மார்பகப் புற்றுநோய் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 60% க்கும் அதிகமான மார்பகப் புற்று நோய்கள் நம் நாட்டில் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதை அலட்சியமாகப் பரிசோதிக்காமல் விட்டுஅதற்குள் அது முற்றி மார்பின் இன்ன பிற பகுதிகளுக்கும் பரவி விடுகின்றது. அதைத் தடுத்து ஆரம்பக் கட்டத்திலேயே மார்பகப் புற்று நோயைக் கண்டறிவதற்கான ‘ஸ்க்ரீனிங் டெஸ்ட்’ தான் ‘மேமோகிராம்’என்பது.
மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே சோதனை செய்து அறிந்து கொள்ள மேமோகிராம் என்னும் சோதனை ஒன்றுள்ளது.
மேமோகிராமில் இரண்டு வகையாகப் பரிசோதிக்கிறார்கள். முதலில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்து விட்டுப் பின் அதில் ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால் அதை சோனோ மேமோகிராம் எடுத்து அதனுடன் சேர்த்து வைத்துப் பரிசோதிப்பார்கள்.
10-15 நிமிடங்களுக்குள் முடிந்து விடக்கூடிய இப்பரிசோதனையின் போது மார்பகங்களில் லேசான வலி இருக்கும். மற்றபடி நூற்றுக்கு நூறு சதவிகிதம் பாதுகாப்பான பரிசோதனை இது.
இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளப் பெரியதாக மனதளவிலோ உடலளவிலோ தயாராகி செல்லாவிட்டாலும் பரிசோதனைக்கு முன்பு உங்களுக்கு இருக்கின்ற அறிகுறிகளையும் பிரச்சனைகளையும் மருத்துவரிடம் தெளிவாகக் கூறிவிடுதல் நல்லது.
மேலும் BIRADS (Breast Imaging Reporting and Data System) மூலம் 1-5 வரைக் கதிரியக்க மருத்துவர்கள் ‘ஸ்கோர்’ போடுவார்கள். 1-3 இல் இருந்தால் நிச்சயமாக பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் 5 இல் இருந்தால் கட்டாயமாக மேற்கொண்டு ‘பயாப்ஸி’ எடுத்துப் பார்த்து விட வேண்டும்.
இருபது வயதிலிருந்து தங்கள் மார்பகங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சந்தேகப் படும்படியான வலியோ கட்டியோ இருந்தால் அதை மருத்துவரிடம் ஆலோசித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
யாரெல்லாம் செய்து கொள்ள வேண்டும்.?
மார்பகப் புற்றுநோய்க்கான எவ்வித அறிகுறியும் இல்லாவிட்டாலும் நாற்பது வயதைக் கடந்துவிட்டால் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும்.
அறிகுறிகள் தென்பட்டவர்கள் மருத்துவரின் தக்க ஆலோசனையோடு செய்து கொள்ள வேண்டும்.
ரத்த வழி உறவுகளுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ மார்பகப் புற்றுநோய் இருந்தால் அது அக்குடும்பத்தைச் சார்ந்த மற்றப் பெண்களைத் தாக்கும் அபாயம் பெருமளவில் இருக்கிறது. எனவே இவர்களும் இப்பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
யாரெல்லாம் செய்யக் கூடாது?
பொதுவாகவே பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் மார்பகங்களில் லேசான வலி இருக்கும். அந்த சமயங்களில் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளக் கூடாது. மாத விலக்கு முடிந்த பின்னரே மேமோகிராம் செய்து கொள்ள வேண்டும் .
கருவியிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் கருவைக் பாதிக்க வாய்ப்புகள் அதிகமென்பதனால் கர்ப்பிணிகள் மேமோகிராம் பரிசோதனையைக் கட்டாயமாக மேற்கொள்ளக் கூடாது.
1991 இல் இருந்து மார்பகப் புற்று நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை ‘மேமொக்ராம்’பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் 33% குறைந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.