அந்தரங்க ஆரோக்கியம்:எல்லோருமே செக்ஸ் தரும் இன்பத்தை விரும்புகிறவர்கள்தான். அதிலும், இன்பத்தை அதிகரிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்ற தேடலில் உள்ளவர்கள் அதிகம் பேர். சிலருக்கு செக்ஸ், ஏமாற்றம் தரும் விஷயமாக இருக்கும். சிலருக்கு திருப்தி தராது. சிலரால் உச்சம் தொட முடியாமல் போகும். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எரிச்சல், ஈடுபாடின்மை, கோபம், குற்றவுணர்வு, பயம், கவலை போன்றவைகூட காரணமாக இருக்கலாம். செக்ஸில் இன்பத்தைக் கூட்ட என்ன செய்ய வேண்டும், அதைத் தடுக்கும் காரணங்கள் என்னென்ன, ஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், செக்ஸ் நல்லது…அது எப்படி?… எல்லாவற்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
ஆகாஷ், தன் மனைவியை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பது அவனுக்குத்தான் தெரியும். அவன் மனைவி சுமதி அவனுக்கு மிகப் பொருத்தமானவள். வீட்டை நிர்வகிப்பதில் கில்லாடி. அவனையும் குழந்தைகளையும் அக்கறையோடு பார்த்துக்கொள்பவள். திருமணமாகி இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அழகாகத்தான் இருக்கிறாள். ஆனால், அவளோடு உடலுறவு கொள்ளும்போது, ஆகாஷ் தன் ஆற்றலை இழந்துவிடுவதுபோல உணர்கிறான். அவனுக்கு விறைப்புத் தன்மை ஏற்படுவதில்லை. அவன் ஆண்மைக்கே சவால்விடும் தருணமாகிவிடுகிறது அந்தக் கணம்.
இது ஆகாஷுக்கு மட்டுமல்ல… 30 வயதின் பிற்பகுதியில், 40-களின் தொடக்கத்தில் இருக்கும் பல ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னை. சொந்த வீட்டில், அவர்களின் படுக்கையில், கட்டிய மனைவியிடம் இப்படி ஓர் இயலாமை ஏற்படுவது ஏன்? இவர்களை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த இக்கட்டான சூழ்நிலை ஏற்படுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கும். அது சலிப்பு (Monotony). பலருக்கு மனைவியுடன் உறவுகொள்வதென்பது எந்த ஆர்வமும் இல்லாமல் அவ்வப்போது நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வாகிவிடுகிறது. அதே இடம், அதே நேரம், அதே முறை, அதே நிலை… ஒரே மாதிரியான இரவுகள்… பல வருடங்களாக இதே தொடர்கதை… சலிப்புத் தட்டாமல் எப்படி இருக்கும்? எவ்வளவு சிறந்த உணவாக இருந்தாலும், `இதைத்தான் தினமும் இரவில் நீங்கள் சாப்பிட வேண்டும்’ என்றால் எப்படி இருக்கும்? முதல் நாள் சரி, இரண்டாம் நாள், மூன்றாம் நாள்… நான்காம் நாள் வெறுத்துப்போய்விடும். அதுபோலத்தான் செக்ஸும் . ‘மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன்’
என்ற பிரபல செக்ஸாலஜிஸ்ட் நிபுணர்கள், இந்த நிலையை `செக்ஸுவல் போர்டம்’ என்கிறார்கள்.
ஆண்கள், பெண்கள் இருபாலினருமே உடலுறவில் கணிசமான அளவுக்கு இந்த அலுப்பை (Boredom) அனுபவிக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல செக்ஸாலஜிஸ்ட் ஆல்ஃபிரெட் கின்ஸே (Alfred Kinsey) இதை `உளவியல் சோர்வு’ (Psychological Fatigue) என்று குறிப்பிடுகிறார். மிக நீண்ட காலத்துக்கு, திரும்பத் திரும்ப நிகழும் எந்த அனுபவமும் அலுப்பைத்தான் ஏற்படுத்தும். ஓர் ஆய்வு (Ruben’s Study) நடத்தப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட, ஆண்மைக்குறைவு உடைய 100 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், தங்கள் மனைவிகளிடம் செக்ஸில் ஈடுபடும்போதுதான் அவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது, மற்ற பெண்களிடம் அல்ல என்பது தெரியவந்தது.
தம்பதிகள், காலம் காலமாக ஒரே பாணியில், திரும்பத் திரும்ப, இயந்திரத்தனமாக, உப்புச்சப்பில்லாமல் உறவுகொள்வதுதான் இந்த மனச்சோர்வுக்குக் காரணம். இந்தியாவில், நெரிசல் மிக்க நகர வாழ்வில் தம்பதியருக்குப் போதுமான தனிமை கிடைப்பதில்லை. பல தம்பதியர் செக்ஸில் பரீட்சார்த்த முயற்சிகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். சமூகத்தில் காலம் காலமாகக் கற்பிக்கப்பட்டுவரும் வழக்கமான, அதே பாணியைத்தான் செக்ஸில் கடைப்பிடிக்கிறார்கள்.
