திருமணமாகி பல வருடங்கள் ஆகியும், குழந்தையில்லை என மருத்துவரை அணுகும்போதுதான், ஆயிரம் பிரச்னைகளை காரணங்களாக அடுக்குவார்கள். திருமணத்துக்கு முன்பிலிருந்தே இருக்கும் உடல்நலக் கோளாறுகளுக்கு முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளாததன் விளைவாகவும் அந்தப் பிரச்சனை இருக்கலாம்.
இப்படிப்பட்டவர்கள் ஒரு ரகம் என்றால், சின்னச் சின்ன பிரச்னைகளைக்கூட பெரிதாக நினைத்துக் கொண்டு, பயந்து மருத்துவரை அணுகுகிறவர்கள் இன்னொரு ரகம். அதிலும் கர்ப்பம் தரிக்கிற பருவத்தில் அவர்களுக்கு ஏற்படுகிற சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் அளவே இருக்காது. அந்த வகையில் இதய நோய்கள் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா என்கிற கேள்வியும் பல பெண்களுக்கு உண்டு. அந்தப் பயத்தை தெளிவுபடுத்தி, அதற்காக ஆலோசனைகளை கீழே பார்க்கலாம்.
‘‘இதய நோய்களில் 2 வகை உண்டு. முதல் வகை, பிறப்பிலேயே இருக்கக்கூடிய பிரச்சனைகள். அடுத்தது பிறந்த பிறகு வெவ்வேறு காரணங்களால் வருவது. பிறப்பிலேயே உருவாகும் இதயப் பிரச்சனைகளில் பிரதானமாக இருப்பவற்றை அந்தந்த வயதிலேயே அறுவை சிகிச்சை செய்து, சரியாக்கி, மருந்து மாத்திரைகள் கொடுத்து ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
வெவ்வேறு காரணங்களால் வரும் இதய நோயில் முக்கியமானது ‘ருமாட்டிக் மைட்ரல் வால்வு’ நோய். ருமாட்டிக் காய்ச்சல் என்கிற ஒரு வகைக் காய்ச்சல் வந்து போன பிறகு சிலருக்கு இதயத்தின் இடது சேம்பரில் இருக்கும் மைட்ரல் வால்வு பாதிக்கப்படும். அதாவது, அந்த வால்வின் இயக்கம், சாதாரணமாக இருப்பதைவிட இறுக்கமாக மாறிவிடும்.
இதனால் இதயத்தில் இருந்து வரும் ரத்த ஓட்டத்தின் வேகம் போதாமல், மூச்சு வாங்க ஆரம்பிக்கும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களை 8-ம் மாதமே மருத்துவமனையில் சேர்த்து, முழு ஓய்வில் வைத்திருக்கக் வேண்டிய அவசியம் நேரிடலாம். பிரசவம் ஆன பிறகுகூட இவர்களுக்கான ஆபத்து குறைவதில்லை.
அவ்வளவு நாளும் குழந்தைக்குச் சென்று கொண்டிருந்த ரத்த ஓட்டம் எல்லாம் திரும்ப அம்மாவின் இதயத்துக்கே வந்து சேர்வதால், இதயம் அதிகப்படியான லோடு தாங்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதனால் குழந்தை பிறந்த பின்பும் சில மணி நேரம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. மருத்துவரின் அறிவுரைப்படி நடந்து கொண்டால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். பயம் வேண்டாம்.’’