அடிவயிறு முடிந்து, கால்கள் தொடங்கும் இடமே கவட்டை எனப்படும். இப்பகுதி மேல் தொடைகளையும் அடிவயிற்றின் முன்பகுதியின் கீழ்ப் பகுதியையும் கொண்டது, இந்தப் பகுதியில்தான் கால்கள் இணைகின்றன.
கவட்டை வலி என்பது விந்தகங்களில் ஏற்படும் வலியிலிருந்து வேறுபட்டதாகும். ஆனாலும் சில சமயம் விந்தகங்களில் ஏற்படும் வலி, கவட்டைப் பகுதி முழுதும் பரவக்கூடும்.
காரணங்கள் (Causes)
தசை, தசைநார் அல்லது தசைநாண் போன்றவை இழுபடுவதால் வலிக்கலாம்: பெரும்பாலும், கவட்டைப் பகுதியில் ஏற்படும் வலி தசைகளிலேயே (தசை, தசைநார் அல்லது தசைநாணில் ஏற்படும் இறுக்கத்தால் உண்டாகும்). குறிப்பாக கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு இது பெரும்பாலும் உண்டாகும். அடிபட்டால் உடனடியாக இந்த வலி தெரியும் அல்லது சில சமயம் சில வாரங்கள் அல்லது மாதங்கள் செல்லச்செல்ல கொஞ்சம் கொஞ்சமாக வலி தெரியலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் மேலும் இறுக்கம் ஏற்பட்டால் வலி இன்னும் அதிகமாகலாம். வலி விந்தகப் பகுதியிலும் பரவக்கூடும்.
குடலிறக்கம் (ஹெர்னியா)
எலும்பு வலி: இடுப்பு எலும்பு சந்திப்பைப் பாதிக்கின்ற காயம் அல்லது நோயாலும் கவட்டையில் வலி ஏற்படலாம்.
கவட்டை வலிக்கான சில அறிய காரணங்கள்:
விந்து தண்டு முறுக்கப்படுதல் (விந்தகப் பகுதியில் ஏற்படும் முறுக்கம்)
சுருள் சிரைப்பிதுக்கம் (வெரிக்கோசீல், அதாவது விதைப்பையில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கமடைதல்)
விரைவீக்கம் (விதைப்பை வீக்கம்)
விந்தக அழற்சி (ஆர்ச்சைட்டஸ்) அல்லது எப்பிடிடிமிஸ்
விந்தகத்தில் கட்டி
நிணநீர் கணுக்கள் பெருத்தல்
சிறுநீரகக் கற்கள்
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று
சிறுகுடல் அல்லது பெருங்குடலில் அழற்சி
கவட்டை வலிக்கு உதவும் வீட்டு வைத்தியக் குறிப்புகள் (Home management of groin pain)
இறுக்கம் அல்லது உடல் திரிபின் காரணமாக கவட்டை வலி ஏற்பட்டிருந்தால், அதற்கு சுயமாக சில நிவாரண முறைகளைப் பின்பற்றினால் பலன் கிடைக்கக்கூடும்:
பாதிக்கப்பட்ட இடத்தில் 20-30 நிமிடங்களுக்கு ஐஸ் பேக் போடலாம் அல்லது ஐஸ் ஒற்றடம் கொடுக்கலாம். இவ்வாறு நாளொன்றுக்கு மூன்று நான்கு முறை செய்யலாம்.
மருந்து கடைகளில் கிடைக்கும் பாராசெட்டமால், ஐபுப்ரூஃபேன் போன்ற வலி நிவாரணி மருந்துகளும் வலியைக் குறைக்க உதவும்.
எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்? (When to contact a doctor?)
கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றினால் உங்களது மருத்துவரைச் சந்திக்கவும்:
எந்தக் காரணமும் இல்லாமலே தொடர்ச்சியாக கவட்டை வலி இருந்தால். .
எரிச்சலுடன் கூடிய வலி இருந்தால். .
வலி கடுமையாக இருந்தால். .
கவட்டை வலியுடன் விதைப்பையிலும் வலியும் வீக்கமும் இருந்தால். .
வீட்டு வைத்திய முறைகளால் வலி ஓரிரு நாட்களில் குறையாமல் தொடர்ந்தால். .
விந்தகம் வளர்ச்சியடைந்தால் அல்லது தோலின் நிறம் மாறினால். .
உடனடி மருத்துவ கவனிப்பு எப்போது தேவை?
கவட்டை வலியுடன் அடிவயிறு, நெஞ்சு அல்லது முதுகு வலியும் இருந்தால். .
கவட்டை வலியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு விந்தகத்தில் வலி இருந்தால், குறிப்பாக வலி திடீரென்று தோன்றியிருந்தால். .
விந்தகத்தில் வலியுடன் காய்ச்சலும், குளிரும் இருந்தால் அல்லது சிறுநீருடன் இரத்தம் வெளிவந்தால். .
நோய் கண்டறிதல் (Diagnosis)
உங்கள் மருத்துவர் கவட்டைப் பகுதியைப் பரிசோதித்து, உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகள் போன்றவை தொடர்பாக பின்வரும் கேள்விகளைக் கேட்கலாம்:
கவட்டை வலி எப்போது தொடங்கியது?
வலி ஒரே மாதிரி உள்ளதா அல்லது கடுமையாகிறதா?
தொடர்ச்சியாக வலி உள்ளதா அல்லது அவ்வப்போது வந்து வந்து போகிறதா?
வேறு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா? அவை என்ன?
சமீபத்தில் ஏதேனும் அடிபட்டதா?
அதிக பளு ஏதேனும் தூக்கினீர்களா? அல்லது உடல் அதிக சிரமப்படும்படி கஷ்டமான செயல் ஏதேனும் செய்தீர்களா?
சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளதா? அல்லது சிறுநீர் நிறம் மாறியுள்ளதா?
பால்வினை நோய் ஏதேனும் இருந்துள்ளதா?
பரிசோதனைகள்
பின்வரும் பரிசோதனைகள் செய்யப்படலாம்:
இரத்தத்தின் எல்லாப் பகுதிப்பொருள்களின் எண்ணிக்கை கண்டறியும் இரத்தப் சோதனை மற்றும் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் சோதனை ஆகிய இரத்தப் பரிசோதனைகள்
அல்ட்ராசவுண்ட் மற்றும் பிற ஸ்கேன்கள்
சிறுநீர் பகுப்பாய்வு
சிகிச்சை (Treatment)
கவட்டை வலிக்கான சரியான சிகிச்சை என்பது, இந்தப் பரிசோதனைகளின் இறுதி முடிவையும், அறிகுறிகள் எவ்வளவு நாட்கள் இருந்தன என்பதையும் பொறுத்ததாகும்.