இன்றைக்குப் பலரும் தங்கள் துறையில் சாதனை படைப்பது, பணம் சம்பாதிப்பது, அதைப் பெருக்குவது, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைவது ஆகியவை மட்டுமே வெற்றி என நினைக்கிறார்கள். இந்த ஓட்டப்பந்தயத்தில் செக்ஸ் என்பது எல்லாவற்றுக்கும் பின்னால், கடைசியில் மிக மெதுவாக நடந்துவருகிறது அல்லது காணாமலேயே போய்விடுகிறது. 40 வயதைக் கடந்த பலர் சுவாரஸ்யமில்லாமல்தான் செக்ஸில் ஈடுபடுகிறார்கள். அதில் புதிதாக எதையும் செய்து பார்ப்பதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் செக்ஸ் போரடித்துவிடுகிறது. நடுத்தர வயதுடைய ஓர் ஆண் இது குறித்துக் கவலைப்பட்டால், சர்வ சாதாரணமாக, `இந்த வயசுக்கு மேல அதைப் பத்தி ஏன் கவலைப்படுறே?’ என்று பதில் சொல்லிவிடுவார்கள். இது பெண்களுக்கும் பொருந்தும். இவர்களுக்குப் பல நேரங்களில் செக்ஸ் கடமைக்குச் செய்ய வேண்டிய ஒரு காரியமாகிவிடுகிறது.
சரி, இந்த `செக்ஸுவல் போர்டம்’-ல் இருந்து வெளிவருவது எப்படி? சின்னச்சின்ன செயல்பாடுகள்கூடக் காமத்தின் அத்தனை சாத்தியங்களையும் திறந்துவிட்டுவிடும். நம் பாலுறுப்புகள்தான் செக்ஸ் உறுப்புகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், நம் உடலில் இன்னும் அதிகம் கவனிக்கப்படாத பகுதி ஒன்று உண்டு… அது நம் தோல். தோலின் ஒவ்வொரு இன்ச்சிலும் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ஆயிரக்கணக்கான நரம்புகள் இருக்கின்றன. அவற்றில் சில நூறு நரம்புகளைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.
காமசூத்ரா எழுதிய வாத்ஸ்யாயனர், அந்த நூலில் செக்ஸுக்கு முன்னர் செய்யவேண்டிய, காமத்தைத் தூண்டக்கூடிய சின்னச்சின்ன செயல்கள் (Foreplay) பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதில் 27 வகை முத்தங்கள், இன்பமூட்டும் செல்லக் கடிகள், உணர்ச்சி வேகத்தில் செய்யும் நகக்கீறல்கள் எனப் பலவற்றை உடலுறவுக்கு முன்பு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார். எடுத்தவுடனேயே கட்டிலுக்குப் போய்விடாமல் தம்பதியர் செய்யவேண்டிய சில வேலைகள் இருக்கின்றன. பேசலாம். விளையாடலாம். தாயம், கேரம்போர்டு ஆடுவதெல்லாம்கூட செக்ஸுக்கான மனநிலையைத் தூண்டும். அதற்குப் பிறகு ஃபோர்ப்ளேயில் இறங்கி மெள்ள உடலுறவுக்குத் தயாராகலாம். ஃபோர்ப்ளே நல்ல செக்ஸுக்கு மிக அவசியம்.
செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர், வாழ்க்கைத் துணையிடம் மனம் திறந்து பேசுங்கள்; செக்ஸில் புதிய பரிசோதனை முயற்சிகளை வரவேற்கத் தயாராகுங்கள். கொடுப்பதும் பெறுவதும் தம்பதியர் இருவருக்கும் பொதுவானதாக இருக்கட்டும்.
உங்கள் வாழ்க்கைத்துணையிடம் அவர் எதை விரும்புகிறார் என்று கேளுங்கள். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை அவரிடம் சொல்லுங்கள். உடலுறவில் விதவிதமான நிலைகளைக் கடைப்பிடியுங்கள். அதே அறை, அதே கட்டில், அதே திரைச்சீலைகூடச் சிலருக்கு செக்ஸில் ஆர்வமின்மையை ஏற்படுத்திவிடும். உடலுறவுக்காக நீங்கள் வைத்திருக்கும் வழக்கமான நேரத்தை, இடத்தை மாற்றிப் பாருங்கள். பரபரப்பின்றி இருக்கும் ஒரு நேரத்தில் இதை முயன்று பாருங்கள். வசதியிருப்பவர்கள் வெளியே எங்கேயாவது விடுதிகளில்கூட இதை வைத்துக்கொள்ளலாம்.
