அந்தரங்க தகவல்:சுன்னத்து (அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பின் முன் தோலை வெட்டி அகற்றுதல்) என்பது பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு உட்பட்ட ஒரு நடைமுறையாகும். முதலில் ஆணுறுப்பின் முனைத் தோலின் உடற்கூறு அமைப்பு பற்றிப் புரிந்துகொண்டு, ஓர் ஆணின் வாழ்வில் இதன் பங்கு என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயல்வோம்.
முன் தோலின் உடற்கூறு அமைப்பு (Anatomy of the foreskin)
ஆணுறுப்பின் முனைத்தோல் (மொட்டு முனைத்தோல் என்றும் அழைக்கப்படும்) இரண்டு அடுக்குகளாலான மடிந்திருக்கும் தோல் மற்றும் மியூக்கஸ் சவ்வின் அடுக்கு ஆகியவை சேர்ந்ததாகும். இது ஆணுறுப்பு மொட்டினையும் சிறுநீர்த்திறப்பையும் மூடியுள்ளது. பிறக்கும்போது, இந்தத் தோல் பின்னுக்கு இழுக்க முடியாதபடி இருக்கும். ஏனெனில் இந்தத் தோலும் மொட்டும் நன்றாக ஒட்டியிருக்கும். குழந்தை பிறந்த ஒரு சில ஆண்டுகளில், ஆணுறுப்பு வளர்ச்சி அடைகிறது, முன் தோலுக்கு அடியில் ஸ்மெக்மா எனும் பொருள் வெளிவந்து படியும், இதனால் மொட்டிலிருந்து முன் தோல் பிரியும். 3 வயதாகும்போது கிட்டத்தட்ட 90% குழந்தைகளுக்கு முன் தோலை பின்னோக்கி இழுக்க முடியும்படி ஆகிவிடும். 17 வயதில், 1%க்கும் குறைவான ஆண்களுக்கு மட்டுமே மொட்டு முனைத்தோலை பின்னோக்கி இழுக்க முடியாத நிலை (ஃபிமோசிஸ்) இருக்கும்.
ஆணுறுப்பின் மொட்டு முனைத்தோல் பின்வரும் செயல்களில் ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது:
கருவில் இருக்கும்போது, கருப்பைக்குள் ஆண்குறியைப் பாதுகாப்பது
ஆண்குறி மொட்டினை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது
அதிக எண்ணிக்கையிலான நரம்பு உணர்விகள் இருப்பதால், பாலுறவின்போது அதிக இன்ப உணர்வைப் பெற உதவுவது
ஆண்களுக்கு சுன்னத்து செய்ய வேண்டியதற்கான அறிகுறிகள் (Indications for male circumcision)
ஆண்கள் மூன்று காரணங்களுக்காக சுன்னத்து செய்ய வேண்டி வரலாம்
சமயம் அல்லது கலாச்சாரத் தேவைக்காக: சமய சடங்கின் ஒரு பகுதியாகவும் ஆண்களுக்கு சுன்னத்து செய்யப்படுகிறது.
நோய்த்தடுப்புக்காக: பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தைக் குறைப்பதற்காக செய்யப்படுகிறது.
சிகிச்சைக்காக: மொட்டு முனைத் தோலின் பல்வேறு பிரச்சனைகளுக்கான சிகிச்சையாகவும் செய்யப்படுகிறது.
தற்போது, பெரும்பாலும் குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களில் அல்லது பருவமடையும் வயதிலேயே சுன்னத்து செய்யப்படுகிறது.
தொடர்ந்து சுன்னத்து செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன? (What are the needs for “a routine circumcision”?)
சுன்னத்து செய்துகொள்ள வேண்டியது அவசியமா என்பது நீண்ட காலமாகவே பெரிய விவாதமாக இருந்து வருகிறது. தொடர்ந்து அவ்வப்போது சுன்னத்து செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவர்கள், சுன்னத்து செய்வதால் ஆணுறுப்பு மொட்டு இன்னும் சுத்தமாக இருக்கும், சிறுநீர் நோய்த்தொற்றுகளும் பால்வினை நோய்களும் வரும் ஆபத்து குறையும், ஆணுறுப்புப் புற்றுநோய் வரும் ஆபத்து குறையும் என்பது போன்ற ஆரோக்கிய நன்மைகளை முன்வைக்கின்றனர்.
சுன்னத்து நடைமுறையை எதிர்ப்பவர்கள், எளிய சுகாதாரப் பழக்கங்களும் பாதுகாப்பான பாலியல் உறவுப் பழக்கங்களுமே இந்த நன்மைகளை அளிக்கப் போதுமானவை என்று விவாதிக்கின்றனர்.
மொட்டு முன்தோலை அகற்றுவது உடலுறவில் சிறப்பாக செயல்பட எப்படி உதவுகிறது?
