நான் என் கணவன் நண்பருடன் நெருங்கி பழகுகிறேன்
டியர் மேடம், எனக்கு வயது 32. ரொம்பவும் சுமாரான அழகுதான். நானும், என் கணவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையில், அழகில், ஆளுமையில் எல்லாவற்றிலும் என் கணவருக்கும், எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. நான் அவருக்கு சரியான ஜோடியில்லையோ என்கிற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு.
எனக்கும், என் கணவருக்கும் பெரிதாக சொல்லிக் கொள்கிற அளவுக்கு அப்படியொன்றும் அன்னியோன்யம் இல்லை. நான் சுமாரானவள் என்பதை அடிக்கடி அவரது பேச்சும், செயல்களும் குத்திக் காட்டிக் கொண்டே இருக்கும். என் கணவருக்கு அடுத்த பொசிஷனில் இருப்பவர் இன்னொரு ஆண். அவரும் என் கணவரைப் போலவே அழகானவர். கம்பீரமானவர். எனக்கும் அவர் நல்ல நண்பர்.
அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய கேபினுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பார் அந்த நண்பர். முதலில் சாதாரண பேச்சுவார்த்தையில் தொடங்கிய நட்பு, மெதுவாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. எதேச்சையாக தொட்டுப் பேசுவது, கையைப் பிடிப்பது என மாறியது. தனிமையில் இருக்கும் போது எனக்குப் பின்னால் வந்து கண்களைப் பொத்துவார். தோள்களைத் தொடுவார். ஆரம்பத்தில் நானும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தெரியாமல் செய்கிறார் என்று அலட்சியப் படுத்தினேன்.
போகப் போக அவர் தெரிந்துதான் செய்கிறார் எனப் புரிந்தது. பல முறை எச்சரித்தேன். அப்போதெல்லாம் அவர் தன் மனைவியைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார். ‘மனைவியுடனான உறவு சரியில்லை, உன்னை மிகவும் பிடித்திருக்கிறது’ எனப் புலம்புவார். நல்லவேளையாக அவர் என்னிடம் நடந்து கொள்கிற முறை என் கணவர் உள்பட அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது.
அப்படித் தெரிந்தால் என் நிலை என்னாகுமோ என நினைக்கவே பயமாக இருக்கிறது. அந்த நண்பரிடம் அன்பாகவும், கோபமாகவும் இதெல்லாம் வேண்டாம் எனச் சொல்லிப் பார்த்தும் பலனில்லை. இதிலிருந்து நான் எப்படி மீள்வது? அந்த நண்பரை எப்படிக் கட்டுப்படுத்துவது? – பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.
அன்புத் தோழி, நண்பர் என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த நபரின் நட்பும், ஸ்பரிசமும் வேண்டாம் என உங்கள் வாய் சொன்னாலும், மனது வேண்டும் என்றே விரும்புகிறது. எப்போது ஒரு ஆணின் நடவடிக்கைகள் உங்களுக்கு தர்ம சங்கடத்தைத் தருகிறதோ, பிடிக்கவில்லையோ அதை நிறுத்தும்படி உறுதியாகச் சொல்வது உங்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் நினைத்திருந்தால், அந்த நபரிடம் கண்டிப்பான குரலில், கோபத்துடன் அதைச் சொல்லி நிறுத்தியிருக்கலாம்.
அப்படியும் அவர் கேட்காமல் இருந்தால், உங்கள் கணவரிடமோ, மேலதிகாரியிடமோ புகார் செய்து, அவர்கள் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அது எதையும் நீங்கள் விரும்பவில்லை என்பதை உங்கள் கடிதமே சொல்கிறது. கடிதத்தின் ஆரம்பத்திலேயே நீங்கள் ரொம்பவும் சுமாரான அழகுள்ளவர் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதே சமயம் உங்கள் கணவரும், நண்பரும் உங்களைவிட எல்லாவிதங்களிலும் உயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
உங்களுடைய அழகையும் தோற்றத்தையும் அடிக்கடி உங்கள் கணவர் மட்டம் தட்டிப் பேசுவதாலும், அதே நேரம் யாரோ ஒரு ஆண் உங்களிடம் அன்பாகவும், உங்களை நேசிப்பதாகவும் சொல்லியதால் உண்டான வினை தான் இது எல்லாம். நண்பரின் அத்துமீறல்கள் தவறு எனத் தெரிந்தாலும், உள் மனசு அது வேண்டுமென்றே விரும்பியிருக்கிறது. கணவரால் சீண்டப் பட்ட உங்கள் ஈகோவுக்கு இது சந்தோஷம் தருகிறது. இது தற்காலிக இன்பம்தான் என்பது உங்கள் மனதுக்குப் புரியவில்லை. விஷயம் உங்கள் அலுவலகத்தில் கசிந்தால், அசிங்கமும், அவமானமும் உங்களுக்குத்தான். உங்களுடன் சேர்ந்து அவமானப்படப் போகிறவர் உங்கள் கணவரும்தான்.
