சூடான செய்திகள்:எமது பழந்தமிழ் இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும்கூட இவை இடம்பிடித்திடுக்கின்றனவே.
எனது பெரியப்பா ஐம்பது அறுபது வருடங்களிற்கு முன்பே வேற்றுமத பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டார்.
நானும் செல்லம்மாவும்கூட காதலித்து கல்யாணம் செய்துகொண்டோம். முப்பது வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் கட்ட முன்னாடி நாங்களும் டேட்டிங் வச்சம். எங்களது டேற்றிங் சங்கதியை கேட்டியளென்றால் விழுந்து விழுந்து சிரிப்பியள். காதலித்த காலத்தில் ஒரு திரிலாக இருக்குமே என்று செல்லம்மாவின்ரை கையைக்காலை பிடித்துக்கெஞ்சி செல்லம்மாவும் நானுமாக முதல்முதலாக ஒரு சினிமா பார்க்கப்போய் தியேட்டரில உட்கார்ந்தம் கொஞ்சநேரத்தில எங்களுக்குமுன் வரிசையில் வந்து படம் பார்க்க உட்கார்ந்த ஆளைப் பார்த்ததும் எங்களுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு…..
வந்தது யார் அப்புறம் நடந்தது என்ன என்றவிடயங்களை இன்னுமொருதடவை சொல்லுறன் இன்றைய பதிவிற்கு அது முக்கியம் இல்லை. ஆனாலும் அந்தக்காலத்திலும் இதுபோன்றவிடயங்கள் இருந்தது என்பதை புரிந்துகொண்டியள் என்றால் சரி இனி விடயத்திற்குபோவம்.
இன்று எங்கள் சமூகம் டேட்டிங், காதல், திருமணத்திற்கு முன்பான பாலியலுறவு, கர்ப்பம் தரித்தல், கருச்சிதைப்பு, பாலியல் தொழில் என்பனவற்றை தமிழ் கலாசார சீரழிவாக முன்வைக்கிறது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை காலங்காலமாக மறைமுகமாக இருந்து வந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. எம்மைச்சுற்றி இருப்பவர்களிடையிலேயும் ஏன் நானும், இதைப்படிக்கிற உங்களில் பலரும்கூட இந்தவிடயங்களை செய்திருக்கிறோம், அல்லது செய்ய விரும்பியாவது இருப்போம். இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்படும் சாதக பாதகங்களை ஆராய்வதும், பாதிப்புகளை இல்லாமல் செய்வதும் இன்றைய காலத்தின் கட்டாய தேவை.
போராட்ட காலத்தில் போரை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு அப்பால் வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவகாசம் கிடைக்கவில்லை. போருக்கு பின்னான இன்றையகாலத்தில் மீண்டும் காதலும் காமமும் இந்த வெற்றிடத்தை இளையோரிடம் இலகுவாக நிரப்பிவிடுகின்றன.
தமிழ் இலங்கியங்களிலும், திரைப்படங்களிலும் காதலைப் போற்றும் எம்மவர் நிஜ வாழ்வில் காதலுக்கும், காமத்திற்கும் எதிரானவர்களாகவே இருக்கின்றனர். தான் இவற்றை செய்திருந்தாலும் தன் குழந்தைகள் செய்வதை எதிர்ப்பவர் அதிகம். நடைமுறை வாழ்வில் காதலுக்கு எதிரான போக்கே அதிகமாக இருக்கின்றது. வர்க்க, சாதி, மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள் இவ்வாறான எதிர்க்கருத்து உருவாக்கத்தை கொடுக்கின்றன. காதல் மூலம் மாறுபட்ட வர்க்க, சாதி, மத பின்னணியிலுள்ளவர்கள் இணைந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தவே நடைமுறை வாழ்வில் காதல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக பெரும்பாலான எம்மவரும் இருக்கின்றனர். ஆனால் இவ்வாறான கட்டுப்பாடுகளையும் மீறி தமது காதல் உணர்வை வெளிப்படுத்தி சில காதல்கள் வெற்றி பெறுகின்றன. பல தோல்வியடைகின்றன.
இன்றைய நவீன உலகில் காதலுக்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இதன் ஒரு வெளிப்பாடாகவே மேற்கத்தைய கலாச்சாரமான டேட்டிங் முறைகள் தமிழ் சமூகத்தில் அறிமுகமாகி பிரபல்யமாகி வருகிறது. இவ்வாறன டேட்டிங் முறைகளுக்கு இன்று எதிர்ப்புகள் எழும்பினாலும் காலோட்டத்தில் அவை தமிழ் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளவேண்டியது தவிர்க்க முடியாது.
