வரதட்சணை, ஆண்மைக்குறைபாடு என எத்தனையோ இருந்தாலும், முக்கியமாக நான்குதான் இந்தியாவில் அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம், விருப்பமில்லா திருமணம், திருமணத்துக்கு வெளியே உறவு (Adultery), வேடிக்கையை விரும்பும் இன்றைய தலைமுறை (Fun-Loving Generation). திருமண பந்தம் எளிதாக முறிவுக்கு வருவதற்கு இவையெல்லாம் காரணங்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. ஈகோ, தம்பதியரிடம் விரிசல் முற்றுவதற்கு முக்கிய அடிப்படையாகிறது. சகிப்புத் தன்மை வெகுவாகக் குறைந்துபோய்விட்டது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், மணமுறிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
* சிறு வயது முதலே உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவர்களாக (அவர்கள் பெற்றோர்கள் உணர்வு வெளிப்பாட்டை கண்டித்திருப்பதால்கூட இருக்கலாம்) இருப்பதும் ஒரு காரணமாகியிருக்கலாம்.
* உடல்ரீதியாக தாய்-தந்தையரைவிட்டுப் பிரிந்திருந்தாலும், மனதளவில் பிரிய முடியாமல் இருப்பதால் ஏற்படும் சிக்கல்.
* சந்தேக உணர்வு அதிகமாக இருப்பவர்களுக்கும் புரிதலில் சிக்கல் வரும்.
* 30 வயதுக்கு மேல் திருமணம் நடப்பவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைவாகவும், புரிதலில் சிக்கலும் ஏற்படலாம்.
* கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், அவர்களிடையே மன ஒற்றுமை சீர்குலைய வழி ஏற்படலாம்.
* கணவர், அவர் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்து, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதினாலேயேகூட இருவருக்கும் புரிதல் இல்லாமல் போகக்கூடும்.
* திருமணம் ஆன உடனேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால், மண வாழ்க்கையில் பக்குவப்படுவதற்கு முன்னதாகவே பெற்றோர்கள் ஆகிவிடும்போது சிக்கல் ஆரம்பித்துவிடுகிறது.
* திருமணத்துக்குப் பிறகு குழந்தைப்பேறு அமையாதது மணமுறிவுக்கு முக்கியக் காரணம்.
* பாலியல் பிரச்சனைகள் மற்றும் திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருப்பது, குடி அல்லது போதைப் பழக்கம் போன்ற காரணங்களும் விவாகரத்துக்குக் காரணங்களாகின்றன.
சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுத்தலும் உறவுக்கு வலு சேர்க்கும்! அதிகமாகும் விவாகரத்துக்கு முட்டுக்கட்டை போடும்! அந்த நல்லப் பழக்கத்தை முதலில் கடைப்பிடிக்கப் பழகுவோம்!