உடல் கட்டுப்பாடு:என்னப்பா இவ்வளவு குண்டா இருக்க..! உன்னாலலா 10 படி கூட ஏற முடியாது..! இப்படிப்பட்ட கேலி பேச்சுக்களை கேட்டு, உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற திடீர் விபரீத முடிவுக்கு வந்தவரா நீங்கள்…!? அப்போ, கண்டிப்பா உங்களுக்கான பதிவுதான் இது. உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. மனிதனாக ஏனோ பிறந்தோம்.. வாழ்ந்தோம்… செத்தோம்…! இப்படிப்பட்ட வாழ்வியலை எந்த ஒரு மனிதனும் மேற் கொள்ள கூடாது என்பதே பலரின் நோக்கமாக இருக்கும். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் எல்லோரும் சூழ்நிலை கைதிகளாக மாறி விடுகின்றோம்.
நமக்கு பிடித்தமான வாழ்வை நம்மால் வாழ முடியாமல் போய்விடுகிறது. இதனை போன்றுதான், நாம் நினைப்பது போல நம் உடல் நிலையும் இருப்பது இல்லை. நாம் மிக கச்சிதமான உடல் அமைப்பை கொண்டவராக இருக்க வேண்டும் என அதிகம் விரும்புவோம். ஆனால், நமக்கு நடப்பது முற்றிலும் தலைகீழாக இருக்கும். நம் எடையை எப்போதும் சீராக வைக்க நாம் பெரிதும் விரும்புவோம். இது நடக்கவில்லை என்றால் அதற்காக உடனே எடையை குறைக்க பல முயற்சிகளை எடுப்போம். இது எத்தகைய விளைவுகளை உங்களுக்கு தரும் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்
அளவான உடல் அமைப்பு…
நம்மில் பலருக்கு இந்த ஆசை இருக்கத்தான் செய்யும். உடல் எடை மிக துல்லியமாக நாம் நினைத்தது போலவே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், அது உங்கள் மனதை பாதிப்பதாக நீங்களே எண்ணி கொள்வீர்கள். தேவையற்ற உணவுகளை எல்லாம் சாப்பிட்டு விட்டு அதன் பிறகு எடை குறைக்க வேண்டும் என நினைப்பது சற்றே கடினமான விஷயம்தான்.
அதிலும் உடனடியாக உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்வது, திடீர் உடற்பயிற்சி, தேவையற்ற உணவு கட்டுப்பாடு…இப்படி செய்தால் உடல் எடை குறையுதோ இல்லையோ, அதை தவிர்த்து பல்வேறு கோளாறுகள் உடலுக்கு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹார்மோன் சீர்கேடு..! உடலின் ஆரோக்கியத்தை பொருத்தே அதன் செயல்பாடும் அமையும். இதில் ஹார்மோன்களும் அடங்கும். நீங்கள் அதிக உடல் எடை கொண்டவராக இருந்து, உடல் எடையை குறைக்க வேண்டும் என முடிவு செய்தால் கட்டாயம் உங்கள் ஹார்மோன்களின் அளவை வேறுபடுத்தும். அத்தோடு உடல் அளவில் மட்டுமில்லாமல் உளவியல் ரீதியாகவும் பிரச்சினைகளை தரும்.
பெண்களுக்கு என்னவாகும்..? ஆண்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் அவர்களின் உடல் அமைப்பை பொருத்து வேறு விளைவுகள் ஏற்படும். அதே போன்று, பெண்களுக்கும் இது பாதிப்பை தரும். மாதவிடாய் கோளாறுகள், இதய நோய்கள், கர்ப்பப்பை பிரச்சினை, மன அழுத்தம் போன்றவை ஏற்படும். இதன் விளைவு, பல மடங்கு கர்ப்பத்திற்கு பிறகு உடனடியாக எடை குறைக்க வேண்டும் என எண்ணுவோர்க்கு அதிகரிக்கும்.
முடி அவ்வளவுதான்..! யாரோ செய்யும் கேலி கிண்டல்களை கேட்டு உங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் அது முடி’க்கும் பெரிய இழப்பை கொடுக்கும். திடீர் மாற்றங்கள் மனிதனால் மட்டும் ஏற்று கொள்ள முடியாதது இல்லை… உடலுக்கும் அப்படித்தான். நமது உடலில் வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் மாற்றங்கள் நடந்தால் அது முழு ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அந்த வகையில், முடி கொட்டுதல், வழுக்கை, அடர்த்தி குறைவு போன்றவை நேரலாம்.
