உடல் கட்டுபாடு:தற்போது ஆண்களிடையே சிக்ஸ் பேக் மோகம் அதிகரித்துவிட்டது. மேலும் அந்த சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு என்னும் ஊக்கமருந்தை சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்படி ஸ்டீராய்டு பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிக்ஸ் பேக் என்றால் என்ன? பொதுவாக உடலில் சேரும் கொழுப்புக்கள் உடலியக்கத்தின் காரணமாக கரைந்துவிடும். ஆனால் சில கொழுப்புக்கள் கரையாமல் ஆங்காங்கு தங்கிவிடும். அப்படி தங்கும் கொழுப்புக்களைக் கரைத்து வயிற்றுப் பகுதியில் தசைகளாக உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். இந்த சிக்ஸ் பேக்கை நீண்ட நாட்கள் பராமரிப்பது என்பது கடினம். அதற்காக தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு, சிலர் ஸ்டீராய்டு மருந்தை எடுத்து கொள்கிறார்கள்.
ஸ்டீராய்டு எடுத்துக் கொள்வதால், உடலில் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் ஆண்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் அளவு அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும். தசைகளின் வளர்ச்சி அதிகமாகும்.
ஸ்டீராய்டு எடுப்பதால், ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், அதிக அளவிலான முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு, நரம்பு தளர்ச்சி போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே உடல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு, தினமும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சிக்ஸ் பேக் வைப்பவர்கள், உடலில் கொழுப்பை 9 சதவீதமாகவும், நீர்ச்சத்தை 40 சதவீதமாகவும் குறைத்து, புரதச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். இப்படி புரதச்சத்தை அதிகம் எடுப்பதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் செயலிழக்கக்கூட வாய்ப்புள்ளது. மேலும் சிக்ஸ் பேக் வைப்பதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால், உடலின் வெப்பமும் அதிகமாகும் என்கிறார்கள்.
சிக்ஸ் பேக் வைப்பதற்காக, கடுமையான உடற்பயிற்சியை செய்யும் போது, தசைநார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஒருவருக்கு மிகவும் வலிமையான தசைநார்கள் தான் அவசியம். ஏனெனில் தசைநார்கள் தான் முதுகு வலி, உடல் வலி, காயம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். ஆனால் சிக்ஸ் பேக் வைக்க மேற்கொள்ளும் உடற்பயிற்சியினால், கடுமையான உடல் வலிகள் மற்றும் பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்க நேரிடும்.
சிக்ஸ் பேக் அழகு என்றாலும், அழகுக்கு ஆசைப்பட்டு, ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் உடல் கட்டமைப்புடன் இருக்க தினமும் உடற்பயிற்சியுடன், போதிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுங்கள். அழகை விட ஆரோக்கியம் தான் முக்கியம்.