சூடான செய்திகள்:பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணத்தில் பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் எதிர்பார்ப்புகளும், கனவுகளும்தான். நான் டாக்டருக்கு படித்தவன். எனக்கு பத்தாவது வரை படித்த பெண்ணை திருமணம் செய்துவிட்டார்கள் என்பார்கள் சிலர்.
‘எனக்கு கணவராக வருபவர் நன்றாக ஆங்கிலம் பேசுவார், நன்றாக கார், பைக் ஓட்டுவார், பெண்களிடம் அதிகம் பேச மாட்டார் என்று நினைத்திருந்தேன்’ என்பார்கள் சிலர். ‘குண்டாக இருக்கிறார், பல்லு எடுப்பாக இருக்கிறது, கருப்பாக இருக்கிறார் இவரோடு வெளியில் செல்லவே அசிங்கமாக இருக்கிறது’ என்பார்கள் சிலர். இவை, சமூகம் நம்மைப் பார்த்து என்ன சொல்லும் என்பதை மனதில் கொள்வதால் ஏற்படும் பிரச்சனை.
நாம் நமக்காக வாழ்கிறோம். சமூகம் என்ன நினைக்கும் என்பதை கவனத்தில் கொள்வதற்கு முன் உங்களை கல்யாணம் செய்து கொண்டவரின் மனநிலை பற்றி யோசியுங்கள். நாம் அழகாக இருக்கிறோம், நம்மிடம் இவ்வளவு திறமையிருக்கிறது என்பது நினைவில் இருப்பது போல் நாம் பட்ட அவமானங்களையும் நினைவில் கொள்வது நல்லது.
அது, நம் கால்களை எப்போதும் தரையில் வைத்துகொள்ள உதவும். எவ்வளவு பெரிய சண்டையானலும் சரி அதை தீர்த்து வைக்க, மூன்றாம் நபரின் துணையை நாடாதீர்கள். அது பெற்றோராக இருந்தாலும் சரி. உங்களைப் பற்றிய ரகசியங்கள் உங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும்.
மீறி வெளியில் தெரிந்தால் அது உங்கள் மீதான நம்பிக்கையை குறைத்துவிடும். மகிழ்ச்சி, கோபம் இவையெல்லாம் மற்றவர்களால் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் திருப்தி நம் மனதில் இருந்து வந்தால்தான் உண்டு.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ராஜா, ராணி. சினிமாவில் நடப்பதெல்லாம் யதார்த்த வாழ்க்கையிலும் நடக்கும் என்று எண்ணுவது தவறு. உங்கள் கனவுகளோடு சினிமாக்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். யதார்த்தம் என்பது சினிமாக்களில் வருவதைக் காட்டிலும் நிறைய மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.