நோய்களுக்கு வழியே..! திடீரென்று ஏற்படும் உணவு மாற்றங்கள் உடலின் செயல்திறனை பெரிதும் மாற்றி விடும். இதனால் எதிர்ப்பு சக்தி மண்டலம் கூட பாதிக்க செய்யும். உடல் எடை குறைக்கும் டயட்கள் உங்கள் எதிர்ப்பு சக்தியை குறைத்து நோய்கள் உடலில் ஏற்பட வழி வகுக்கும். சில சமயங்களில் நோய்வாய்ப்பட்டு உடலின் முழு ஆரோக்கியமும் கெடக்கூடும்.
தோல் சுருக்கங்களும் கூட..! புசுபுசுவென இருந்த நீங்கள் உடனடியாக எடை குறைப்பு என்ற வட்டத்திற்குள் வந்ததும் அது உங்கள் உடலின் தோலை பெரிதும் பாதிக்கும். அதாவது, தோல்கள் விரைவிலேயே சுருக்கி தொங்க ஆரம்பித்து விடும். எனவே எப்போது உடல் எடையை குறைக்க விரும்பினாலும் அதற்கென்று உள்ள மருத்துவரை அணுகி பிறகு முடிவு செய்யுங்கள்.
மலச்சிக்கலே பெரும்சிக்கல்..! உங்கள் உணவில் மாற்றம் ஏற்பட்டால் கட்டாயம் அது உங்கள் வயிறு சார்ந்த பிரச்சினையாக மாற கூடும். டயட் என்ற பெயரில் நீங்கள் இதை சாப்பிட கூடாது, அதை சாப்பிட கூடாது என்ற கட்டுப்பாட்டு கோட்டுக்குள் இருந்து கொண்டால் அது மலசிக்கல் போன்ற மிக கடினமான சிக்கலை உங்களுக்கு ஏற்படுத்தும்.
தூக்கம் போச்சே..! உடல் எடை கூடி கொண்டதால் பலவித மாற்றங்களையும் உங்கள் அன்றாட வாழ்வில் செய்திருப்பீர்கள். இதன் விளைவு, உங்கள் தூக்கத்தையும் சேர்த்தே கெடுத்து விடுகிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இரவில் உங்கள் தூக்கத்தை முற்றிலுமாக இது இழக்க செய்து விடும். குறிப்பாக ஆண்களுக்கு இது விந்தணு குறைபாடு பிரச்சினையாக கூட மாறலாம்.
முக அழகிற்கு முற்றுப்புள்ளி..! உடல் ஆரோக்கியத்தைத்தான் இது கெடுகிறது என்று நினைத்தால் முக ஆரோக்கியத்தையும் சேர்த்தே கெடுத்து விடுகிறது. திடீர் ஊட்டச்சத்து குறைவால் முக அழகு பெரிதும் பாதிப்படையும். தோலின் நிறம் மங்கல், கோடுகள் விழுதல், முக பருக்கள் போன்றவை உருவாகும். மேலும் முக சருமம் சுருங்கவும் செய்யும்.
அப்போ என்னதான் செய்யணும்..? உடல் எடை கூடினால் இது வரும், குறைத்தால் அது வரும் என சொல்றீங்களே..’ அப்போ எதைத்தான் செய்வது என்ற கேள்வி உங்கள் அனைவருக்கும் இருக்கும். இதற்கு பதில் மிகவும் எளிமையானதே. எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது சிறிது நாட்கள் எடுத்து கொள்ளத்தான் செய்யும். உடனடி முடிவுகள் அந்த நேரத்திற்கு மட்டுமே இனிமையாக இருக்கும். அதன்பின் அது எத்தகைய விளைவை தரும் என்பதை சிந்திக்க வேண்டும். நீங்கள் உடல் எடை குறைக்க விரும்பினால் அது சற்றே காலம் எடுத்து கொள்ளும். அதற்காக உணவில் மோசமான கட்டுப்பாடு இருக்க கூடாது.
எத்தகைய உணவு சாப்பிடலாம்..? உடல் எடை குறைக்க விரும்புவோர், காய்கறிகள் பழங்களை அதிகம் உணவில் எடுத்து கொண்டாலே போதும். அத்துடன் ஃபாஸ்ட் ஃபூட்ஸ் போன்றவற்றை சாப்பிட்டு மறுபடியும் உடலை கெடுத்து கொள்ளாதீர்கள். உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் அதற்கென்று உள்ள உடற்பயிற்சிகளை முறையாக செய்யுங்கள். அத்துடன் எதை செய்தாலும் உங்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றியமையாததாகும்.