பெரிய கழுத்து கொண்ட பிளவுஸ் அல்லது ஷார்ட்ஸ் அணிந்து செல்லத் தயக்கமா? உங்கள் உடலில் உள்ள முடி தெரியுமே என்று சங்கடமாக உள்ளதா? இல்லையென்றால், உங்கள் ஹேர் ட்ரிம்மர் அல்லது ரேசர் இல்லையென்றால் அய்யயோ என்று பயம் வருகிறதா?
டீவியில் விளம்பரப்படுத்தும் எல்லா ஹேர் ரிமூவல் பிராடக்ட்டுகளையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டீர்கள், ஆனாலும் ஒவ்வொன்றை முயற்சி செய்யும்போதும், வெட்டுக் காயம், தோல் சிவந்துபோவது, தோலில் ராஷஸ் போன்ற ஏதேனும் பிரச்சனை வருகிறதா?
உடலில் உள்ள ரோமங்களை அகற்றுவது என்பது உங்கள் அழகுபடுத்தலின் ஒரு வழக்கமான ஒரு விஷயம் தான், ஆனாலும் ஒவ்வொரு நாளும் இப்படி பல தயாரிப்புகளைப் பயன்படுத்துவது பெரும் தொல்லையாக இருக்கிறதல்லவா?
சரியான முறையைத் தேர்வு செய்ய உங்களுக்கு உதவ விரும்புகிறோம். ரோமங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக அகற்றும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தற்காலிக முறைகள் (Temporary techniques):
1) ஷேவிங் (Shaving):
செய்முறை: இந்த முறையில், ரேசர் ரோமங்களை தோலை ஒட்டி நெருக்கமாக வெட்டுகிறது.ஷேவிங் செய்தால், முடி முரட்டுத்தனமாக மாறும் என்று ஒரு கருத்து உள்ளது, ஆனால் அது உண்மையல்ல. வெட்டாத முடியின் முனை மிருதுவாக இருக்கும், வெட்டிவிட்டால் அது முரட்டுத்தனமாக இருக்கிறது, அதையே நாம் அப்படி நினைத்துவிடுகிறோம்.
உடலில் எங்கு இதைப் பயன்படுத்தலாம்: கிட்டத்தட்ட உடலில் எந்தப் பகுதியிலும் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
இது எவ்வளவு நாட்கள் பலனளிக்கும்: 1 இலிருந்து 3 நாட்கள். உங்கள் முடி வளர்ச்சியைப் பொறுத்து இது மாறலாம். சிலருக்கு தினமும் ஷேவிங் செய்ய வேண்டி இருக்கும், இன்னும் சிலருக்கு ஒரு நாளுக்கு இரண்டு முறை செய்ய வேண்டி இருக்கலாம்.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை: சோப்பு அல்லது ஷேவிங் ஃபோம் பயன்படுத்தவும், முடி வளரும் அதே திசையில் ஷேவிங் செய்யவும். ஒவ்வொரு முறையும் புதிய ரேசரைப் பயன்படுத்த வேண்டும், உங்கள் முடி தடிமனான, முரட்டுத்தனமான முடியாக இருந்தால் பழைய ரேசரைப் பயன்படுத்தினால் காயம் ஏற்படலாம்.
பக்க விளைவுகள்: தோலுக்குள்ளே முடி வளர்தல்: குறிப்பாக உள்ளாடை அணியும் இடங்களில்.
2) பிடுங்குதல் (Plucking):
செய்முறை: ட்வீசர்ஸ் பயன்படுத்தி ஒவ்வொரு முடியாக வேரோடு பிடுங்கப்படும்.
உடலில் எங்கு இதைப் பயன்படுத்தலாம்: முகத்தின் சிறிய பகுதிகளில் பயன்படுத்தலாம், அதாவது மேல் உதடு, புருவங்கள், நெற்றி அல்லது தாடை.
இது எவ்வளவு நாட்கள் பலனளிக்கும்: 3 வாரங்கள் அல்லது அதற்கு மேல்.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை: நோய்த் தோற்று ஏற்படாமல் தவிர்க்க, ஒவ்வொரு முறையும் ட்வீசரைப் பயன்படுத்தும் முன்பு ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பக்க விளைவுகள்: முடி எதிர்பாராதவிதமாக உடைந்துவிட்டால், அது உள்ளே வளரும் முடியாக மாறலாம்.
