எல்லைகளற்று பறந்து விரிந்திருக்கும் காதலுக்கு ஒர் எல்லையிருக்கிறதா? பெரும்பாலும் பதில் இல்லையென்றே தான் வரும். சரி, இல்லை என்றாலும் நாமே ஓர் எல்லையை உருவாக்கிக் கொள்வோமா? காதலுக்கு எல்லை எல்லாம் தேவையில்லை. எண்ணிக்கையில் அடங்கா காதலை ஒரு பெட்டிக்குள் சுருக்க விரும்பவில்லை என்று நினைக்காமல் தொடர்ந்து படியுங்கள்.
உறவுக்குள் எல்லைகள் தேவையா? :
எல்லை என்பது ஏதோ ஓர் பிரிவின் குறையீடு அல்ல, உங்களைப்பற்றி உங்களுக்கே எடுத்துச் சொல்லும், உங்களை இணையைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ள உதவும், உங்கள் உறவின் ஆழத்தை உணர்த்தும். இணை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் மொத்தத்தில் உங்களின் காதலை நீட்டிக்ககூடிய இடமாகவே இந்த எல்லை இருக்கும்.
சுய பரிசோதனை :
எல்லையை வகுப்பதற்கு முன்னால் சுய பரிசோதனை செய்து பாருங்கள். முதலில் நீங்கள் யார்? உங்களது விருப்பங்கள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கான தேவை என்ன என்பதை உணருங்கள். இணையின் வார்த்தைகளில், செய்கைகளில் எனக்கு ஏதேனும் மனக்கசப்பு இருகிறதா? இதனால் நான் சோர்ந்து போகிறேனா என்று சிந்தியுங்கள். உங்களை மீறிய அல்லது உங்கள் விருப்பங்களுக்கு எதிரான விஷயங்களாக இருந்தால் விரைவில் சோர்ந்து போவீர்கள்.
உணர்ச்சி :
என் இணைக்கு உற்ற துணையாய் இருப்பேன் என்று நினைப்பது தவறல்ல, இருப்பதும் தவறல்ல. ஆனால் நான்தான் இணைக்கு எல்லாமே என்று நினைத்து நீங்கள் எடுத்துக்கொள்ளும் கூடுதல் உரிமைகள் தான் தவறு. எமோஷனலாக தன்னை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை இணைக்கு கொடுங்கள். நீங்கள் ஆசையாக பேசும் போது, நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை கொடுக்கவில்லை என்றால் கோபப்படாதீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டாதீர்கள்.
டிஜிட்டல் :
டிஜிட்டல் டெக்னாலஜி உதவியுடன் காதலை வளர்க்கும் இன்றைய தலைமுறையினருக்கு மிக முக்கியமான எல்லை இது. இணையத்தில் இணையை கண்காணித்துக் கொண்டேயிருக்காதீர்கள். இருவருக்கும் பொதுவான விஷயத்தைப் பற்றி இணையத்தில் பகிர்ந்தால் அதில் உங்கள் இணைக்கும் உடன்பாடு இருக்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள். இணை பகிர்ந்ததில் உங்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலோ அல்லது பிடிக்கவில்லை என்றாலோ இணையிடம் உடனடியாக தெரியப்படுத்துங்கள். அவர்கள் பதிவிடும் ஒவ்வொன்றையும் கேள்வி கேட்டு விவாதமாக்காதீர்கள் இந்த இடத்தில் உங்கள் எல்லைக்குள் நின்று கொள்ளுங்கள். மிக முக்கியமாக உங்களின் உண்மைத் தன்மையை நிரூபிக் பாஸ்வேர்ட்களை பகிராதீர்கள்.
உறவு :
காதலில் இருக்கிறோம் என்ற உடனேயே இணையிடம் உரிமையெடுத்து உறவு கொள்ள முயலாதீர்கள்.அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து சூழ்நிலைகளை புரிந்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் எல்லைக்குள் நின்று அவர்களை வழிநடத்துங்கள்.
