Home ஆரோக்கியம் எலும்பரிப்பு நோய்க்கு ஏற்ற மருந்துகள்!

எலும்பரிப்பு நோய்க்கு ஏற்ற மருந்துகள்!

26

இன்று மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லி நோய் ‘எலும்பரிப்பு நோய்’. 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 40 சதவீதம் பெண்கள், இவர்கள் மாதவிடாய் நின்றபின் எலும்பரிப்பு நோயினால் அவதிப்படுகின்றவர் வரிசையில் உள்ளனர். இப்போதே பொதுச்சுகாதார அமைப்புகளும், மருத்துவர்களும் எலும்பரிப்பு நோய் ஏற்படும் முன்பே போர்க்கால அடிப்படையில் இந்நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்ளாவிட்டால் நம் அடுத்த தலைமுறையினரில் மூன்றில் ஒரு பங்கினர் ஊனமுற்ற நிலைக்குத் தள்ளப்படுவர். எலும்பு முறிய சகஜமாகிவிடும் இது. எலும்புகள் வலுவிழக்கும். பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிறது.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்பு திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக் கொண்டு வெளியாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பு ஏற்படுவதால் பலகீனமாக இருக்கும்போது பலமாக இருமினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம். இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப் படுகின்றனர். ஆண்களைவிட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களை விடக் குறைவு. மேலும் மாத விலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம், அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.

35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும்பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்றபின் எடையில் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடைகுறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.

ஆண்களுக்கு இந்த எலும்பரிப்பு விகிதம் பெண்களுடையது போல் இல்லை. 70 வயதிற்கு மேல்தான் இந்நிலையை ஆண்கள் எதிர் கொள்கின்றனர். ஆண்களின் எலும்புத் திசுக்கள் வலிமையாக உள்ளன. உறுதியாகவும் அளவில் அதிகமாகவும் உள்ளன. காரணம் அவர்களின் உடற்பயிற்சியோடு கூடிய தினசரி வாழ்க்கை முறை. பொதுவாகச் சொல்வதானால் இந்நோய் 80 சதவீதம் பெண்களுக்கும், 20 சதவீதம் ஆண்களுக்கும் வருகிறது. எலும்புகள் கல் போன்று உறுதியானது என்று நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் எலும்பு மென்மைப்பட்டு, வலுக்குறைத்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது. இது போன்ற எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய கட்டாயமும், இயல்பு நிலைக்கு வராமல் அவதியுறும் தன்மையும் ஏற்படுகிறது.

எலும்பரிப்பு முதுகெலும்பில் ஏற்பட்டால் சாதாரணமாகக் குனியும்போது கூட எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். சாதாரண சுளுக்கும் கூட எலும்புமுறிவுக்கு காரணமாகி விடுகிறது. தீமைகட்கு அடிகோலுகிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம். சுண்ணாம்புச் சத்து சம நிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழுவளர்ச்சிப் பருவம் வரையிலும்! மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை. கிராமப்புறங்களில் உள்ள இந்தியப் பெண்கள் பல குழந்தைகளைப் பெறுவதால் மாதவிலக்கு நிற்கும் முன்னே இப்பெண்கள் எலும்பரிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மாதவிலக்கு நிற்கும் காலம் வரும்போது ‘ஈஸ்ட்ரோஜன்’ குறைபாடு பெண்களுக்கு ஏற்படும் எலும்பரிப்பு நோய்க்கு ஏதுவாகுகிறது.

எலும்பரிப்பு நோயின் வெளிப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் இன்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் பெண்களுக்கு நாளையே கூட எலும்பரிப்பு நோய் ஏற்பட்டு அதன் காரணமாக எலும்பு முறிவு ஏற்படலாம். எக்ஸ்ரே கூட நோய் முற்றிய நிலையில் தான் நோய்ப்பற்றி கூறுகிறது. B.M.T சோதனைகள், எலும்புகளில் உள்ள தாது உப்புக்கள், எலும்பின் எடைபற்றி துல்லியமாக அறிவிக்கிறது. ஒருமுறை எலும்பரிப்பு நோய் வந்து விட்டால் மேற்கொண்டு நோய் தீவிரமடையாமலும் மருந்துகளால் காக்க இயலும்.

நோயைத் தடுக்கும் முறைகள்:

நடைபயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்த வேண்டும். உணவில் கால்சியம், வைட்டமின்-ஈ சரியான அளவில் இருக்கவேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களும், நீண்டநாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறையும் பெண்களுக்கு எலும்பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.

எலும்பரிப்பு நோய் இனி ஆண்டுதோறும் அதிகரிக்கும் என ஆய்வுகள் அச்சுறுத்தி வருகின்றன. மக்கள் தொகைப் பெருக்கத்தில், வியாதிகள் பெருக்கத்தில், சிகிச்சைகள் முறையாக செய்துக்கொள்ளாத விழிப்புணர்வு இல்லாத அவலத்தில், ‘சுய பச்சாதாபம்’ என்ற ஆட்கொல்லி எண்ணத்தில் என்று நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். Calcarea Carb, Arnica, Platina போன்ற ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. இந்த எண்ணங்களைத் தூக்கி எறிந்து விட்டு வலிமையான – ஆரோக்கியமான எதிர்கால இளைய தலைமுறையினரை உருவாக்கும் மாபெரும் பொறுப்பு நம் கைகளில் தான் உள்ளது.