Home ஆரோக்கியம் குறட்டையை நிறுத்தும் வழிமுறைகள்

குறட்டையை நிறுத்தும் வழிமுறைகள்

27

மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர். சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடம் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். நாக்கு, மேலண்ணம், தொண்டை சதை, மூக்கின் பின் பகுதி சதை இவை இறுக்கம் தளர்ந்து ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இந்த தளர்ச்சியால், இவை சுவாசக்குழாயை அழுத்துகின்றன. சுவாசக்குழாய் இதனால் சுருங்கி இருக்கும் போது வரும் காற்று சிறிது கஷ்டப்பட்டு தான் அதை கடக்க வேண்டி வரும்.

மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. இந்தப் பாழும் குறட்டையினால் பல தம்பதிகள் விவாகரத்து வரை போய் விடுகின்றனர்.

மனிதர்கள் விடும் குறட்டை குறித்தும், அதை தடுப்பது பற்றியும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும், நோயாளிகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமங்கள் தான் குறட்டையாக வெளி வருகிறது. இந்த பிரச்சினை உள்ளவர் ஓர் இரவில் அதிகபட்சமாக 100 தடவை குறட்டை விட வாய்ப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு குறட்டையும் 10 வினாடிகள் வரை நீடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். உங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். காற்று மூச்சுக் குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும்.

நாம் தூங்கும் போது நாக்கு, தொண்டை, மேலண்ணம் போன்ற வாய் சதைகள் இறுக்கம் குறைந்து தளர்ந்து விடுகின்றன. மல்லாந்து படுத்தால் புவி ஈர்ப்பு சக்தியால், இந்த சதைகள், டான்ஸில்ஸ் இவையெல்லாம் பின்னோக்கி ஈர்க்கப்படுகின்றன. பின்னோக்கி சரியும் போது இந்த தசைகள் சுவாசக் குழாயை அழுத்துவதால் அதில் காற்றுத்தடை உண்டாகி, குறட்டை சப்தம் எழுகிறது.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் படுத்தால் குறட்டை விடுவது குறையும் அல்லது நிற்கும். தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதால் குறட்டையை குறைக்கலாம். யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தாடை, தொண்டை, நாக்குகளுக்கான பிரத்யேக பயிற்சிகள், பிராணாயாமம் போன்ற சுவாசப் பயிற்சிகள் குறட்டையை குறைக்க உதவுகின்றன.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை. தினந்தோறும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடம் கொப்பளித்து வந்தாலும், நாளடைவில் குறட்டைச் சத்தம் குறையும். இதற்கு பெயர் ஆயில் புல்லிங்.