தன் மனைவியைப் பற்றிக் குறை சொல்லி, அதன் மூலம் உங்கள் இரக்கத்தை சம்பாதித்து, அதையே தனக்கு சாதகமாக்கிக் கொள்ளவும் நினைத்திருக்கிறார் உங்கள் நண்பர். பெண்களை ஏமாற்ற நினைக்கிற பல ஆண்களின் ஆயுதம் இது. அதை நம்பி மோசம் போகாதீர்கள். உங்களிடமிருந்து விலகும்படி நண்பரிடம் கடுமையாகச் சொல்லுங்கள். முடிந்தால் அவரை வேறு அலுவலகத்துக்கு இடம் மாற்றுங்கள் அல்லது நீங்கள் மாறிக் கொள்ளுங்கள். அழகு, அந்தஸ்து எனப் பல விஷயங்களில் நீங்கள் உங்கள் கணவரைவிடக் குறைந்தவராக இருக்கலாம்.
ஆனால், கல்யாணமென்று ஆன பிறகு, அதையெல்லாம் பெரிதுபடுத்தி, உங்கள் நிம்மதியை நீங்களே சிதைத்துக் கொள்ளாதீர்கள். கணவருடன் உட்கார்ந்து அன்பாக, அமைதியாகப் பேசுங்கள். அவரது பேச்சு உங்களை எந்தளவு காயப்படுத்துகிறது எனப் புரிய வையுங்கள். நீங்கள் அவர்மீது எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை வார்த்தைகளாலும், செயல்களாலும் நிரூபித்துக் கொண்டே இருங்கள். தடுமாற்றம் வேண்டாம். வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. நம்பிக்கையோடு இருங்கள்.
…………………………………………….
டியர் டாக்டர், எனக்கொரு விசித்திரமான பிரச்னை. 23 வயதாகும் எனக்கு சமீப காலமாக ஒரு இளைஞனைப் பற்றியே சிந்தனை. அவனை நான் அடிக்கடி சந்தித்ததுகூட இல்லை. அந்த முகத்தை எப்படி மறக்க முயற்சித்தாலும் என்னால் முடியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் எனக்கே கட்டுப்பாடு இல்லாத மாதிரி உணர்கிறேன். தெருவில் இறங்கி நடந்தால் எங்கே அவனைப் பார்த்து விடுவேனோ, கடைக்குச் சென்றால் எதிரில் வருவானோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.
அவனுடன் வெளியே போகக் கூடாது என்றும், அப்படி எங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்றும் தோன்றினாலும், முடியவில்லை. இப்படியொரு கற்பனையான உறவு என் மண்டையில் ஆக்கிரமிக்கக் கூடாது என்றும் நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு அந்த இளைஞன் என்னைத் தீவிரமாகக் காதலித்ததாக நம்புகிறேன். என்னை வெறித்தனமாகக் காதலித்த அவன், ஒரு கட்டத்தில் எனக்காக உயிரையே மாய்த்துக் கொள்ளத் துணிந்ததாகவும், நான்தான் அவனைக் காப்பாற்றியதாகவும் நம்புகிறேன்.