3) நூல் கொண்டு பிடுங்குதல் (Threading):
செய்முறை: காட்டன் நூலால் கட்டி ஒவ்வொரு முடியாக வேரிலிருந்து பிடுங்கப்படும்.இது ரோமங்களை அகற்றும் பழையமான முறைகளில் ஒன்றாகும்.
உடலில் எங்கு இதைப் பயன்படுத்தலாம்: முகம் மற்றும் கை விரல்களின் மேல் பகுதியில் உள்ள முடிகளுக்குப் பயன்படுத்தலாம்.
இது எவ்வளவு நாட்கள் பலனளிக்கும்: 1-3 வாரங்கள் அல்லது அதற்கு மேல்.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை: கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும். ஓரிரு நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்த பிறகு த்ரெடிங் செய்ய வேண்டும்.
பக்க விளைவுகள்: நூல் கூர்மையாக இருந்தால், வெட்டுக் காயங்களோ தோல் சிராய்ப்போ ஏற்படலாம்.
4) ரோமங்களை நீக்குவதற்கான கிரீம் (Depilatory cream):
செய்முறை: இந்த கிரீம், முடியின் அடிப்படை உட்பொருளான புரதத்தைக் கரைக்கிறது.
உடலில் எங்கு இதைப் பயன்படுத்தலாம்: கைகள், கால்கள், அக்குள், உள்ளாடை அணியும் பகுதிகள்.
இது எவ்வளவு நாட்கள் பலனளிக்கும்: சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை: இந்த முறையில் ரோமங்களை அகற்றிய பிறகு, டியோடரன்ட் அல்லது பெர்ஃப்யூம்களைப் பயன்படுத்த வேண்டாம்.
பக்க விளைவுகள்: இந்தத் தயாரிப்புகள், முடியின் அடிப்படை உட்பொருளான புரதத்தைக் கரைப்பதன் மூலம் எளிதாக ரோமங்களை அகற்ற உதவுகின்றன. இவை சிறிது அமிலத்தன்மை கொண்டவை ஆகவே அடிக்கடி ராஷஸ் அல்லது தோல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
5) வேக்ஸிங் (Waxing):
செய்முறை: ஒட்டும் தன்மையுள்ள மெழுகு தோலின் மேற்பரப்பில் பூசப்படும், பிறகு மெழுகு பூசிய பகுதிகளில் ஒரு வேக்ஸிங் ஸ்ட்ரிப் கொண்டு அழுத்தப்படும். பிறகு வேக்ஸிங் ஸ்ட்ரிப் வேகமாக வெளியே எடுக்கப்படும். அந்த ஸ்ட்ரிப்புடன் சேர்ந்து முடியும் வந்துவிடும்.
உடலில் எங்கு இதைப் பயன்படுத்தலாம்: முகம், கால்கள், அக்குள், உள்ளாடை அணியும் பகுதிகள் உட்பட உடலில் எங்கும் பயன்படுத்தலாம்.
இது எவ்வளவு நாட்கள் பலனளிக்கும்: 3-6 வாரங்கள்.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை: மெழுகின் வெப்பநிலையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். தீக்காயம் ஏற்படுத்தும் அளவுக்கு அதிக வெப்பமாக இருக்கக்கூடாது. அதே சமயம் மிகவும் சில்லென்றும் இருந்தாலும் பலனில்லாமல் போய்விடும். இந்தத் துணியில் போதுமான அளவு கெட்டியாகப் பிடிக்க எதுவாக, முடி அரை அங்குலத்திற்கும் அதிக நீளமாக இருக்க வேண்டும்.
பக்க விளைவுகள்: மெழுகு அதிக சூடாக இருந்தால், தோலில் கொப்புளங்கள் ஏற்படலாம்.
6) எப்பிலேட்டர்கள் (Epilators):
செய்முறை: ஒரு மின் உபகரணத்தின் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட ரோமங்கள் மொத்தமாகப் பிடித்து வேரோடு வெளியே பிடுங்கப்படும். இதுவும் வேக்ஸிங் செய்யும் முறையைப் போன்றதே ஆகும், ஆனால் இந்த முறையில் எபிதீலிய செல்கள் அகற்றப்படாது.
உடலில் எங்கு இதைப் பயன்படுத்தலாம்: கைகள், கால்கள், முதுகு போன்ற இடங்களில் பயன்படுத்தலாம்
இது எவ்வளவு நாட்கள் பலனளிக்கும்: ஓரிரு வாரங்கள்
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை: இந்தச் செய்முறையைத் தொடங்கும் முன்பு, தோலை சுரண்டி, உதிரும் செல்களை எடுத்துவிட வேண்டியது முக்கியம். இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தோலில் காயங்கள் மற்றும் ராஷஸ் ஏற்படலாம். மின் உபகரணத்தைப் பயன்படுத்துவதால் மின் அதிர்ச்சி என்பது இந்த முறையில் உள்ள முக்கியமான பக்க விளைவாகும்.
