கசப்பான உண்மை இது, பெற்றோர் மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் இது. இந்த சமூகம் கிரிமினல்கள், ரவுடித்தனம் செய்பவர்கள், ஊருக்கு அடங்காதவர்கள் என்று பலரை ஒதுக்கிவைக்கிறது. அப்படிப்பட்டவர்களில் சிலரை ‘டீன்ஏஜ்’ பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களுடன் ஒட்டி உறவாட ஆசைப்படுகிறார்கள். நெருப்போடு விளையாடுவது போன்ற விபரீதம் அது என்று அவர்களுக்கு தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் அந்த விளையாட்டுக்கு அவர்கள் தயாராகி விடுகிறார்கள்.
இப்படி கிரிமினல்களையும், குற்ற பின்னணி கொண்டவர்களையும் டீன்ஏஜ் பெண்கள் விரும்புவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தவறானவர்கள் என்று தெரிந்த பின்பும் தயக்கமில்லாமல் அவர்கள் வலையில் போய் இளம் பெண்கள் விழ என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
டீன் ஏஜில் பெண்களிடம் உடல்ரீதியான, மனோரீதியான மாற்றங்கள் நிறைய ஏற்படும். அப்போது ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்கரீதியாக பார்க்கும் எண்ணம் அவர்களிடம் மேலோங்கும். ‘பலரும் தவறென்று சொல்வதை நாம் ஏன் சரியென்று சொல்லக்கூடாது?’ என்ற கேள்வியை தனக்குள்ளே கேட்டு, அந்த தப்புக்குள் சரியென்று வாதிட என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று அவர்கள் தேடத் தொடங்குகிறார்கள். இப்படித்தான் ‘நெகட்டிவிட்டி’ என்ற எதிர்மறையின் மீது அவர்களுக்கு முதல் ஈர்ப்பு ஏற்படுகிறது.
ஊடகங்களில் சில ‘வில்லன்களை’ பற்றி வெளிவரும் கட்டுரைகளை இவர்கள் படிக்கும் போதும், அவர்களை பற்றிய புத்தகங்களை வாசிக்கும்போதும், அவர்கள் செய்யும் எதிர்மறையான சாகசங்களை மட்டும் நினைவில் நிலைநிறுத்தி வியக்கிறார்கள். தொடர்ந்து அவர்களை பற்றியே சிந்தித்து அவர்களை தங்கள் மனதுக்குள் ஒரு ஹீரோ லெவலுக்கு உயர்த்திவிடுகிறார்கள். அந்த நேரங்களில் சினிமாக் களிலோ, டெலிவிஷன் தொடர்களிலோ வரும் வில்லன் கதாபாத்திரங்களை அவர்கள் வீரம் நிறைந்த கதாபாத்திரம் போல் உணருவார்கள். அதற்கு அவர்கள் மனது பழகிவிட்டால், நிஜ வாழ்க்கையில் வில்லன்களாக இருப்பவர்களுக்கும், ஹீரோ அந்தஸ்து கொடுத்து ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
டீன்ஏஜ் பெண் ஒருத்தி, ரவுடி ஒருவரை காதலிக்கிறாள் என்றால் அதற்கு அவள் வாழும் இடத்து சுற்றுச்சூழல், அவளது தோழிகள், அவளது குடும்பச்சூழல், எதிர்மறை கதாபாத்திரங்களை விரும்பும் அவளது எண்ணங்கள் போன்ற பல விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. சமூகம் அந்த ரவுடி மீது வைத்திருக்கும் பயத்தை, அவள் மரியாதை என்ற கணக்கில் தவறாக எடுத்துக்கொள்வாள். எல்லோரும் அவருக்கு அஞ்சுவதால் தனக்கு அவர் மூலம் மிகுந்த பாதுகாப்பு கிடைத்துவிடும் என்று தவறாக நம்புகிறாள்.
தோழிகளில் சிலர் ரவுடி ஒருவரிடம் இருக்கும் ஒருசில நல்ல குணங்களை சொல்லும்போது, அவரை சிறந்த மனிதர் என்ற அந்தஸ்துக்கு தவறாக கணித்து விடுகிறாள். அவர்களது தோற்றமும், அவர்கள் கையில் புழங்கும் பணமும், அவர்களது நெட்ஒர்க் செயல்பாடுகளும்கூட சில பெண்களை கவர்ந்துவிடுகிறது. ஒருசில பெண்கள், அத்தகைய ரவுடிகள் காதல் கலைகளிலும் வல்லவர்களாக இருப்பார்கள் என்றும் தவறான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இப்படி ரவுடிகளையும், குற்றபின்னணி கொண்டவர்களையும் டீன்ஏஜ் பெண்கள், விரும்ப பல காரணங்கள் இருக்கின்றன.
குற்றபின்னணி கொண்டவர்களை காதலிப்பவர்களும், கல்யாணம் செய்துகொண்டவர்களும் வாழ்க்கையில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் தவறை உணர்ந்து, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கும்போது அவர்களை மீட்டுக்கொண்டு வரும் முயற்சியில் குடும்பமும், சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு மனோதத்துவ கவுன்சலிங் உதவும். தவறான அபிப்பிராயங்களை மனதில் இருந்து அகற்ற தியானமும் கைகொடுக்கும். அதே நேரத்தில் தங்கள் டீன்ஏஜ் பிள்ளைகள் இதுபோன்றவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க பெற்றோர் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
உங்கள் மகளுக்கு 12 வயதாகும்போதே அவளிடம் நட்பு பாராட்டத் தொடங்கிவிடுங்கள். அந்த வயதை கடக்கும்போது பெற்றோரின் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே வந்து கருத்துக் களாலும், எண்ணங்களாலும் தன்னைத்தானே வடிவமைத்துக்கொள்ள ஒவ்வொரு பெண்ணும் முயற்சிப்பாள். அப்போது அவர் களுக்கு பெற்றோர் நம்பிக்கை, பாதுகாப்பு, அன்பு, மரியாதை, சுதந்திரம் போன்ற அனைத்தையும் வழங்கி, நல்ல தோழமையை உருவாக்கிக்கொடுத்து அவர்களிடம் நேர்மறையான சிந்தனையை வளர்க்கவேண்டும்.
பெற்றோரும் நல்லவர்களாக வாழ்ந்து காட்டி, மகள்களுக்கு ரோல்மாடலாக திகழவேண்டும். தவறான தொடர்புகளை பெற்றோர் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. மகள்களுக்கு ரோல்மாடலாக திகழவேண்டும். தங்களுக்குள் சண்டையிட்டு குடும்பத்தில் நிம்மதியற்ற சூழலையும் உருவாக்கிவிடக் கூடாது. பெண்களுக்கு சுயகவுரவம் மிக முக்கியம் என்பதை உணர்த்தவேண்டும்.
அவர்களை மதிப்புமிக்கவர்களாக வளர்த்தெடுக்கவேண்டும். ஏழையாக இருந்தாலும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கையூட்டவேண்டும். வாழ்க்கையில் கசப்பான சம்பவங்களை சந்தித்தவர்களும், மற்றவர்களால் வஞ்சிக்கப்பட்டவர்களும், தங்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையாது என்ற எண்ணத்தில் இருப்பவர்களும் குற்ற பின்னணி கொண்டவர்களை காதலிக்கிறார்கள்.
பெண்ணின் வாழ்க்கை ஒரு பூமாலை போன்றது. குற்ற பின்னணி கொண்டவர்கள் கையில் அவர்கள் வாழ்க்கை ஒப்படைக்கப்பட்டால் அது (குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக) சின்னாபின்னமாகிவிடும்.