புலம் பெயர்ந்த தமிழ் தேசிய வாதிகள் தமது குழந்தைகள் டேட்டிங் போவதை, விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்கின்றனர் அல்லது தடுக்க முடியாது உள்ளனர். ஆனால் இவர்கள் தாயகத்தில் இவ்வாறன செயற்பாடுகள் நடைபெறுகின்ற பொழுது கலாசார சீரழிவு எனக் கூச்சலிடுகின்றனர். இது இவர்களது வழமையான போலி இரட்டை வேடமேயாகும். இவ்வாறன புதிய உறவு முறைகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, டேட்டிங் முறைகளை எவ்வாறு தமிழ் சமூகம் உள்வாங்கி ஆரோக்கியமான முறையில் மாற்றி அமைக்கலாம் என சிந்திப்பதே நல்லது.
டேட்டிங் முறைகளில் பல வகைப்படும். இதை ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு அல்லது அறிந்து கொள்வதற்கான ஒரு ஆரம்ப அறிமுக செயற்பாடு எனலாம். சதாரணமாக இருவர் சேர்ந்து உணவகங்கள் செல்வது, திரைப்படத்திற்கு செல்வது என ஆரம்பித்து சில நேரங்களில் உடலுறவு வரை நீழ்கிறது. இவ்வாறான திருமணத்திற்கு முந்திய உறவுகள் பாலியலுறவில் நிறைவடைகின்றபோதே பிரச்சனைகள் அதிகம் உண்டாகிறது.
தமிழ் கலாச்சாரமானது திருமணத்திற்கு முன்பான ஆண் பெண்களுக்கிடையிலான பாலியலுறவுகள் தொடர்பான எதிர்ப்பு எண்ணமே கொண்டுள்ளது. குறிப்பாக பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதை ஏற்றுக்கொள்வதுமில்லை. ஒரு பெண் அவ்வாறு ஈடுபட்டவர் என அறியும் பொழுது அப்பெண்ணினது வாழ்வே கேள்விக்குறியாகிவிடும். திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் தரித்துவிட்டால் குறிப்பிட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மிகவும் அதிகமாகின்றது. ஆனால் ஆண்கள் எந்தவிதமான தண்டனைகளுக்கும் உள்ளாவதில்லை. இதனால் தமது நடைத்தைகளுக்கு பொறுப்புக்கூறாது தப்பிவிடுகின்றனர். ஆண்கள் தப்புவதற்கு ஏற்ற வகையிலையே சமூக அமைப்பும் கருத்தியலும் இருக்கின்றன. ஆனால் பெண்களை, நடத்தை கெட்டவள், வேசை, எனக்கூறி அவர்களிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தி எமது சமூகம் அவர்களைப் புறக்கணிக்கின்றது. இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து பெண்களைக் காப்பதற்கு நாம் எவ்வாறு இவ்வாறன பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்?
பாலியலுறவினால் ஏற்படும் கர்ப்பங்களை தவிர்ப்பதற்கு கருத்தடை சாதனங்கள் தொடர்பான அறியாமை மிகவும் முக்கியமான ஒரு காரணியாக இருக்கின்றது. கருத்தடை சாதனங்கள் காதலையும் டேட்டிங்கையும் திட்டுகிற அல்லது திட்டாமல் இருக்கிற அப்பா & அம்மாக்களிற்கு உரியது மட்டுமானது இல்லை, கர்ப்பமடையாது பாலியலுறவை அனுபவிப்பதற்கும், இளம் வயது கர்ப்பங்களைத் தவிர்ப்பதற்கும், பாலியலுறவினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பதற்குமானது என்பதை அனைவரும் விசேடமாக இளையோர் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஊரில ஒரு பக்கற் Condom வாங்குகிறதென்றாலே எதோ மிகவும் தீண்டத்தகாத செயல்போல கடைவாசலில நின்று பயந்து வெலவெலத்து தெரிந்தவன் எவனாவது பார்க்கிறானோ கடைக்கார அண்ணாச்சி என்ன நினைப்பானோ என்று முழித்துக்கொண்டு ஒரு பக்கற் Condom வாங்குவதற்கிடையிலை வந்த காம உணர்வெல்லாம் காற்றில பறந்திடும்.
பசித்தவன் உணவு உண்பதுபோல பாலியல் உணர்வு ஏற்படும்போது பாலியலுறவில் ஈடுபட்டுக் கொண்டு சுதந்திரமாக வாழ்வதை ஏற்பதில் தவறில்லை பாலியல் உணர்வும் இயற்கையாக அனைத்து உயிர்களுக்கும் உள்ள ஒரு உணர்வு என்பதை புரிந்துகொள்வது அவசியம்.
