Home சூடான செய்திகள் ஒரு விலை மாதுவின் நெஞ்சை உருக்கும் உண்மை கதை

ஒரு விலை மாதுவின் நெஞ்சை உருக்கும் உண்மை கதை

421

சூடான செய்திகள்:அப்ப எனக்கு நாலு இல்ல அஞ்சு வயசு இருக்கும். என்ன சுத்தி நடக்குற எதுவுமே, என்ன? எதுக்கு நடக்கதுன்னு? ஒண்ணுமே எனக்கு தெரியாது. அந்த காலக்கட்டத்துல நான் பார்த்த ஆண்கள் எல்லாம் முப்பது வயசுக்கு அதிகமானவங்க தான்.

என் வயசுல என்ன தவிர வேற ஒரு பையன நான் பார்த்தது இல்ல. ஏன், என்னையே நான் ஒரு பொண்ணுன்னு தான் நெனச்சுட்டு இருந்தேன். என்ன சுத்தி எப்பவுமே அம்மா, அக்கா, அத்தைங்க தான் இருப்பாங்க. பகல் முழுக்க விளையாட்டு, சிரிப்பு சத்தம், சந்தோசமா இருக்கும். இராத்திரி ஆனா தான் அந்த குரல் வெளிப்படும்…. ஒரு மாதிரியான முனங்கள், அழுகை, சோகம் எல்லாம் கலந்த அந்த சப்தம்… அது என்ன? அது ஏன்? வருது… தெரியல. பொதுவாவே ஒரு பாலினத்துக்கு தன்னோட எதிர் பாலினத்தோட நிர்வாண உடல் மேல ஒரு மோகம் இருக்கும். ஆனா, எனக்கு அப்படியான மோகம் இல்ல. நீங்க பார்த்த நிர்வாண உடல் எல்லாம் உங்களுக்கு பிடிச்ச மாதிரியான வடிவத்துல, வளைவு, நெளிவுகளோட இருந்திருக்கும். நான் பார்த்த நிர்வாண உடல் எல்லாம் காயங்கள், கீறல்கள், ஆங்காங்கே இரத்த வடுக்களோட இருந்தது… ஒரு விலை மாதுவோட மகனா பிறந்த, வளர்ந்ததுல நான் கடந்து வந்த பாதை இதுதான்…

தீப்பெட்டி உலகம்! ஒரு சின்ன காம்பவுண்ட் அதுக்குள்ள தீப்பெட்டி மாதிரியான குட்டிகுட்டி வீடு. அது தான் என்னோட உலகம். நிஜமாவே பத்து வயசாகுற வரைக்கும் அதுதான் உலகம்னு நெனச்சு வாழ்ந்துட்டு இருந்தேன். ஏன்னா அந்த காம்பவுண்டு சுவத்த தாண்டி நான் வெளிய போனது இல்ல. என்ன யாரும் கூட்டிட்டு போனதும் இல்லை.

ஜாதி, மதம், இனம்! அப்ப எனக்கு நிறையா ஜாதி, மதங்கள் இருக்குன்னே தெரியாது. மேரி, பேகம், பேச்சி… எல்லாருமே ஒரே இனம்.. மனித இனம்னு மட்டும் தான் எனக்கு தெரியும். ஜாதி, மதம் பார்த்து எல்லாம் அங்க யாரும், தன் பிள்ளைக்கு பெயர் வெச்சது இல்ல. தனக்கு பிடிச்ச பேரு, பிடிச்ச நபரோட பேரு தான் வெப்பாங்க. நான் உருவான கரு யாருதுன்னு மட்டுமே தான் எங்களுக்கு தெரியுமே தவிர, விந்து யாருதுன்னு தெரியாது. அப்பறம் எங்க போய் ஜாதி, மதம், இனம் எல்லாம்.

அம்மா! என்னோட சொந்தங்கள்னு அம்மா அறிமுகம் செஞ்சு வெச்ச எல்லாருமே 24×7 என்ன சுத்தியே தான் இருந்தாங்க. அம்மாவ பெத்தவங்க யாரு, அவங்க எந்த ஊரு, வரலாறு, புவியியல் எதுவுமே தெரியாது. மத்த குழந்தைங்க கிட்ட கேட்கிற மாதிரி என்கிட்டே எந்தவொரு கேள்வி கேட்டாலும் எனக்கு தெரிஞ்ச ஒரே பதில்… தெரியாது… சில சமயம் ஏதாவது கேள்வி புரியாட்டி அம்மா…னு சொல்வேன். ஏன்னா அவங்க தான் உலகம், எனக்கு தெரியாத, புரியாத கேள்விகளுக்கு அம்மா சொல்றது தான் விடை. அவங்க எது சொன்னாலும் நான் கேட்டுப்பேன்.

