Home சூடான செய்திகள் ”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

162

தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன?

-உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். இதை முறையாக சொல்லித்தர வேண்டும். உடல் பற்றிய தன்னம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளுதல் முக்கியம். “நான் ஏன் இவ்ளோ குண்டா இருக்கேன்?”, “ஒல்லியா இருக்கேன்?”, “கருப்பா இருக்கேன்?” இந்தக் கேள்விகளுக்கு பதில் தந்து அவர்களுக்கு குற்ற உணர்வையும், அழகு பற்றிய புது பார்வையையும் சிறு வயதில் இருந்தே கற்றுத்தர வேண்டும்.

-பெண்களாக இருந்தால் மார்பகம் பெரிதாகுதல், மாதவிடாய் தோன்றுதல் போன்றவை சிக்கல்களை ஏற்படுத்தும். “அம்மா, இதெல்லாம் பொண்ணுகிட்ட பேசக்கூடாது. அத்தைங்கதான் பேசணும்” என்று நம்முடைய சமூகம் சில முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. அத்தை வந்து இதை சொல்லித் தருவதற்குள் அந்தப் பெண்ணுக்கு சிக்கலாகும். ’வயதுக்கு வருதல்’ என்பது கொண்டாடப்படுவது அல்ல. அதற்கு முன்பே அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது.

-ஆண்களாக இருந்தால் மீசை முளைத்தல், குரல்வளை உடைந்து வேறு ஒரு குரல் தோன்றுதல் இதெல்லாம். இதைப் பற்றிய தெளிவை பள்ளிகளில் உருவாக்க வேண்டும். “அவனுக்கு மட்டும் மீசை முளைச்சிடுச்சி, குரல் மாறுது” என அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை தகுந்த அறிவியலுடன் சொல்லித்தர வேண்டும்.

-5 அல்லது 6-ஆம் வகுப்புப் படிக்கும் போதே இப்போதெல்லாம் பாலியல் உறவைப் பற்றிய ஆர்வம் தோன்றுகிறது. அவர்களாக ஊடகம், சினிமா, இணையதளத்தில் தவறாகப் புரிந்துக் கொள்வதற்கு முன் சரியாக ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தல் நல்லது.

-இதே வயதில்தான், அதுநாள் வரை இயல்பாக விளையாடிக் கொண்டிருந்த ஆணும் பெண்ணும் ஒரு இடைவெளியை ஏற்படுத்துவார்கள். அதுவே அவர்களுக்குள் சில கேள்விகளை ஏற்படுத்தும். “இது காதலா?” எனும் கேள்விக்கு அவர்களே விடையைத் தேட முயற்சிக்கும் போதுதான் உறவுகள் பற்றிய குழப்பமும் பிரச்சனையும் ஏற்படுகிறது.

-ஆண்-பெண் சமத்துவம் ஏற்பட முக்கிய பாதையாக பாலியல் கல்வி இருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் இதுவரை பாலியல் கல்வி எடுக்கும் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் பெரும்பாலும் கேட்பது, “ஏன் அம்மா மட்டும் சமைக்கிறாங்க?”, “அம்மா ஏன் வேலைக்கு போறது இல்ல?” இந்தக் கேள்விகள் குழந்தைகள் கேட்க ஆரம்பித்தாலே சமத்துவம் என்பது சிலரது மனதிலாவது ஏற்படும்.

-பாலியல் உறவு ஓர் அழகான உறவு. அது நம்மிடமிருந்து மறைத்து வைக்க வேண்டிய விசயமில்லை. “நமக்கான பாலியல் துணை வரும்போதுதான் நாம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அது நம் துணைக்கு செய்யும் ஒரு மரியாதை. நம் காதலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு.” என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். இதற்கு பாலியல் கல்வி அவசியமானதாக உணரப்படுகிறது.

-பத்தாம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாலியல் உறவைப் பற்றி முழுதாக சொல்லித் தருவதில்லை. ஆனால், “அது ஒரு நல்ல உறவு. அதனால்தான், நாம் எல்லோரும் இங்கு இருக்கிறோம்” என்று சொன்னாலே போதுமானது. இதை சொல்லாமல் விட்டால் சரியான வழிகாட்டுதல் இன்றி தவறாக அதைப்பற்றிக் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அவர்கள் கற்றுக்கொள்ளும் ஊடகங்களில் காட்டும் பாலியல் உறவில் ஆண்-பெண் சமத்துவம் இல்லை.

-இவை எல்லாம் ஏன் வீட்டில் சொல்லித் தர முடியாதா? கண்டிப்பாக, சரியாக அனைத்தையும் சொல்லித்தரும் அளவுக்கு இந்திய பெற்றோர்கள் இல்லை. அவர்கள் பலவற்றை மறைத்து வைக்கத்தான் நினைக்கிறார்கள். வீட்டில், டிவி பார்க்கும்போது ஒரு முத்தக்காட்சி வந்த உடனேயே சேனலை மாத்திடுவாங்க. அப்பதான் அது என்னன்னு தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் ஏற்படும்.

-ஆசிரியர்களும் கூட, இனப்பெருக்க முறை பற்றி பாடம் வந்தால், “இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு? நீங்களே படிச்சாலே புரியும்.” என்று சொல்லிவிடுவார்கள். தகுந்த ஆசிரியர்கள், முறையான பாடத்திட்டம், வழிகாட்டுதல் இருந்தால் பாலியல் கல்வி சாத்தியமே.