Home ஆண்கள் ஆண்குறி மொட்டு வளைந்து காணப்படுதல்

ஆண்குறி மொட்டு வளைந்து காணப்படுதல்

44

கார்டி என்றால் என்ன?

கார்டி என்பது ஆண்குறியின் பிறவிக்கோளாறைக் குறிக்கிறது, இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆண்குறி விறைக்கும்போது மொட்டு வளைந்து காணப்படும். பொதுவாக மொட்டு கீழ்ப்புறமாக வளைந்து காணப்படும், சிலருக்கு பக்கவாட்டில் வளைந்து காணப்படும், சிலருக்கு இரண்டும் கலந்தும் இருக்கலாம். நாட்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சனை சரியாகிவிடக் கூடியதல்ல. சில சமயம் இந்தப் பிரச்சனையுடன் ஹைப்போஸ்பாடியாஸ் எனும் பிறவிக் குறைபாடும் இருக்கலாம். அதாவது, சிறுநீர்த் துவாரம் வழக்கமாக இருப்பது போல் ஆண்குறியின் முனையில் இல்லாமல், அடிப்பகுதியில் காணப்படுதல். ஹைப்போஸ்பாடியாஸ் பிரச்சனை இல்லாமல், ஆண்குறி மொட்டு மட்டும் வளைந்திருந்தால், பெரும்பாலும் குழந்தைப் பருவத்தின் பிற்காலம் அல்லது இளமைப் பருவத்தின் தொடக்கம் வரை இந்தப் பிரச்சனையை நாம் கவனிக்காமலே இருந்துவிட வாய்ப்புள்ளது.

கார்டி எனும் இந்தப் பிரச்சனையானது தோராயமாக, புதிதாகப் பிறக்கும் 200 ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே கண்டறிந்தால், இது அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்யப்படுகிறது. இந்தப் பிரச்சனையும் பெய்ரோனி வியாதியும் வெவ்வேறாகும், பெய்ரோனி வியாதி வந்தவர்களுக்கு வடுத் திசு உருவாவதால் ஆண்குறி வளைந்திருக்கும்.

அறிகுறிகள்

கார்டியின் அறிகுறிகள்

ஆண்குறி கீழ்நோக்கி வளைந்திருக்கும், குறிப்பாக விறைத்திருக்கும் போது நன்றாக வளைந்திருக்கும். சிறுநீர்த் துவாரம் ஆண்குறியின் அடிப்பகுதியில் உருவாகிவிடுகின்ற ஹைப்போஸ்பாடியாஸ் எனும் நோய் இல்லாமல் போனால், கார்டி பிரச்சனை சிறு வயதில் கவனிக்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது.
ஹைப்போஸ்பாடியாஸ் பிரச்சனை இருக்கும் நபர்கள், உட்கார்ந்தே சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
கார்டி பிரச்சனை மட்டுமோ, ஹைப்போஸ்பாடியாஸ் பிரச்சனையுடன் சேர்ந்தோ, பின்வரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும்:

தோல் முடிச்சு: சிருநீர்த் துவாரம் மிக மெலிதாக இருக்கும், மொட்டின் முனைக்கு அருகில் இருக்கும்.
மொட்டுத் தோல் ஒதுங்கியிருத்தல் (டோர்சல் ப்ரெப்பியூட்டல் ஹுட்): மொட்டுத் தோல் முழு ஆண்குறியையும் மூடியில்லாமல் மேல் பகுதியை மட்டும் மூடியிருக்கும்.
காரணங்கள்

கார்டி பிரச்சனைக்கான துல்லியமான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், கருவில் உடல் உருவாகும்போதே எதோ தவறாக நடப்பதால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது, இந்தத் தவறு நடக்கும்போது, எதிரெதிரே இருக்கும் ஆண்குறியின் விறைப்புப் பகுதிகள் ஒரே விகிதத்தில் வளராமல் போகிறது.

நோய் கண்டறிதல்

ஆண்குறி விறைத்திருக்கும் நிலையில் உடலை ஆய்வு செய்து இந்தப் பிரச்சனை கண்டறியப்படுகிறது. பிரச்சனையை உறுதிப்படுத்த, கூடுதலாக படமெடுத்தல் சோதனைகள் செய்யப்படலாம்.

சிகிச்சை

கார்டி பிரச்சனைக்கு அறுவை சிகிச்சையே தீர்வாக உள்ளது. ஆரம்ப, அறுவை சிகிச்சை பழுது ஆண்குறியின் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி உறுதி. ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை செய்து சரிசெய்தால் ஆண்குறி ஆரோக்கியமாக வளரும்.

ஹைப்போஸ்பாடியாஸ் பிரச்சனையும் உடனிருந்தால், சிருநீர்த்துவாரத்தைச் சரிசெய்ய, மொட்டின் முன்தோல் திசுவை இடமாற்றி வைத்துச் செய்யும் கூடுதல் அறுவை சிகிச்சையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருக்கும். இதனைச் சரிசெய்ய பல முறை அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கலாம்.

தடுத்தல்

கருவிலிருக்கும் குழந்தைக்கு இந்தப் பிரச்சனை வராமல் தடுக்க, கர்ப்பிணிப் பெண்கள் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். அவற்றில் சில:

புகையிலையையும் மதுவையும் தவிர்க்க வேண்டும்
தினமும் 400-800 mcg ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்ள வேண்டும்
மருத்துவரிடம் சென்று சரியான இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
சிக்கல்கள்

ஆண்குறி இப்படி வளைந்திருப்பது உடலுறவைச் சிரமமாக்கலாம், அல்லது இயலாத காரியமாக்கிவிடலாம்.

அடுத்து செய்ய வேண்டியவை

கார்டி பிரச்சனை உள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டதும், அதற்கான சிகிச்சைத் திட்டம் பற்றியும், எத்தனை அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும் என்பதைப் பற்றியும் உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசுங்கள்.
தொடர்ச்சியாக, தவறாமல், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைகள் பெறவும், மருத்துவரின் அறிவுரைகளை அப்படியே பின்பற்றவும்.
ஆண்குறியை முரட்டுத்தனமாகக் கையாள்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக ஆண்குறி விறைத்திருக்கும்போது கவனம் தேவை, விறைத்திருக்கும்போது ஆண்குறியை முரட்டுத்தனமாகக் கையாண்டால் ஆண்குறி முறிவு ஏற்படலாம்.