அவனைப் பல முறை தொடர்பு கொண்டு பேசிய போது, அவனுக்கு என் மீது அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று சொன்னான். ஆனால், அது எதையுமே என்னால் நம்ப முடியவில்லை. அவன் என்மீது கோபப்பட்டாலும், என்னை மன்னித்து விட்டான். (பள்ளியில் படிக்கிற போது, அவன் என்னைக் கிண்டலடித்த போது நான் அவனை மன்னித்திருக்கிறேன்… ஒருவேளை அதுதான் காரணமாக இருக்குமோ..?) அவனுக்கு என் மீது காதல் இல்லாவிட்டாலும், அவனுடன்தான் வாழ்வேன் என்கிற கற்பனையில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு அவனை மறுபடி சந்திக்க ஆசைதான். ஆனால், பயமும் இருக்கிறது. ஒரு முறை அவன் என்னைக் கடந்து சென்றான். நீண்ட நேரம் என்னை வெறித்துப் பார்த்தான். நான் அவனை அலட்சியப்படுத்துவது, அவனை பாதிக்கிறது என நம்புகிறேன். ஒவ்வொரு முறை அவனை சந்திக்கிற போதும், நான் அதிர்ச்சியில் உறைகிறேன். அந்தச் சூழல் எங்கள் இருவருக்குமே சுமுகமானதாக இருக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எனக்குத் தெரிவதில்லை.
கடந்த காலத்தில் அவனுக்கு என் மீது காதல் இருந்திருக்கிறது. அப்போது நான் அவனை நம்பவில்லை என்பதால், பிறகு அவனுக்கு அந்தக் காதல் காணாமல் போய் விட்டது. கடந்த காலத்தை நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருந்தால் இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்காது என நினைத்துப் பார்க்கிறேன். இது என் வாழ்க்கையையே சூன்யமாக்கி விட்ட மாதிரி நினைத்து, படுக்கையில் தினம் தினம் அழுகிறேன். இந்த வலியிலிருந்து நான் மீளவும், மறுபடி அவனை சந்திக்கிற போது நல்லவிதமாக நடந்து கொள்ளவும் எனக்கு என்ன வழி? – பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
அன்புச் சகோதரி, ஒருவரை மறப்பது என்பது அத்தனை சுலபமான காரியமில்லைதான். ஆனால், மறப்பது என்பதையே மென்மையான விஷயமாக அணுகலாம். முதலில் இதெல்லாம் உங்கள் கற்பனையின் விளைவுகள் என்பதை மறுபடி மறுபடி சொல்லிக் கொள்ளுங்கள். உங்களுடைய செயல்களுக்கு நியாயம் தேடாதீர்கள். கடந்த காலத்தில் நான் அவனை நம்பாததால் அவனுக்கு என்மீதான காதல் போய் விட்டது என்கிற மாதிரியான எண்ணங்களை ஒதுக்கித் தள்ளுங்கள்.
அழுது தீர்க்க வேண்டும் எனத் தோன்றினால் முடிகிற வரை அழுங்கள். அது உங்களுக்குள் உள்ள கோபம், ஏமாற்றம் எல்லாவற்றையும் நீர்க்கச் செய்து, மனதை லேசாக்கும். காதல் தொடர்பான விஷயங்களைப் பார்ப்பதை, யோசிப்பதை நிறுத்துங்கள். உதாரணத்துக்கு காதல் காட்சிகளைப் பார்ப்பது, காதல் பாடல்களைக் கேட்பது போன்றவை உங்கள் வலியை இன்னும் அதிகப்படுத்தலாம். அதற்குப் பதில் சந்தோஷமான பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பது உங்கள் மனதுக்கு இதமளிக்கும்.
ஒரு விஷயத்தை உங்கள் மண்டையில் இருந்து தூக்கிப் போட நினைத்தால் வேறு புதிய விஷயங்களை உள்ளே கொண்டு வர வேண்டும். எனவே உங்களை பிசியாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எதெல்லாம் பிடிக்குமோ, அதையெல்லாம் செய்யுங்கள். நல்ல படத்துக்குச் செல்வது, பிடித்ததை சாப்பிடுவது, நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, பியூட்டி பார்லர் சென்று அழகுப்படுத்திக் கொள்வது என எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைவிட, ஏதேனும் செய்கிறீர்களா என்று பாருங்கள். பிசியாக இருந்தீர்களானால், நீங்கள் மறக்க நினைக்கிற நபரைப் பற்றிய சிந்தனையே உங்களுக்கு வர வாய்ப்பில்லை. வெளியே செல்லுங்கள். நிறைய மனிதர்களைப் பாருங்கள். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தால் மறக்க வேண்டிய விஷயங்கள் சிரமமாகும். மனது சரியில்லாவிட்டாலும் பரவாயில்லை. நல்ல உடைகளை அணிந்து கொண்டு, நன்றாக டிரெஸ் செய்து கொண்டு, உங்கள் நண்பர்களுடன் உங்களுக்குப் பிடித்த இடத்துக்குச் செல்லுங்கள்.