மோகம்?! பொதுவாவே ஆண்களுக்கு பெண் நிர்வாண உடல் மீது ஒரு மோகம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு மோகம் இல்ல. காரணம் நான் நிறையா நிர்வாண உடலகள பார்த்திருக்கேன். காயங்களோடு, அழுகையோடு, அடிப்பட்டு, மிதிப்பட்டு, சூடு வாங்கினு நிறையா… அதனாலவோ என்னவோ ஒரு நிர்வாண உடல பார்க்கும் போது சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள ஒரு பரிதாபமும், மற்ற உயிர்கள் போல அதுவும் ஒரு உடல்ங்கிற எண்ணம் மட்டும் தான் எழுந்துச்சு.

கொடிய இரவுகள்! பகல் முழுக்க நான் அந்த குட்டி காம்பவுண்டுகுள்ள எங்க வேணாலும் சுத்தலாம், விளையாடலாம். யார வேணாலும் வம்புக்கு இழுக்கலாம். ஆனால், சாயங்காலம் சூரியம் அஸ்தமனம் ஆனதுல இருந்து, மறுநாள் காலையில உதிக்கிற வரைக்கும்.. நான், அக்காங்க சிலர் எல்லாம் சமையற்கட்டு பக்கத்துல இருக்க ஒரு ஸ்டோர் ரூம்ல தான் இருக்கனும். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ஒரு இரவு கூட நான் நிம்மதியா தூங்குனதே இல்ல. ஏதோ ஒரு திசையில ஒருந்து அந்த கூக்குரல் வெளிப்படும். அந்த சப்தம் என்னோட தூக்கத்த கொன்னுட்டு போயிடும்.

யாரும் சொல்லல… என் அக்காங்க, அத்தைங்க.. அம்மான்னு யாருமே.. அந்த சப்தம் என்ன… யாரு அந்த சப்தம் போடுறா.. ஏன் அந்த சப்தம் வருதுன்னு என்கிட்டே சொன்னதே இல்லை. அடிக்கடி அதுப்பத்தி கேட்டு தொந்தரவு பண்ணியிருக்கேன். அப்பறம் யாராவது வேற ஏதாவது பேசி என்ன அழைச்சுட்டு போயிடுவாங்க. அந்த சப்தத்து மேல எனக்கு இருந்த கோபம்… எப்படியாவது அந்த சப்தத்த கொன்னுடனும்ங்கிற வெறிய ஏற்படுத்துச்சு.

முதல் முறை! என் நாட்கள் ஆமைய போல நகர்ந்தன.. ஒவ்வொரு நாளும் என்ன நடந்துச்சுன்னு நினைவுல வெச்சுக்குற அளவுக்கு. என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்குற காலமும் பொறந்துச்சு. என் கூடவே விளையாடிட்டு இருந்த ஒரு அக்கா…எங்களவிட்டு விலக ஆரம்பிச்சாங்க. குறிப்பிட்ட நாள்ல இருந்து அவங்க எங்க கூட தூங்க வரது நிறுத்திட்டாங்க. ஏன் அக்கா வரலன்னு கேட்டா அடிச்சாங்க. அப்படி தான்டா.. இனிமேல் அவ வரமாட்டான்னு சொல்லி திட்டுவாங்க.

அழுகை! ஆரம்பத்துல கொஞ்ச நாள் அக்காவ கண்ணுலேயே காட்டல. அந்த தீப்பெட்டி உலகத்துல இருந்து ஒரு ஆள கண்ணுல படாம பார்த்துக்க முடியும்னு அப்ப தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். ரெண்டு மூணு வாரம் கழிச்சு அக்காவ ஒரு நாள் பார்த்தேன். முகம் எல்லாம் வாடி போயிருந்துச்சு. விளையாட கூப்பிட்டேன், வரல… ஒரே இடத்துல முடங்கி போய் கிடந்தாங்க. பாத்ரூம் போக எழுந்து நடந்து போகவே ரொம்ப கஷ்டபடுவாங்க. அவங்க கண்ணுல வற்றாத துளிகள் சிலவன எப்பவுமே தேங்கி இருந்துச்சு.

ஒரு நாள்… அதே சப்தம்.. ஆனா அதுக்கு முன்ன நான் அவ்வளோ சத்தமா கேட்டது இல்ல… முதல் முறையா… அது யாருடைய குரலா இருக்கும்னு யூகிக்க முடிஞ்சுது. ஆமா, என் அக்காவோட குரல். அந்த ஏழெட்டு வயசுல… எனக்குள்ள ஒரு வெறிய உண்டாக்குன சத்தம்… என் அக்காவ ஏதோ பண்ணுது… அந்த சத்தம் வர திசைய நோக்கி ஓடி போனேன். நான் நெருங்க, நெருங்க அந்த சத்தம் அதிகமாகிட்டே இருந்துச்சு. திடீர்னு, அத்தை ஒருத்தங்க வந்து என்ன தடுத்து நிறுத்திட்டாங்க.. அக்காவ யாரோ என்னவோ பண்றாங்க அத்தை… பாவம்.. நான் என்னன்னு பார்க்க போறேன்னு கத்துனேன்…மூணடி உயரம் கூட இல்லாத அந்த சின்ன பையன அத்தை ரொம்ப ஈஸியா தடுத்துட்டாங்க… என்னால அப்ப குரல மட்டும் தான் உசத்த முடிஞ்சுது. அடுத்த நாள் காலையில அக்கா கிட்ட கேட்டும் எந்த ஒரு பதிலும் கிடைக்கல.

