Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் உடல் எடையில் கவனம் செலுத்துவது எப்படி?

கர்ப்ப காலத்தில் உடல் எடையில் கவனம் செலுத்துவது எப்படி?

31

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரிப்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.

சராசரி எடை கொண்ட பெண்கள் 10 முதல் 16 கிலோகிராம் வரை எடை கூடலாம். முதல் மூன்று மாதங்களில் 1 முதல் 1.5 கிலோ, அடுத்த மூன்று மாதங்களில் 5 முதல் 7 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். இறுதி மூன்று மாதங்களில் 2 முதல் 3 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.
உடல் பருமனான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். உடல் எடை மிகவும் குறைவாக உள்ள பெண்கள் கரிப்ப காலத்தில் 12 முதல் 18 கிலோ வரை எடை ஏறலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் எடையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எடையில் மிகவும் அதிகரித்தாலோ, அல்லது சரியாக அதிகரிக்காமல் இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம். அதுவும் உணவை மூன்று வேளையாக மட்டும் சாப்பிடாமல் 6 வேளையாக பிரித்து சாப்பிடுவது நலம்.

சாப்பிடவேண்டியவை

கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான சத்துணவுகளை சாப்பிட வேண்டும். தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள், பால், தயிர், வெண்ணெய், நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, முட்டை, மீன், ஆடு, கோழி இறைச்சி, ஆட்டு ஈரல் என அனைத்து வகை உணவுகளையும் கர்பிணிகள் சாப்பிடலாம்.

குறிப்பாக இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் ஆகியவற்றை பெண்கள் சாப்பிடுவது நலம்.

கால்சியம் அதிகரிக்க தயிர், கேழ்வரகு, கருவேப்பிலை, மணத்தக்காளி கீரை, மீன், நல்லெண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

இதனுடன் மருத்துவர்கள் தரும் சத்து மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

உடலுக்கு அதிகம் சூடு தரும் பப்பாளி, அன்னாசி பழம், எள்ளுருண்டை போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது நல்லது. நன்கு பழுத்த பப்பாளி சாப்பிடலாம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். கர்பிணிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம். அதனால் காய்கறி, பழங்கள் மற்றும் பயிறுவகைகள் போன்ற நார்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக மசக்கையால் பெண்கள் அதிகமாக வாந்தி எடுக்கும் சமயத்தில் எளிதாக ஜீரணமாகும் உணவை சிறிது சிறிதாக சாப்பிட வேண்டும். பலர் எட்டு மாதங்கள் வரை வாந்தி எடுப்பர். பெண்கள் அதற்காக பயப்பட தேவையில்லை. அந்த சமயங்களில் தேவையான உணவை சாப்பிட தவறக்கூடாது. அதிகமான வாந்தியால் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்ய தண்ணீர், பழரசம் சாப்பிடவும்.