அப்படி வெளியே சென்று பல முகங்களைப் பார்க்கும் போது, நீங்கள் மறக்க நினைக்கிற நபருக்கு மட்டும்தான் உங்களைக் கவரக்கூடிய அழகிய முகமும், அருமையான குரலும் உண்டு என்கிற உங்கள் எண்ணமும் மாறும். அந்த நபரை சந்திக்க வாய்ப்பிருக்கிற இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள். அப்படியே சந்திக்க நேர்ந்தாலும், தர்மசங்கடப்பட வேண்டாம். ‘ஹலோ’, ‘ஹாய்’
சொல்லிவிட்டு, உடனடியாக கிளம்புவதற்கான காரணம் ஒன்றைச் சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.
இவை எல்லாவற்றையும் மீறி, அவரை மறந்தாக வேண்டும் என்கிற மன உறுதி உங்களுக்கு இருந்தால் மறப்பதும் சுலபம். மேலே சொன்ன எதுவுமே உங்களுக்கு உதவவில்லை என நினைத்தால், மனநல மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். உங்களுக்கு சில சிகிச்சைகள் தேவைப்படலாம்.
———————————
டியர் மேடம், என்னுடைய பிரச்னையை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று கூடத் தெரியவில்லை. வெளியில் சொன்னால் என்னை எப்படி நினைப்பார்களோ என பயமாக இருக்கிறது. என் கணவர், அம்மா, சகோதரிகள் என யாரிடமும் சொல்ல பயந்து கொண்டு, கடைசியாக உங்களுக்கு எழுதுகிறேன்.
எனக்கு 12 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்தே இருவரும் ரொம்பவும் ஒற்றுமையானவர்கள். பிள்ளைகளால் எனக்கோ, என் கணவருக்கோ எந்தப் பிரச்னைகளும் வந்ததில்லை. படிப்பிலும் இருவரும் சுட்டி. சமீப காலமாக என் மகளிடம் ஏதோ மாற்றத்தைப் பார்க்கிறேன். பள்ளியிலேயே முதல் மாணவியாக வரக்கூடியவள், கொஞ்ச நாளாக படிப்பில் கவனமின்றி இருக்கிறாள். அடிக்கடி கோபப்படுகிறாள்.
எதற்கெடுத்தாலும் அழுகிறாள். தைரியமான பெண்ணான அவள், தாழ்வு மனப்பான்மையில் அவதிப்படுகிறாள். எதற்கெடுத்தாலும் பயப்படுகிறாள். சரியாக சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை. நானும் அவளிடம் எப்படியெல்லாமோ விசாரித்துப் பார்த்தேன். பதில் இல்லை. ஒருநாள் அவளாகவே என்னிடம் வந்து அழுதாள். ‘இனிமேல் நான் உன்கூடப் படுத்துக்கறேன். அண்ணன்கூட படுக்க மாட்டேன்’ என்றாள்.
என்ன, ஏதென விசாரித்த எனக்கு அதிர்ச்சி. ‘தூக்கத்துல அண்ணன் என்பக்கம் திரும்பிப் படுக்கறான். கட்டிப் பிடிக்கிறான். எனக்கு என்னவோ பயமா இருக்கு… ஏதோ தப்புனு தெரியுது… என்னால நார்மலா இருக்க முடியலை…’ என அழுதாள். எனக்கு அவளுக்கு என்ன பதில் சொல்லித் தேற்றுவது எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை என் மகனும் மிகவும் நல்லவன். டீன் ஏஜில் இருந்தாலும், அனாவசியமாக பெண்களைக் கிண்டலிப்பது, சீண்டிப் பார்ப்பது மாதிரியான எந்தத் தவறான பழக்கமும் அவனுக்கு இல்லை.