மற்றொரு நாள்… ஒன்னு ரெண்டு நாள் கழிச்சு… மறுபடியும் அதே சத்தம்… இந்த முறை எப்படியாவது அங்க என்ன நடக்குதுன்னு போய் பார்க்கணும். இன்னிக்கி என் மூளை கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பிச்சது. அந்த சப்தம் எனக்குள்ள எரிச்சலூட்டினாலும்… இந்த முறை அந்த சப்தம் நிக்கிற வரைக்கும் பொறுமையா இருக்கணும்… அதுக்கப்பறம் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்னு முடிவு பண்ணேன். மாடிப்படி கீழ யாருக்கும் தெரியாம காதப்பொத்திட்டு உட்கார்திருந்தேன். அந்த சப்தம் நின்ன ஒருசில நிமிஷத்துக்கு அப்பறமா… அந்த மர படிக்கட்டுல ஒரு பெரிய நிழல் கடந்து போச்சு.

அதே ரூம்… அந்த நிழல் கடந்து போனதுக்கு அப்பறம்… மெல்லமா மேல ஏறி போய் அக்காவ பார்க்க முயற்சி பண்ணேன். ரெண்டு, மூணு நாளுக்கு முன்னாடி நான் அளவுக்கு அதிகமா கேட்ட அந்த சப்தம் வந்த அதே ரூம்…. கதவு திறந்த நிலையில இருந்துச்சு… அந்த கதவ நெருங்க, நெருங்க எனக்குள்ள ஒரு பதட்டம். எங்க திரும்ப அந்த சப்தம் வந்து என்ன ஏதாவது பண்ணிடுமோனு பயம்…. அஞ்சு, பத்து நிமிஷம் அந்த கதவ கடக்காம… பயந்து நின்னுட்டு இருந்தேன். அந்த சப்தம் திரும்ப வரல.. இனி வராதுன்னு முடிவு பண்ணிட்டு.. அந்த கதவ நெருங்குனேன்.

அக்கா! பாதி திறந்திருந்த அந்த கதவு வழியா நான் பார்த்த அந்த காட்சி இன்னும் என நெஞ்சுக்குள்ள ஆறாத வடுவா ஆழமா பதிஞ்சிருக்கு. அதுக்கு முன்னாடி என் அக்காவ நான் அப்படி ஒரு நிலைமையில பார்த்தது இல்ல. என் அம்மாவவிட, நான் அதிகமா படுத்து உறங்கின அந்த மடி முழுக்க இரத்தம். என்ன தூக்கி வளர்த்த அந்த தோள்ல நகக் கீறல்கள். நான் என் கண்ணுல முதல் முறையா வலியோட வழிந்தோடிய கண்ணீர் கொண்ட தருணம் அது.

தடுத்தாள்! அக்கானு நான் கூப்பிடுற அந்த சத்தம் என் குரல்வளைத்த தாண்டி வெளிய வரல… என் குரல்வளையம் முழுக்க ஒரு அழுத்தம், வலி… அது என் குரலை அமுக்கிட்டு இருந்துத்து. மெல்ல, மெல்ல அந்த வலிய தாண்டி அக்கான்னு கூப்பிட்டேன்… “கிட்ட வராதடா ராஜா….”ன்னு அக்கா அழுகுரல்ல சொன்னா… அவ சொல்ல சொல்ல… நான் அவள நெருங்குனேன். அக்கா, அக்கான்னு சொல்றேனே… அவங்க என் கூட பிறந்த அக்கா இல்ல…. என்ன தூக்கி வளர்த்த அக்கா. வாயார அக்கான்னு நான் கூப்பிட்டாலும் அவங்க எனக்கொரு அம்மா மாதிரி.. அவங்கள அப்படியொரு நிலையில பார்த்த பிறகு… நான் வாழ்ந்துட்டு இருந்த அந்த தீப்பெட்டி உலகம் ஒரு நரகம்னு புரிஞ்சுக்கிட்டேன்.

எது முடிவு… ஒட்டுமொத்தமா எல்லாரையும் தேவதாசின்னு சொல்லிட்டு இந்த சமூகம் நகர்ந்திடும். தன்னோட சொந்த பந்தங்களால விற்கப்பட்டு, ஊர் பேர் தெரியாத இடத்துல பொழப்பு நடத்த வந்து வழிமாறி, திசை மாறி, ஏமார்ந்து , கடத்துப்பட்டு வந்த எத்தனையோ பேர்.. கடைசியில… யாரோட இனிஷியல்ல பிறந்தவன்னு தெரியாத தன்னோட பிள்ளைங்கள வளர்க்க வேற வழியில்லாம அதே இடத்துல தேங்கிப் போயிடுறாங்க.