பொது மருத்துவம்:காய்ச்சல் விரைவில் குணமாக, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட்டு காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவி புரியும். காய்ச்சல் இருக்கும்போது என்ன சாப்பிட வேண்டும் என்ன சாப்பிடக்கூடாது என்று சில குறிப்புகளை இங்கு காணலாம்:
என்ன சாப்பிடலாம் (What to have?)
திரவ ஆகாரங்கள் (Fluids)
உடல்நலம் குறையும்போது எப்போதும் அதிக திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்துவார். நீர் அருந்தலாம், பழச்சாறுகள் அருந்தலாம் (பதப்படுத்திய அல்லது பேக்கிங்கில் வரும் பழச்சாறுகள் அல்ல). பழச்சாறு குளிர்ச்சியாக இருக்கக்கூடாது. வெதுவெதுப்பான சூப், (துளசி தேநீர் போன்ற) மூலிகை தேநீர் போன்றவற்றையும் அருந்தலாம்)இந்த பானங்கள் மற்றும் சூப்பில் இருந்து கிடைக்கும் வெப்பம், மூக்கடைப்பை நீக்க உதவும். உடலுக்கு போதிய நீர்ச்சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும், உடலுக்குத் தேவையான எலக்ரோலைட்களைப் பெறவும் இளநீர் அருமையான பானம்.
சில பழங்கள் (Certain Fruits)
பழங்களில் பல வைட்டமின்களும் ஆன்டிஆக்ஸிடண்டுகளும் உள்ளன. அவை நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகுந்த உதவி புரியும். தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது, அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். காய்ச்சல் இருக்கும்போது சில பழங்களை சாப்பிடுவது நோயெதிர்ப்பு செல்களின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். ஆரஞ்சு, கிவிப்பழம், ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி ஆகிய பழங்களில் வைட்டமின் C நிறைந்துள்ளது, அது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் துணை புரியும்.
புரதம் (Protein)
காய்ச்சலை எதிர்த்து உடல் போராடுவதற்குத் தேவையான ஆற்றலை புரதம் வழங்கும். முட்டை பொரியல் கோழிக்கறி சூப் போன்றவற்றையும் சிறிய அளவில் சாப்பிடலாம். யோகர்ட்டிலும் புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்களும் நிறைந்துள்ளன.
குழம்பு வகைகள் (Broths)
குழம்பு வகைகளில் வைட்டமின்களும் தாதுக்களும் கலோரிகளும் உள்ளன, அவை சுவையானவையும் கூட. இவை உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும், இந்த நேரத்தில் உடலுக்குத் தேவையான திரவ சத்துகளையும் அளிக்கும். காய்கள் போட்டு செய்த குழம்பு, குழம்பு போன்ற சூப் வகைகள் சிக்கன் சூப் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
பூண்டு (Garlic)
பூண்டை எந்த உணவிலும் சேர்த்துக்கொள்ள முடியும் – அதிகம் வேகவைக்கக் கூடாது, அதிகம் வறுக்கக்கூடாது. வெதுவெதுப்பான நீருடன், பச்சைப் பூண்டையும் சாப்பிடலாம். அது நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட உதவும்.
பச்சை இலைக் காய்கறிகள் (Leafy vegetables):
பசளிக்கீரை, பரட்டைக் கீரை (கேல்) ஆகியவற்றில் எண்ணற்ற தாதுக்களும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. அத்துடன் வைட்டமின் A, C, K மற்றும் ஃபோலேட் ஆகியவையும் அதிகமுள்ளது. அழற்சியை எதிர்த்துப் போராடவும் செல்கள் சேதமடைவதைத் தடுத்துப் பாதுகாக்கவும் உதவுகின்ற ஃபைட்டோநியூட்ரியன்களும் இவற்றில் உள்ளன.
காரமான உணவுகள் (Spicy Foods)
மூக்கடைப்பு இருக்கும்போது, காரசாரமான உணவை சாப்பிட்டால் நன்றாக இருக்கும்போல் தோன்றும். மசாலா நிறைந்த காரசாரமான உணவுகள், மூக்கடைப்பை நீக்கி நிவாரணமளிக்கலாம். ஆனால், வயிற்றில் பிரச்சனை இருந்தால் இதனைத் தவிர்க்க வேண்டும்.
என்ன சாப்பிடக்கூடாது (What not to have?)
காஃபின் (Caffeine)
காஃபின் இயற்கையில் சிறுநீரை அதிகரிக்கும் பண்பு கொண்டது. இது உடலில் நீர் வற்றிப் போகச் செய்யும், ஆகவே காய்ச்சல் குணமாகும் வரை காஃபின் எடுத்துக்கொள்வதைக் குறைக்க வேண்டும், முற்றிலும் தவிர்ப்பதும் நல்லது.
அதிக சர்க்கரை (Excess sugar)
கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் இனிப்பு பழச்சாறுகள் ஆகியவை இதிலடங்கும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை தற்காலிகமாக பாக்டீரியாவை எதிர்க்கும் வெள்ளை இரத்த அணுக்களின் திறனை ஒடுக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செரிமானத்திற்குக் கடினமான இறைச்சிகள் (Meats that are difficult to digest)
சிவப்பு இறைச்சி, சில மீன் வகைகள் மற்றும் செரிமானத்திற்குக் கடினமான சில இறைச்சி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உடல் காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும். இதுபோன்ற உணவுகளை உட்கொண்டால் அதிக ஆற்றல் அவற்றை செரிமானம் செய்வதற்கு செலவாகி, காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதில் தோய்வு ஏற்படும்.
பொறித்த உணவுகள் (Fried Food)
எண்ணெய் நிறைந்த நொறுக்குத்தீனிகளை செரிப்பதும் கடினம் என்பதால், அவற்றையும் தவிர்க்க வேண்டும். பொறித்த உணவுகளில் அதிக கொழுப்பு இருக்கும், கொழுப்பு அழற்சியை அதிகரிக்கும்.
தேவையற்ற நொறுக்குத்தீனிகள் (Junk Food)
துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பேக்கிங்கில் வரும் உணவுகளில் பெரும்பாலும் ஊட்டச்சத்துகள் எதுவும் இருக்காது. அவற்றில் மோனோசோடியம் குளூட்டமேட், பதப்படுத்தும் வேதிப்பொருள்கள், செயற்கை நிறப் பொருள்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருக்கும்.
இயற்கையாகவே உடல் காய்ச்சலில் இருந்து மீண்டு வர நீங்கள் ஒத்துழைத்தும் காய்ச்சல் சரியாகாவிட்டால் அல்லது பிற அறிகுறிகள் சரியாகாவிட்டால் மருத்துவரைச் சந்திக்கவும்.