மருந்துகள் (Medications): ரோமங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் சில மருந்துகள் உள்ளன. அவற்றை எடுத்துக்கொள்ளும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். இந்த மருந்துகள் முடி வளர்ச்சியை மட்டுப்படுத்துமே தவிர முற்றிலுமாகத் தடுக்காது.
நிரந்தரமாக அகற்றும் முறைகள் (Permanent Techniques)
1) எலக்ட்ரோலிசிஸ் (Electrolysis):
இந்த முறையில், சிறிய ஊசிகளையும் ரசாயனம் அல்லது வெப்ப ஆற்றலையும் பயன்படுத்தி, ரோமங்களின் ஃபாலிக்கில்கள் (செல்களின் தொகுதி) அழிக்கப்படும்.
இதில் இரண்டு வகைகள் உள்ளன: கால்வானிக் முறை தெர்மல் முறை.கால்வானிக் முறையில், ரோமங்களின் ஃபாலிக்கில்களை அழிக்க ரசாயனங்கள் பயன்படுத்தப்படும், தெர்மல் முறையில் வெப்பம் பயன்படுத்தப்படும்.
இந்த முறையில் ரோமங்களை அகற்ற, 4-6 முறை அகற்ற வேண்டும். ரோமங்களின் அளவு, ஹார்மோன் அளவு போன்றவற்றைப் பொறுத்து அதற்கும் அதிக முறை அகற்ற வேண்டியும் இருக்கலாம்.
இந்த முறையில் லேசான அசௌகரியம் ஏற்படும், அதற்கு மேற்பூச்சாகப் பூசும் அனஸ்தீஷியாவைப் பயன்படுத்தி சமாளிக்கலாம்.
2) லேசர் முறையில் ரோமங்களை அகற்றுதல் (Laser Hair Removal):
அதிக செறிவான, துடிப்பு முறையில் பாயும் லேசர் ஒளிக்கற்றையைக் கொண்டு தேவையற்ற ரோமங்கள் அகற்றப்படுகின்றன.
அதிக செறிவுள்ள வெப்பமானது ரோமங்களின் ஃபாலிக்கில்களை அழித்துவிடுவதால், மேற்கொண்டு முடி வளர்வது தடுக்கப்படும்.
இந்த முறையால் ரோமங்களின் வளரும் வேகம் குறையுமே தவிர, நிரந்தரமாக அகற்றப்படும் என்று உத்தரவாதம் கிடையாது. நீண்ட நாட்கள் ரோமங்கள் இல்லாமல் இருக்க வேண்டுமெனில், சில முறை இந்த லேசர் முறையில் ரோமங்களை அகற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த முறை எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பது, உங்கள் முடியின் நிறம் மற்றும் தோலின் தன்மை ஆகியவற்றையும் பொறுத்து அமையும்.
வழக்கமாக இந்த முறையில் தோல் எரிச்சல், சிவத்தல், பிக்மென்ட் (நிறமி) மாற்றங்கள் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
3) செறிவான, துடிப்பு முறையில் பாயும் ஒளி (Intense Pulsed Light):
லேசர் அல்லாத, அதிக செறிவுள்ள ஒளி மூலங்களைக் கொண்டு ஓரியல்பற்ற அதிக அலைநீளம் கொண்ட ஒளி உருவாக்கப்படுகிறது. அவை அதிக வெளியீட்டுத் திறன் கொண்ட ப்ளாஷ் விளக்குகளைப் பயன்படுத்துகின்றன.
செலக்டிவ் ஃபோட்டோ தெர்மாலிசிஸ் என்பதே இதன் அடிப்படைத் தத்துவமாகும். அதாவது, கதிர்வீச்சை வெப்ப முறையில் கட்டுப்படுத்தி, குறிப்பிட்ட செல் மற்றும் திசு வரம்புக்குள் மட்டும் பாயச் செய்து தேவையான நிறம் கொண்ட பகுதிகளை மட்டும் சேதத்தை ஏற்படுத்துவது.
சிகிச்சையைச் செய்துகொள்ளும்போது வலி ஏற்படுவதும், தோலில் நிறம் மாறுதலும் பொதுவான பக்க விளைவுகளாகும்.