சில பெண்கள் தாமே விரும்பி திருணமத்திற்கு முன்பு தமது காதலர்களுடன் உடலுறவு கொள்வதும் ஆச்சரியமான ஒரு நிகழ்வல்ல. இவ்வாறன காதல் உறவுகளின் போது எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாது பாலியலுறவில் ஈடுபடுவதால் அவசியமற்ற கர்ப்பங்கள் உருவாகின்றன. ஆனால் இவ்வாறன அறியாமையால் உருவான கர்ப்பத்தைக் கலைப்பதற்கு சமூக அங்கிகாரமோ சட்ட அனுமதியயோ இல்லாமை குறிப்பிட்ட பெண்களது பிரச்சனைகளை சிக்கலாக்குகிறது. இவ்வாறு உருவாகும் கர்ப்பங்களை அழித்து தம்மை அதன் சுமையிலிருந்து விடுதலை செய்யவே பலரும் விரும்புவர். ஆனால் பெண்களின் இவ்வாறான உறவுகளையும் அதனால் ஏற்படும் கர்ப்பத்தையும் கருக்கலைப்புகளையும் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. இதற்கு அவள் மட்டுமே குற்றவாளியாக்கப்படுகின்றாள். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக தமிழ் சமூகமானது அன்பும் அரவணைப்பும் உள்ளவர்களாக இருந்து இவர்கள் மீண்டும் சமூகத்தில் சாதாரணமாக வாழ்வதற்கு வழி அமைக்கவேண்டும்.
பாலியல் தொழில் ஒரு சமூகத்தில் நிலவுவதற்கு பல காரணங்கள் உள்ளன. பாலியல் தொழிலை எந்த ஒரு சமூகத்திலிருந்தும் முற்றாக அழித்துவிடமுடியாது. ஆகவே இத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு தகுந்த பாதுகாப்புகளும் உரிமைகளும் வழங்கப்படவேண்டியது அவசியமானது.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் உருவாகுவதற்கு நமது கலாச்சாரமும் புதிய விடயங்கள் தொடர்பான அறியாமையுமே முக்கிய காரணம். காதல் ,காமம், பாலியலுறவு, கருத்தடை சாதனங்கள், மற்றும் கருக்கலைப்பு தொடர்பான தமது கருத்துக்களை பொதுவெளியில் விவாதிப்பதன்மூலம் ஆரோக்கியமான மற்றுக்கருத்துக்கள் உருவாக்கப்படுவது அவசியம்.
இன்றைய நவீன உலகில் மனித உடல்களிலும் பல மாற்றங்கள் விரைவாக நடைபெறுகின்றன. இதனால் கடந்த காலங்களைப் போல் அல்லாது இப்பொழுது சிறுவர்கள் சிறுவயதிலையே பாலியல் ரீதியாக முதிர்ச்சியடைந்து விடுகின்றனர். அதாவது பாலியலுறவுக்கு தயாராகி விடுகின்றனர். இளம் பருவத்தினருக்கு அதற்குரிய வயதிலிருந்தே இதுதொடர்பான பொருத்தமான அறிவையும் தகவல்களையும் வழங்குவது அவசியம்.
பாலியலுறவில் ஈடுபடுவது இயற்கையான ஒன்று. எவ்வாறு பாதுகாப்பாக ஈடுபடுவது அதற்கான வழிகள் என்ன என்பது தொடர்பான அறிவு பாடசாலைகளில் பாடங்களூடாக ஏற்படுத்தவேண்டும். இதனால் சிறுவயது பிரசவங்கனைளயும் கருச்சிதைவுகளையும் பிறக்கின்ற குழந்தைகளை கொலை செய்வதையும் தவிர்க்கலாம்.
இருவர் இணைந்து வாழ்வதற்காக வழியாக திருமண உறவு முறைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு பதிலாக சில காலங்கள் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை ஊக்குவிப்பதே ஆரோக்கியமானது. தேவையைப் பொறுத்து இவ்வாறான கலாச்சார மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
போரின் பின்னான இன்றைய ஈழத்து தமிழ் சமூகம் புதிய காலாச்சார மாற்றத்தை நாடிச்செல்கிறது. இம் மாற்றமானது ஆரோக்கிமான வழியில் செல்வதை உறுதி செய்வது சமூக ஆர்வலரது கடமை. அதற்கான பொறுப்பு சமூக அறிஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும், துறைசார் அறிஞருக்கும் ஊடகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உண்டு. இவர்களது செயற்பாடுகளும் படைப்புகளும் புதிய கருத்து உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி புதிய கலாசாரத்தின் பாதையை நிர்ணையம் செய்ய முடியும். ஆனால் துரதிஸ்டவசமாக இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகிறது. பெரும்பாலான பத்திரிகைகளும் இணையத்தளங்களும் இவ்வாறான செய்திகளை பரபரப்பான ஆபாச செய்திகள்போன்று சித்தரித்து தமது விற்பனையையும் இருப்பையும் நிலைநாட்டவே முற்படுகின்றன.
காதல், பாலியலுறவுகள், பாலியல் தொழில் என்பவற்றை அடக்குவதன்மூலம் அவை அழிந்துவிடாது. மாறாக இரகசியமாக இடம்பெறும். அதில் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் தடுக்க முடியாது. எமது சமூகமும் மாற்றங்களை சரியான முறையில் உள்வாங்கி முன்னேறிச் செல்லவேண்டியது அவசியம். சிந்திப்போமா மாறுவது ஒன்றே உலகில் மாறாதது அந்த மாற்றங்களை ஆரோக்கியமானதாக்குவோம்.