் துணைவியின் முகத்தில் புன்னகை பூக்குமே.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தாலே போதும்… உங்கள் இல்லற வாழ்க்கையில் வசந்தம் வீசும். திருமணமான புதிதில் என்றால் இது சாத்தியப்படும். ஆனால், குழந்தை இருக்கும் வீடுகளில் இது கொஞ்சம் சிக்கலான காரியம்தான். ஆனால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.