திருமணமான புதிதில் இருந்த இன்பம் நாட்கள் போக போக குறைந்துவிடும். வேலை, அலைச்சல், குழந்தைகள், அவர்களின் படிப்பு என்று நேரக் குறைபாடும் கூட இதற்கு காரணம். மற்றதைப் பேசவே நேரம் சரியாக இருக்கும். அவரவரைப் பற்றி பேசி வருடங்கள் ஓடியிருக்கும்.
திருமணத்தின் புதிதில், வீட்டு வாசல் வரை வந்து பேசிய பின்பும் கூட அலுவலகம் சென்றவுடன் மீண்டும் மனைவிக்கு கால் செய்து பேசியிருப்பார்கள். ஓரிரு வருடங்களில் இப்பழக்கம் குறைந்திருக்கும், ஐந்தாறு வருடங்களில் இப்பழக்கம் மறந்தே போயிருக்கும்.
இது போல, ஓர் உறவுக்குள் இன்பம் சுரக்கவும், அதிகரிக்கவும் காரணமாக இருந்த பல பழக்கங்களைக் காலப் போக்கில் மறந்திருப்போம். இதன் காரணமாக கூட வாழ்வில் சிலருக்கு கசப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்த பழக்கங்களை மீண்டும் உங்கள் வாழ்க்கையில் உட்புகுத்தி பாருங்கள், மீண்டும் அந்த இன்பம் சுரக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன…
ஒரே நேரத்தில் உறங்குவது கணினியும், ஸ்மார்ட் போனும் படுக்கையறைக்கு வந்த பிறகு, ஒன்றாக தூங்க செல்வது பெரும்பாலும் குறைந்துவிட்டது. அலுவலக வேலைகளை வீட்டிலும் செய்வது. நண்பர்களுடன் நள்ளிரவு வரை அரட்டை போன்றவை இதற்கு காரணமாக இருக்கின்றன.
பொதுவாக பிடித்தது
ஆரம்பத்தில், இருவருக்கும் பொதுவாக பிடித்த விஷயங்களை அடிக்கடி செய்து வந்திருப்பார்கள். காலப் போக்கில் நேரமின்மையின் காரணமாக அது தடைப்பட்டுப் போயிருக்கும். உதாரணமாக ஒன்றாக சமைப்பது, கோயிலுக்கு செல்வது, திரைப்படங்கள் பார்ப்பது போன்றவை.
கை இணைத்து இருங்கள்
மிகவும் எளிதான விஷயம் தான் ஆனால், மனதையும், உடலையும் இலகுவாக்கும் பழக்கம் இது. கைகளைக் கோர்த்து அமர்ந்திருப்பது. மனதுவிட்டு பேச இது ஒரு ஊன்றுகோலாக இருக்கும்.
நம்பிக்கை, மன்னிக்கும் குணம்
திருமணம் ஆன புதிதில் இருந்த மன்னிக்கும் குணம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்திருக்கும். இதுவே, கோபம் அதிகரிக்கவும் காரணமாக இருக்கின்றது. நம்பிக்கையும், மன்னிக்கும் குணமும் உள்ள இடத்தில துன்பதிற்கு இடமில்லை.
நேர்மறை செயல்கள்
அனைவரிடமும் குற்றம், குறை இருக்க தான் செய்கிறது. அதை மறந்து நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்கையை நடத்துவது அவசியம் ஆகும். கணவன், மனைவி உறவில் இது மிக முக்கியம்.
முத்தமும், கட்டிப்பிடிப்பதும்
பெரும்பாலானோர் செய்யும் தவறு, குழந்தைகள் பிறந்து பிறகு முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் தவறு என்று கருதுவது. முத்தமும், அரவணைப்பும் உங்களை உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மகிழ்விக்கும் செயல் ஆகும்.
சேர்ந்து சாப்பிடுவது
வேலைக்கு செல்லாத பெண்கள் இருக்கும் வீட்டில் மட்டும் தான் இரவு வேளை மட்டும் சேர்ந்து சாப்பிடுகின்றனர். பெரும்பாலும் வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் சேர்ந்து சாப்பிடும் பழக்கம் குறைந்துவிட்டது.
எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் அதை கட்டிலுக்கு எடுத்து செல்வது தான் பெரும்பாலும் இல்வாழ்க்கையின் இன்பத்தை குறைக்கின்றது. எனவே, இதை முற்றிலும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
சிறு சிறு விஷயங்களில் உதவி
பாத்திரம் கழுவும் போது அதை எடுத்து வைப்பது, துணி துவைக்கும் போது காயப் போடுவது, வீடு சுத்தம் செய்யும் போது பொருட்களை அடுக்கி வைப்பது போன்ற வேலைகளில் சிறு சிறு உதவிகள் செய்யுங்கள்.
கேலி, கிண்டல்
இல்வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் கேலி, கிண்டல்கள் என்று சந்தோசமாக தான் இருந்திருப்பீர்கள். ஆனால், காலப் போக்கில் இந்த பழக்கத்தை மறந்திருப்பீர்கள். அளவான கேலி, கிண்டல் உறவை பலப்படுத்தும்.
நலம் விசாரித்தல்
அலுவலகத்தில் இருக்கும் போது, நேரம் கிடைக்கும் தருணங்களில் கால் செய்து எப்படி இருக்கிறாய் என்று நலம் விசாரித்தல் உங்கள் உறவை வலுமையடைய செய்யும்.
இன்ப சுற்றுலா
குடும்பமாக எங்காவது வருடத்திற்கு இருமுறையாவது சென்று வாருங்கள். இது உங்கள் உறவை மட்டுமின்றி மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்