Home ஆண்கள் ஆண்களின் ஆண்குறி மொட்டு இறுக்கமாக இருக்கும் பிரச்சனை

ஆண்களின் ஆண்குறி மொட்டு இறுக்கமாக இருக்கும் பிரச்சனை

474

ஆண்கள் ஆண்குறி:ஃபிமோசிஸ் என்பது என்ன? (What is phimosis?)
ஆண்குறியின் மொட்டு முனைத்தோலை மொட்டிலிருந்து பின்னோக்கி இழுக்க முடியாதபடி தோல் இறுக்கமாக இருப்பதையே ஃபிமோசிஸ் என்கிறோம். பொதுவாக இந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கும், ஓரிரு வயதான குழந்தைகளுக்கும் காணப்படுகிறது. இன்னும் சற்று அதிக வயதுள்ள குழந்தைகளுக்கு, ஆண்குறித் தோலில் ஏதேனும் அடிபட்டிருந்தால் இந்தப் பிரச்சனை வரக்கூடும். அதன் பிறகு எந்த வயதிலும் இந்தப் பிரச்சனை ஒருவருக்கு வரக்கூடும்.
பொதுவாக மொட்டு முனைத்தோல் அகற்றப்படாத ஆண்களுக்கே ஃபிமோசிஸ் பிரச்சனை வருகிறது, ஆனால் மொட்டு முனைத்தோல் அகற்றப்பட்ட பிறகு மொட்டைச் சுற்றியுள்ள தோல் கடினமாவதாலும் இந்தப் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. சிறுநீர் கழிப்பதில் சிரமம், ஆண்குறி மொட்டு சிவத்தல், வீங்குதல் மற்றும் அப்பகுதியில் எரிச்சல் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இல்லாதபட்சத்தில், இதனால் பிரச்சனை எதுவும் இல்லை.
காரணங்கள் (Causes)
ஃபிமோசிஸ் பிறக்கும்போதே இருக்கலாம் அல்லது சுகாதாரமின்மை அல்லது பலவந்தமாக மொட்டு முனைத்தோலை பின்னுக்கு இழுத்தல் போன்ற காரணங்களால் பிற்காலத்திலும் வரக்கூடும்.
ஃபிமோசிஸ் உருவாகும் காரணங்களின் அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
உடல்ரீதியான ஃபிமோசிஸ்: பெரும்பாலும் பிறக்கும் ஆண்குழந்தைகளில் சுமார் 96% குழந்தைகள், இயல்பாகவே பின்னோக்கி இழுக்க முடியாத முனைத் தோலுடனே பிறக்கிறார்கள். மொட்டு முனைப்பகுதியின் தோல் குறுகியதாக இருப்பதாலும், மொட்டு முனைப் பகுதியையும் முனைத் தோலையும் இணைக்கும் குறுகிய தோல் திசு இருப்பதாலும் மொட்டு முனைப் பகுதியும் தோலும் இப்படி ஒட்டியவாறே இருக்கிறது.உடல் ரீதியான ஃபிமோசிஸ் என்பதை பிறவி ஃபிமோசிஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த வகை ஃபிமோசிஸ் வயது அதிகரிக்கும்போது தானாகவே சரியாகிவிடும், சுமார் 18 வயது அல்லது அதற்குப் பிறகு சரியாகிவிடும். உட்புற எபித்தீலியத்தின் கெரட்டின் படிவாலும் ஆண்குறி விறைப்பதினாலும் தானாக சரியாகிறது.