வெவ்வேறு இடங்களில், விதங்களில் செக்ஸை முயற்சிசெய்வது வாழ்க்கைத்துணையிடம் காமத்தைத் தூண்ட உதவும். அழகான படுக்கை விரிப்புகள், மெல்லிய உள்ளாடைகள், மிதமான விளக்கொளி, இனிமையான இசை, நெருக்கமாக ஆடும் நடனம், அற்புதமான உணவை இருவரும் சேர்ந்து சாப்பிடுவது… இவையெல்லாம்கூட ஆரோக்கியமான செக்ஸுக்குத் துணை நிற்கும். மென்மையான முத்தத்துடன் ஆரம்பிக்கலாம். இவையெல்லாம், உங்கள் வாழ்க்கைத்துணையின் உள்ளே இருக்கும் ஒரு புதிய மனிதரைக் கண்டுபிடிக்கும் முயற்சி என வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்தை நிச்சயம் அவர் அங்கீகரிப்பார். அவருக்குக் கிடைக்கும் இன்பத்துக்கான நன்றியை ஏதாவது ஒருவகையில் உங்களுக்கு வெகுமதியாகத் தருவார். `செக்ஸை செழுமையாக, ஆடம்பரமான வழியில் கையாளுங்கள். வாழ்க்கையையும், காதலையும், ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுங்கள்.
வயது ஒரு தடையல்ல!
* பயன்படுத்து அல்லது விட்டுவிடு. இதுதான் மத்திய வயதைக் கடந்தவர்களுக்கான முக்கிய செக்ஸ் விதி. இது ஆண், பெண் இருபாலருக்குமே பொருந்தும். செக்ஸில் ஆக்டிவாக சுறுசுறுப்பாக இருந்தால், அது உடற்பயிற்சிக்குச் சமம். ஓடுவது, குதிப்பதுபோல செக்ஸும் ஓர் உடற்பயிற்சியே. இது, தசை வலுப்பெற உதவும்.
* 60 வயதைக் கடந்த பிறகும் செக்ஸில் ஆர்வத்தோடு ஈடுபடுபவர்கள் ரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டீரான் அளவைச் சரியான அளவில் வைத்திருப்பார்கள். 60 வயதில் செக்ஸை விட்டுவிடுபவர்களின் உண்ணும் உணவு அளவும் குறைந்துபோகும்.
* நேரமும் முக்கியம்தான். பலரும் உடலுறவுக்குத் தேர்ந்தெடுப்பது தவறான நேரத்தைத்தான். அதாவது, ஒரு நாளின் முடிவில், உழைத்து, களைத்து, சோர்ந்து போய் வரும் நேரத்தை. உண்மையில், நன்கு தூங்கி எழுந்த காலை நேரம் உறவுக்கு ஏற்றது. அல்லது நம் உடல் நன்கு ஓய்வெடுத்த பிறகு உறவு கொள்ளலாம்.
* அதிகக் குடிப்பழக்கம் செக்ஸுக்கு உதவாது. ஆல்கஹால் நம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். உடலுறவை ஆல்கஹால் பாதிக்கிறது என்று தெரிந்தால், குடிப்பழக்கத்தை விட்டுவிடுவதே நல்லது.
* பிரமாதமாக உறவில் ஈடுபட்டு நாம் எந்த ஒலிம்பிக் பதக்கத்தையும் வாங்கப்போவதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். செக்ஸ் நமக்கு திருப்தியையும் இன்பத்தையும் தர வேண்டும். அவ்வளவுதான். எவ்வளவு விரைவாக விறைப்புத்தன்மை ஏற்படுகிறது என்பதையெல்லாம் கவனிப்பதைவிட்டுவிட்டு ஆர்வத்தோடு ஈடுபடுங்கள்… அதுவே போதும்.
* உங்கள் தாம்பத்ய வாழ்க்கைக்குள் எந்தப் பிரச்னையும் நுழைய இடம் கொடுக்காதீர்கள். அது மாதிரி சந்தர்ப்பங்களில், மருத்துவரின் உதவியை நாடுங்கள். ஏதோ ஓர் உடல் கோளாறுக்காக ஒரு மாத்திரை சாப்பிடவேண்டியிருக்கிறது. அது தாம்பத்யத்துக்குத் தடையாக இருந்தால், உடனே மருத்துவரிடம் அதைத் தெரிவியுங்கள். செக்ஸில் ஏற்படும் சிறு பிரச்னைகள் தீர்க்கக்கூடியவை. ஆனால், அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னாளில் நம் தாம்பத்திய வாழ்க்கையையே பாதித்துவிடும்.
செக்ஸில் ஆர்வம், ஈடுபாடு குறைகிறதா?
பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும். அதனால் பாலுறுப்புத் திசுக்கள் சுருங்கி, உடலுறவின்போது கடுமையான வலியை ஏற்படுத்தும். அதேபோல டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன்களும் குறைந்து செக்ஸில் ஆர்வத்தைக் குறைத்துவிடும்.
ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம், சர்க்கரைநோய், அல்சர் போன்ற நோய்களுக்கான மாத்திரைகளை உட்கொள்வதுகூட ஆண்மைக் குறைவுக்குக் காரணமாகலாம்.