அசைவ சாப்பாடு:குழம்பு இல்லாத ஓர் அசைவ சாப்பாட்டை தமிழக மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மீனோ, கோழியோ, மட்டனோ, கருவாடோ குழம்பில் கிடந்தால் அன்றைய விருந்து அட்டகாசமாகிவிடும். அசைவ பிரியர்கள் பலருக்கும் சிக்கன் குழம்பை விட மட்டன் குழம்பு தான் மிகவும் பிடிக்கும்.
அதற்கு காரணம் மட்டன் குழம்பில் இருக்கும் ருசியும் வாசனையும் தான். மட்டனை குழம்பை ஊற்றும் போது வரும் மணத்துக்கே பல பேர் காத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் பல நேரங்களில் நம் வீடுகளில் வைக்கும் மட்டன் குழம்புகள் மணப்பதில்லை. மட்டனை குக்கரில் வேக வைக்கும் போதே அதன் மணம் அந்த அறை முழுவதும் பரவ வேண்டும்.
ஆனால் பெரும்பாலான இல்லத்தரசிகள் செய்யும் சில சிறு தவறுகளால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. எப்போதுமே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மட்டனை வேக வைக்கும்போது அதனுடன் கட்டாயமாக மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சிறிதளவு கல் உப்பு சேர்த்து தான் வேக வைக்க வேண்டும். அப்போது தான் குழம்பு ருசி கூடும் மணமும் மூக்கை துளைக்கும்.
சமையல் குறிப்புகள்:
1. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரை தூவி அதனுள் பிஸ்கட் வையுங்கள். பிஸ்கட் நீண்ட கெடாமல் இருக்கும்.
2. உருளைக்கிழங்கு கறி செய்யும் போது சீரகத்துடன் கொஞ்சம் ஓமத்தையும் சேர்த்து சமைத்தால் வீடே மணக்கும். எளிதில் செரிக்கும்.
3. காலிப்ளவேர் சமைக்கும் போது ஒரு துளி பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை கலர் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.
4. சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னாள் சிறிதளவு உப்பை தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது
5. இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்துக்கு பதிலாக சோயா மொச்சையை பயன்படுத்தி அரைத்து இட்லி செய்தால் அதிக சத்தான இட்லி தயார்
6. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
7. முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.