பேத்தாலஜிக்கல் ஃபிமோசிஸ்: இந்த வகை ஃபிமோசிஸ் உருவாக வேறு ஏதேனும் மறைந்திருக்கும் காரணி காரணமாக இருக்கும், அந்தக் காரணத்தால் மொட்டு முனைப் பகுதியில் வடு ஏற்படுவதால் தோல் கெட்டியாகி ஃபிமோசிஸ் வருகிறது. இதனை பெறப்படும் ஃபிமோசிஸ் என்றும் அழைக்கின்றனர். இது வரக் காரணங்கள்: சுகாதாரமின்மை, இறுக்கமாக இருக்கும் முனைத் தொலை மொட்டிலிருந்து பலவந்தமாக பின்னுக்கு இழுப்பது, மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகள் ஏற்படுதல் போன்றவை. இதற்கான பிற காரணங்களில் சில:
மொட்டு மற்றும் முனைத்தோலில் அழற்சி (பலனோப்போஸ்த்தைட்டஸ்) – இது பாக்டீரியா அல்லது பூஞ்சை நோய்த்தொற்றால் ஏற்படுகிறது.
சில சமயம், பால்வினை நோய்களாலும் இந்தப் பிரச்சனை வரக்கூடும்.
சொறி சிரங்கு, சோரியாசிஸ், சருமப் படை, திசு தடித்தல் (ஸ்கெலிரோசிஸ்) போன்ற சருமப் பிரச்சனைகளாலும் ஃபிமோசிஸ் வரக்கூடும்.
மீண்டும் மீண்டும் சிறுநீர் வடிகுழாய் உபகரணங்களைப் பொருத்துவதாலும் இந்தப் பிரச்சனை வரக்கூடும்.
வயதான ஆண்களுக்கு, அடிக்கடி ஆண்குறி விறைக்காமல் இருப்பது, தோலின் மீள்தன்மை இழக்கப்படுவது போன்ற காரணங்களால் ஃபிமோசிஸ் ஏற்படும் அபாயம் அதிகமாகிறது.
அறிகுறிகள் (Symptoms)
ஃபிமொசிசின் அறிகுறிகள்:
ஆண்குறியின் மொட்டு முனைத்தோலை மொட்டிலிருந்து பின்னோக்கி இழுக்க முடியாது
சிறுநீர் கழிப்பதில் சிரமம்
சிறுநீர் பாய்வு பலவீனமாக இருப்பது
விறைப்பின்போது வலி
சிறுநீர் கழிக்கும்போது முனைத்தோலுக்கு அடியில் சிறுநீர் சேகரமாவதால் அப்பகுதி பலூன் போல விரிவடைதல்
மொட்டு முனை அழற்சி (மொட்டு முனைத்தோல் மற்றும் மொட்டின் அழற்சி)
மீண்டும் மீண்டும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படுதல்
Tight penile foreskin (Phimosis)? Read More
நோய் கண்டறிதல் (Diagnosis)
முழுமையான மருத்துவ வரலாறு கேட்டறியப்பட்டு ஆய்வு செய்யப்படும், உடல் பரிசோதனை செய்யப்படும். முனைத்தோல் மிகச்சிறிய திறப்பைக் கொண்டிருப்பது, முனைத்தோலை மொட்டைத் தாண்டி பின்னுக்கு இழுப்பதில் சிரமம், சிறுநீர் முனைத்தோலுக்கு அடியில் சேகரிக்கப்பட்டு விரிவடைதல் போன்ற அறிகுறிகளை வைத்தும் ஃபிமோசிஸ் உறுதிப்படுத்தப்படும்.
நோய்த்தொற்று ஏதேனும் இருந்தால், திசுவின் மேற்பகுதி உரசி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும்.
சிகிச்சை (Treatment)
ஃபிமோசிஸ் பிரச்சனையைச் சமாளிப்பதற்கான அணுகுமுறையானது, வயது, பிரச்சனையின் தீவிரம், காரணம், வகை மற்றும் சம்பந்தபப்ட்ட பிற உடல் பிரச்சனைகள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படும்.