விருப்பங்கள் :
அடுத்தவர் ஆட்டிவைக்கும் பொம்மையாக ஒரு போதும் இருக்காதீர்கள். அதே போல உங்களின் விருப்பங்களை இன்னொருவரிடம் திணிப்பவர்களாகவும் இருக்காதீர்கள். காதலில் இந்த இடத்திலிருந்தே எல்லைகள் துவங்கட்டும், நான் காதலிக்கிறேன் உன் மீது எனக்கு உரிமையிருக்கிறது என்று அதிகமாக அவர்களை நெருக்கினால் உங்கள் பிரிவுக்கான துவக்கப் புள்ளியாகத்தான் அது இருக்கும்.
மறுத்தல் பழகு :
உங்களுக்கு விருப்பமில்லை என்றால் வேண்டாம் என்று சொல்லவோ அதை தவிர்க்கவோ தயங்காதீர்கள். அதே போல வேண்டுவதை கேட்கவும் தயங்காதீர்கள். எனக்கு பிடிக்காது, ஆனால் என் இணைக்காக இதைச் செய்கிறேன் என ஒரு போதும் செய்ய வேண்டாம்.
விமர்சனங்களை ஏற்க :
நீங்கள் செய்யும் வேலையைப் பற்றியோ, உங்களது செயல்களைப் பற்றியோ உங்கள் இணை எப்போதும் பாஸிட்டிவ் ஆக மட்டுமே சொல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள். எதிர்மறையாக சொன்னாலும் அதனை ஏற்க பழகுங்கள். தவறை உணர்ந்து திருந்த முயற்சிக்கலாம். அதே போல, விமர்சிக்கும் போது நேர்மையாக இருங்கள். அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்துக் கூறுங்கள்.
முடிந்த விஷயங்கள் :
இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிரிவுகளின் துவக்க இடம் இது தான். என்றோ ஒரு நாள் நடந்து முடிந்த ஓர் சம்பவத்தை நினைவுப்படுத்தி, அதை ஆராய்வதை விட்டுவிடுங்கள். முடிந்ததைப் பற்றி பேசிக் கொள்ள வேண்டாம் என்று உங்களுக்குள் ஓர் எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உறவில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.
வெளிப்பாடு :
உங்களுக்கு இணைக்கும் நடுவில் ஓர் திரை போட்டுக் கொள்ளாதீர்கள். உங்களை உங்கள் சூழலை தவறோ சரியோ அதனை வெளிப்படுத்த தயங்காதீர்கள். வெளிப்படுத்தும் அளவுகளை மட்டும் கண்காணியுங்கள்.
நீங்களே உணரலாம் :
உறவுகளுக்குள் இப்படி ஓர் எல்லையை வகுப்பது என்பது சரியா தவறா என்பதை நீங்களே உணரலாம். எல்லை உங்களுக்கான சுதந்திரத்தை கொடுக்கும் மரியாதையை பெற்றுத்தரும். எல்லையிருந்தால் இன்று அலுவலக நண்பர்களோடு பார்ட்டிக்குச் செல்கிறேன் என்று உங்கள் இணை சொன்னால் அது இணையின் விருப்பம், என்று சம்மதிக்கச் சொல்லும், இதே எல்லையில்லை என்றால் சந்தேகப்பட வைக்கும், வேவு பார்க்கச் சொல்லும், விதண்டாவாதம் செய்யும். மொத்தத்தில் உறவில் விரிசல் விழும்.
சமநிலை :
குழந்தைகள் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டில் அவர்களுக்கு ஏற்றார் போல சில விதிமுறைகளை வகுத்து அதற்குள் விளையாடுவார்கள் அல்லவா அதே போலத்தான் இங்கேயும். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே போல உங்கள் இணைக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் . இது உங்கள் உறவில் சமநிலையை உருவாக்கும். மனஸ்தாபங்களை தவிர்க்கும்.