சுன்னத்து என்பது மரபியல் ரீதியான காயத்தின் ஒரு வடிவமே என்றும் பலர் கருதுகின்றனர். இதைச் செய்வதால், ஆணுறுப்பின் முனையில் வெளிக்காற்று படும். இப்படி நீண்ட காலம் காற்று படும்படி இருப்பதால், மொட்டின் மேல் தோல் தடித்து, அதன் உணர்திறன் குறையும். இதனால் உடலுறவில் திருப்தி குறையும் என்றும் நம்பப்படுகிறது. இப்படி இருக்கையில், சுன்னத்து பற்றியும் உடலுறவின் இன்பம் பற்றியும் அறிவியல் ஆராய்ச்சிகள் ஏதேனும் கூறுகின்றனவா? பார்ப்போம்.
சுன்னத்து செய்துகொண்ட 310 பேரும் பங்கேற்ற ஓர் ஆய்வில், அவர்களிடம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் 1 முதல் 5 வரையிலான அளவுகோலைப் பயன்படுத்தி பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தக் கேள்விகள் அவர்களது ஆணுறுப்பின் பல்வேறு பகுதிகளின் உணர்திறன், வலி மற்றும் வழக்கத்திற்கு மாறான உணர்வுகள் பற்றி சோதனை செய்வதற்காகக் கேட்கப்பட்டன.
சுன்னத்து செய்யப்பட்ட ஆண்கள், தங்கள் சுன்னத்து செய்துகொள்ளாத ஆண்களுடன் ஒப்பிடும்போது, உடலுறவின் இன்பம் குறைவாக இருப்பதாகவும், புணர்ச்சிப் பரவசநிலையும் அதிக மகிழ்ச்சியானதாக இல்லை என்றும் தெரிவித்தனர்.
புணர்ச்சிப் பரவசநிலையை அடைய அவர்கள் அதிக சிரமப்பட வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டனர்.
அதுமட்டுமின்றி, ஆணுறுப்பின் மொட்டில் (அரிப்பு, எரிச்சல், கூச்சம், மரத்துப்போவது போன்ற) வித்தியாசமான உணர்வுகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆணுறுப்பின் தண்டில், அசௌகரியம், வலி, மரத்துப்போவது, வித்தியாசமான உணர்வுகள் போன்ற பிரச்சனைகளும் அதிகம் வருவதாகத் தெரிவித்தனர்.
பருவமடைவதற்கு முன்பே சுன்னத்து செய்துகொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, வளர்ந்த பிறகு அல்லது அதற்குப் பிறகு சுன்னத்து செய்துகொண்டவர்களுக்கு ஆணுறுப்பின் மொட்டில் பாலுறவு இன்ப உணர்வு குறைவாக இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்களில் பெரும்பாலானோர், ஆணுறுப்புத் தண்டில் வலி, வழக்கத்திற்கு மாறான உணர்வுகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மற்றொரு ஆய்வில் (காக்ஸ் G, 2015), சுன்னத்து செய்வதால் ஆணுறுப்பின் உணர்திறன் மற்றும் உடலுறவின் இன்ப உணர்வு போன்ற அம்சங்கள் பாதிக்கப்படுகிறதா என்று கண்டறிவதற்காக, ஆணுறுப்பின் மைக்ரோஸ்கோப் கட்டமைப்பு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், திறந்திருக்கும் நரம்பு முடிச்சுகள், தொடு உணர்திறன், வெப்ப உணர்திறன், அதிர்வு உணர்திறன் போன்ற பண்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
மைக்ரோஸ்கோப் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்துப் பார்க்கும்போது, சுன்னத்து செய்வதால் பாலியல் இன்பம் பாதிப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்தனர்.
ஆதார மறுஆய்வின் மிகப்பெரிய வடிவமாக நடத்தப்பட்ட மற்றொரு முறைப்படுத்தப்பட்ட ஆய்வில் (மோரிஸ் BJ, 2013), 40,473 ஆண்கள் (சுன்னத்து செய்துகொள்ளாத 19,542 ஆண்களும் சுன்னத்து செய்துகொண்ட 20,931 ஆண்களும்) பங்கேற்ற 36 ஆய்வுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
ஆண்களுக்கு சுன்னத்து செய்வதால், அவர்களின் ஆணுறுப்பின் உணர்திறன், பாலியல் கிளர்ச்சி, விறைப்புத்தன்மை, பாலியல் உணர்திறன், புணர்ச்சிப் பரவசநிலை, விந்து வெளியேற ஆகும் நேரம், உடலுறவின் இன்பம் மற்றும் திருப்தி ஆகியவற்றில் பாஎதிர்மறையான பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை என்று இறுதிக்கருத்தைத் தெரிவித்தது.
முந்தைய சில ஆய்வுகளில், சுன்னத்து செய்வதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதற்குப் பிறகு சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, முந்தைய ஆய்வு முடிவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. மிக உயர்தர ஆய்வுகளும் பெருமளவிலான ஆதாரங்களும், மருத்துவரீதியாக முறையாக சுன்னத்து செய்வதால், உடலுறவு சம்பந்தப்பட்ட உணர்விலும் செயல்திறனிலும் திருப்தியிலும் பிரச்சனை எதுவும் இல்லை என்றே தெரிவிக்கின்றன.