உடல்ரீதியான ஃபிமோசிஸ் உள்ள குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் சரியாகிவிடும் என்ற உத்தரவாதம் மட்டுமே கொடுக்க முடியும், அத்துடன் முறையான சுகாதாரப் பழக்கங்களை, குறிப்பாக ஆண்குறியை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி கற்றுக்கொடுப்பார்கள். உடல்ரீதியான ஃபிமோசிஸ் காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், பலவந்தமாக மொட்டு முனைத்தோலை பின்னுக்கு இழுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேற்பூச்சாகப் பயன்படுத்தும் ஸ்டிராய்டு மருந்துகள்: முனைத்தோல் இறுக்கத்திற்கு சிகிச்சையளிக்க கார்ட்டிக்கோஸ்டிராய்டுகளைக் கொண்ட கிரீம்/ஆயின்ட்மென்ட்டுகள் பரிந்துரைக்கப்படும். இந்த கிரீம்கள் முனைத்தோலை மென்மையாக்கி எளிதாக பின்னுக்கு இழுக்க உதவுகின்றன.
விரிவடையச் செய்து நீட்டுதல்: இந்த முறையில், புறநோயாளிகளுக்கான சிகிச்சை முறையாக, மருத்துவரால் முன்தோல் பின்னுக்கு இழுக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும். முனைத்தோல் ஒட்டிக்கொண்டிருக்கும் தன்மையைப் போக்க, மேற்பூச்சாகப் பயன்படுத்தும் ஸ்டிராய்டு மருந்துகளுடன் இந்த முறையையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
பிரச்சனை மிகக் கடுமையாக இருந்தால், எப்போதும் மொட்டு அழற்சி இருந்தால் அல்லது முனைத் தோல் அழற்சி இருந்தால் அல்லது பிற உடல் பிரச்சனைகளால் இந்நிலை இருந்தால், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
மொட்டு முனைத்தோல் அகற்றுதல்: அறுவை சிகிச்சை முறையில் மொட்டு முனைத் தோலின் சிறு பகுதி அல்லது முழுவதையும் அகற்றுதல். பிற சிகிச்சை முறைகளால் பலன் கிடைக்காவிட்டால், மொட்டு முனைத் தோல் அகற்றுவது உதவக்கூடும். எனினும், இதில் இரத்தப்போக்கு, நோய்த்தொற்று போன்ற ஆபத்துகள் உள்ளன.
தடுத்தல் (Prevention)
சுத்தமான பழக்க வழக்கங்கள் இருந்தால், பெறப்படும் ஃபிமோசிஸ் வராமல் தடுக்கலாம்.குளிக்கும்போது, முனைத்தோலை முழுவதுமாக பின்னுக்கு இழுத்து, தோலுக்கு அடியில் இருக்கும் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
சிக்கல்கள் (Complications)
இந்தப் பிரச்சனையால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் சில:
பாராஃபிமோசிஸ் (முனைத்தோல் மொட்டின் அடியில் சிக்கிக்கொள்ளுதல் இதனால் மொட்டுப் பகுதியில் வலியும் வீக்கமும் ஏற்படும்)
மீண்டும் மீண்டும் மொட்டு முனைத்தோல் அழற்சி ஏற்படுதல்
மொட்டு மற்றும் முனைத்தோலில் அழற்சி (பலனோப்போஸ்த்தைட்டஸ்)
சிறுநீர்க் குழாய்த் திறப்பு சிறிதாவது
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள்
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
முனைத்தோலை பின்னுக்கு இழுப்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிந்தால் அல்லது சிறுநீர் கழிக்கும்போது முனைத் தோலுக்கு அடியில் சிறுநீர் சேகரமாகி வீங்குவது போன்று தெரிந்தால், மருத்துவரிடம் செல்லவும்.
எச்சரிக்கை (Red Flags)
பின்வரும் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்:
ஆண்குறியில் அழற்சி ஏதேனும் தென்பட்டால்..
சிறுநீரில் இரத்தம் வெளிவந்தால்..
மொட்டு முனைத்தோலை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது சிரமமானால்..
விறைப்பின்போது வலி இருந்தால்..