Home குழந்தை நலம் மகளிடம் மனம் விட்டுப்பேசவேண்டும்

மகளிடம் மனம் விட்டுப்பேசவேண்டும்

42

அவள் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். வயது 13. நன்றாக படிப்பாள். நல்ல குணங்களும் நிறைந்தவள். மாநிறம் கொண்டவள். சற்று குண்டான உடல்வாகு கொண்டவள். ஆனால் அவளது அம்மா நல்ல நிறம். ஒல்லியான உடல்வாகு. 40 வயதை கடந்த நிலையிலும் பார்க்க பளிச்சென்று இருப்பாள்.

தனது தாயோடு மகளுக்கு வெளியே செல்லவே பயம். தாயோடு வெளியே செல்லும்போது உறவினர்களோ, தெரிந்தவர்களோ பார்த்துவிட்டால், ‘நீ பார்க்க எவ்வளவு அழகாக ஒல்லியாக, நல்ல நிறமாக இருக்கிறாய். ஆனால் உன் மகள் அப்படி அல்ல. இவள் உன் மகள் என்றால் யாரும் நம்பமாட்டார்கள்’ என்பார்கள்.

இப்படிப்பட்ட விமர்சனத்தை கேட்டு அந்த சிறுமி மனம் சோர்ந்து போனாள். அதனால் படிக்கும் ஆர்வம் குறைந்தது. எப்போதும் கண்ணாடி முன்பு நின்று தன்னைத்தானே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருப்பாள்.

இப்படிப்பட்ட நிலை உங்கள் மகளுக்கு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

* மகளிடம் மனம் விட்டுப்பேசவேண்டும். ஒரு பெண்ணுக்கு நிறமோ, உடல் அமைப்போ சிறப்பு தருவதில்லை. அவளது குணாதிசயங்களே சிறப்பு தருகின்றன என்ற உண்மையை அவள் புரியும்விதமாக எடுத்துச்சொல்லவேண்டும்.

* ‘எந்த ஒரு செயலுக்கும் வெளியே இருந்து இரண்டு விதமான கருத்துக்கள் வரும். ஒன்று நம்மை ஊக்கப்படுத்துவதாக இருக்கும். இன்னொன்று நமது உற்சாகத்தை குறைக்கக்கூடியதாக இருக்கும். அதனால் நம்மை பற்றி வெளியே இருந்து தேவையற்ற கருத்துக்கள் வரும்போது அவைகளை புறக்கணிக்கத் தெரிந்திருக்கவேண்டும். உன்னை நோகடிக்கும் விதத்தில் யாரெல்லாம் கருத்துக்கள் சொல்கிறார்களோ அவர்களது கருத்துக்களை கண்டுகொள்ளாதே. உனக்கு மகிழ்ச்சி தரும் கருத்துக்களை சொல்பவர்களுக்கு மட்டும் மதிப்புகொடு’ என்று உங்கள் மகளிடம் சொல்லுங்கள்.

* நிறத்தைவிட, வடிவத்தைவிட உடல் ஆரோக்கியம் மிக அவசியம் என்பதை உங்கள் மகளுக்கு உணர்த்துங்கள். சமச்சீரான சத்துணவு கொடுங்கள். நேரத்திற்கு சாப்பிடசொல்லுங்கள். படிப்போடு உற்சாகமான பொழுதுபோக்குகளிலும் ஈடுபடச்செய்யுங்கள். அதன் மூலம் அவள் மனநிலை தெளிவடையும். மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்த அழகு என்பதை அவள் புரிந்துகொள்வாள்