தவறான கருத்து 1. முதல் முறை உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் கர்ப்பமடைய முடியாது.
உண்மை: முதல் முறையாக உடலுறவில் ஈடுபட்டாலும் கூட நீங்கள் கர்ப்பமாக முடியும்.ஒரு பெண்ணுக்கு கருமுட்டைகள் உருவாகத் தொடங்கினால் போதும், அவர் கர்ப்பமாகத் தயாராகிவிடுகிறார். உண்மை என்னவென்றால், முதல் முறை கருமுட்டை உருவான பிறகு, அதாவது முதல் முறை ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வரும் சில நாட்களுக்கு முன்பே உடலுறவு வைத்துக்கொண்டாலும் அதனால் அந்தப் பெண் கர்ப்பமடைய வாய்ப்புள்ளது. ஆகவே, எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்கவும். உடலுறவுக்கு முன்பு சரியான கருத்தடை முறையைப் பின்பற்றவும்.
தவறான கருத்து 2. விந்து வெளியேறும் முன்பு ஆணுறுப்பை வெளியே எடுத்துவிட்டால் கர்ப்பமடைவதைத் தடுக்கலாம்
உண்மை: விந்து வெளியேறும் முன்பே ஆணுறுப்பில் இருந்து வெளியேறும் வழவழப்புத் திரவத்தில் கூட விந்தணுக்கள் இருக்கும். அதிலிருந்து ஒரே ஒரு விந்தணு உள்ளே நுழைந்து கருப்பையை நோக்கி நகர்ந்து ஃபெல்லோப்பியன் குழாய்க்குச் சென்றாலும், கர்ப்படைய வாய்ப்புள்ளது.
தவறான கருத்து 3. மாதவிடாய் நாட்களின்போது உடலுறவு கொண்டால் கர்ப்பம் உண்டாகாது
உண்மை: கர்ப்பமடைய வாய்ப்புள்ளது. ஆனால் மிகவும் வாய்ப்பு குறைவு.சில பெண்களுக்கு நீண்ட மாதவிடாய் பல நாட்கள் வரும், அதாவது கருமுட்டை வெளியாகும் நாட்களிலும் அவர்களுக்கு மாதவிடாய் வந்துகொண்டிருக்கலாம். அத்தகைய பெண்கள் மாதவிடாய் முடியும் சமயத்தில் உடலுறவு கொண்டால், அவர்கள் கர்ப்பமடைய வாய்ப்புள்ளது, ஏனெனில் விந்தணுக்கள் பெண்களின் இனப்பெருக்கப் பாதையில் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். ஆகவே, பாதுகாப்பான உடலுறவுக்கு எப்போதும் கருத்தடை முறைகளைப் பின்பற்றவும்.
தவறான கருத்து 4. ஒரு ஆணுறையை இரண்டு முறை பயன்படுத்தலாம்!
உண்மை: ஆணுறைகள் இரண்டு முறை பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டவை அல்ல. நீங்கள் கழுவினாலும் எப்படிச் சுத்தம் செய்தாலும் அவற்றை இரண்டாவது முறை பயன்படுத்தக்கூடாது. ஆணுறைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம் .ஒரு முறை பயன்படுத்தியதும் அதன் பலம் குறைந்து பயனற்றதாகிவிடும்.
தவறான கருத்து 5. புணர்ச்சிப் பரவசநிலையை அடையாமல் உடலுறவில் இன்பம் அனுபவிக்க முடியாது
உண்மை: காமம் என்பது புணர்ச்சிப் பரவசநிலையை அடைவது மட்டுமே அல்ல.அது அன்பு, காதல், நெருக்கம் ஆகிய பல உணர்வுகளின் சங்கமம். ஒவ்வொரு முறை உடலுறவில் ஈடுபடும்போதும், அது புணர்ச்சிப் பரவசநிலையில் முடியும் என்று கூற முடியாது, ஆனால் உங்கள் துணைவருடன் நெருக்கமாக அன்பைப் பகிர்ந்துகொண்ட திருப்தியையும் மகிழ்ச்சியையும் அது கொடுக்கும்.
தவறான கருத்து 6. அனைத்துப் பெண்களுக்கும் புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும்.
உண்மை: சில பெண்களுக்கு அனார்காஸ்மியா எனும் பிரச்சனை இருக்கும், அவர்கள் புணர்ச்சிப் பரவசநிலை அடைய முடியாது.அதற்காக அவர்கள் உடலுறவில் இன்பம் காண முடியாது என்று பொருளல்ல. நெருக்கமாக உணர்வது, அன்பைப் பகிர்ந்துகொள்வது போன்ற நல்ல உணர்வுகளுக்காக அவர்கள் உடலுறவை விரும்புவார்கள்.
தவறான கருத்து 7. வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடுவதால் பால்வினை நோய்கள் (STD) வராது
உண்மை: பால்வினை நோய்கள் பெரும்பாலும் இயல்பான புணர்ச்சி மற்றும் குதவழிப் புணர்ச்சி மூலமே பரவும் என்றாலும், உரிய பாதுகாப்பின்றி வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டாலும் பரவும் அபாயமுள்ளது. கொனோரியா, சிஃபிலிஸ், ஹெர்பிஸ் போன்ற நோய்கள் வாய்வழிப் புணர்ச்சியின் மூலம் பரவக்கூடும். ஆகவே, வாய்வழிப் புணர்ச்சிக்கும் ஆணுறைகளைப் பயன்படுத்துவது நல்லது.
தவறான கருத்து 8. உடலுறவின் இன்பம் ஆணுறுப்பின் அளவைப் பொறுத்தது
உண்மை: உடலுறவின் இன்பம் ஆணுறுப்பின் அளவைப் பொறுத்ததல்ல.பெண்களின் உறுப்பில், பிறப்புறுப்பின் வெளிப்புறமும், கிளிட்டோரிஸ் எனப்படும் பென்குறிக் காம்பும் தான் பெண்களின் உடலுறவு இன்பத்திற்குக் காரணமாகும் முக்கியமான உறுப்புகளாகும். ஆகவே, சிறிய ஆணுறுப்பாக இருந்தாலும் பெண்ணுக்கு பாலியல் கிளர்ச்சியைத் தூண்டவும் உடலுறவில் இன்பம் கொடுக்கவும் முடியும்.
தவறான கருத்து 9. ஆணுறை பயன்படுத்தினால் உடலுறவில் இன்பம் இருக்காது
உண்மை: நீங்கள் ஆணுறையைப் பயன்படுத்தும்போது கர்ப்பம் பற்றியோ தோற்று நோய்கள் பற்றியோ எவ்வித அச்சமும் இன்றி நிம்மதியாக உடலுறவில் ஈடுபடுவீர்கள், இதனால் உண்மையில் உடலுறவின் இன்பம் அதிகமாகவே செய்யும். கவலையின்றி இன்பம் பெறுவீர்கள்!
உடலுறவு மற்றும் அதன் இன்பம் குறித்து நிலவும் தவறான கருத்துகளில் சிலவற்றை மட்டுமே இங்கு பார்த்தோம். இதுபோன்ற தவறான கருத்துகளைப் பற்றி உண்மையைத் தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருந்து மகிழ்ச்சியான வாழ்வை வாழுங்கள்!