எதேச்சையாக தூக்கத்தில் நடந்த விஷயம் என இதை ஒதுக்கித் தள்ளுவதா அல்லது என் மகனைக் கூப்பிட்டுக் கண்டிப்பதா? இதனால் அவன் வேறு மாதிரி மாற ஏதேனும் வாய்ப்புண்டா? எனக்கு என் மகன், மகள் இருவருமே முக்கியம். இருவரின் மனமும் நோகாதபடி, இந்தப் பிரச்னையை சரி செய்ய ஏதேனும் வழிகள் உண்டா?- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
உறவுச்சிக்கலுக்கு தீர்வு சொல்கிறார் மனநல மருத்துவர் லட்சுமிபாய். அன்புத் தோழி, முதலில் பயத்தையும் பதற்றத்தையும் உதறித் தள்ளுங்கள். நீங்கள் சொல்வது போல உங்கள் மகனும், மகளும் நல்ல பிள்ளைகள்தான். பிரச்னை அவர்களிடத்தில் இல்லை. அவர்களது வயது அப்படி. இருவருமே விடலைப் பருவத்தில் இருக்கிறார்கள். பெண் குழந்தைக்கு ஓரளவு வயதானதும் அவளை தனியே படுக்க வைக்கப் பழக்க வேண்டும். என்னதான் அண்ணன் – தங்கையாக இருந்தாலும், அந்த வயதுக்குரிய உடல் மாற்றங்கள், ஹார்மோன்களின் வேலை என எல்லாமே அந்த வயதில் தலைதூக்குவது இயல்புதான்.
ஆண் பிள்ளைக்குப் போய் அம்மா எப்படி எல்லாவற்றையும் சொல்லித் தருவது, அப்பாதானே சொல்ல வேண்டும் என்கிற நினைப்பில் பல அம்மாக்களும் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கிறார்கள். அப்படியில்லை. ஆண் குழந்தைக்கும் அம்மாதான் ஆசிரியை. உடலமைப்பைப் பற்றி, பருவ வயதில் உண்டாகக் கூடிய மாற்றங்கள் பற்றி, எது சரி, எது தவறு என்பன பற்றியெல்லாம் நீங்கள்தான் உங்கள் மகனுக்கு நாசுக்காக எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு தங்கையுடன் ரொம்பவும் நெருக்கமாக இருக்கக் கூடாது என்பதையும் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் மிகவும் பொறுமையாக, அன்பாகச் சொல்ல வேண்டியது முக்கியம். உங்கள் மகளிடம் காணப்படுகிற அறிகுறிகளை வைத்துப் பார்த்தால், அவள் தீவிர மனச்சோர்வில் இருப்பது தெரிகிறது. உடனடியாக அவளை ஒரு கவுன்சலிங் அழைத்துச் செல்லுங்கள். அவளுக்கு மட்டுமின்றி, உங்கள் மகனுக்கும், உங்களுக்கும், உங்கள் கணவருக்குமேகூட ஒரு கவுன்சலிங் அவசியம்.
விடலைப் பருவத்தில் உண்டாகக் கூடிய உடல், மன மாற்றங்களைப் பற்றி, இனப்பெருக்கம் பற்றியெல்லாம் கவுன்சலிங்கில் அவர்களுக்கு நாகரிகமாகப் புரிய வைப்பார்கள். உங்களுக்கும், உங்கள் கணவருக்குமான அந்தரங்க உறவு உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியாமல் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் மகளிடம் நிறைய பேசுங்கள். எல்லாம் சரியாகி விடும் என நம்பிக்கை கொடுங்கள். இந்தப் பிரச்னைக்கு கவுன்சலிங்கும், உங்களுடைய அன்னியோன்யமான பேச்சும்தான் மருந்து.
ஒருவேளை இதை நீங்கள் அலட்சியப்படுத்தினால், பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் திருமணமே வேண்டாம் எனத் தவிர்ப்பதற்கும், இருவரும் பிரியவும் வாய்ப்புகள் அதிகம். அவர்களது எதிர்காலத்தையும் பெரிதும் பாதிக்கும். எனவே தாமதிக்காமல் உடனடி நடவடிக்கைகளில் இறங்குங்கள்.