குழந்தை வளர்ப்பு என்பது எளிதான காரியம் அல்ல. அதிலும் ‘டீன் ஏஜ்’ பருவத்தினருடன் உறவுகளை பேணுவது என்பது பெற்றோருக்கு கயிற்றின் மீது நடப்பது போன்றது. முன்காலத்தில் குழந்தைகளை வளர்க்க உறவுகள் அனைத்தும் ஒன்றுகூடிவிடும். பெரும்பாலும் கூட்டுக்குடும்பமாகவே இருந்து வந்ததால் பெற்றோர் மட்டுமின்றி ஒவ்வொரு உறவினரும் அந்த குழந்தைகளின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்வார்கள்.
அவர்கள் அரவணைத்தும், கண்டிப்பு காட்டியும் வளர்த்து தங்கள் குழந்தைகளை போல பாவித்து நல்வழிப்படுத்துவார்கள். மேலும் அன்றைய பெற்றோர் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள். மூத்த பிள்ளைகள் தங்களுடைய தம்பி-தங்கைகளை அக்கறையோடு பார்த்துகொண்டார்கள். அதனால் அந்த காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது எளிதான காரியமாக இருந்தது.
ஆனால் இன்று அப்படி அல்ல. கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதறி தனிக்குடித்தன வாழ்க்கை மேலோங்கிக்கொண்டிருக்கிறது. அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டிருக்கிறது. அந்த குழந்தைகளை அரவணைத்து அன்பை பொழிய வேண்டிய உறவு வட்டமும் சுருங்கி போய்விட்டது. பெற்றோர்களுக்கே தங்கள் குழந்தைகளை அக்கறையாக பராமரிப்பதற்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை. அதிலும் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் குழந்தையை வளர்த்தெடுக்க பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. காலை, மாலை நேரங்களை குழந்தைகளோடு செலவிடமுடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் அநேகம். அதனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தனிமையே துணையாக மாறிவிடுகிறது.
பழைய தலைமுறை பெற்றோர், ‘இவன் தப்பு பண்ணினால் தோலை உரித்து விடுங்கள்’ என்று ஆசிரியரிடம் சொல்வார்கள். ஆனால் இந்த கால பெற்றோரின் மனோபாவம் அப்படி இருப்பதில்லை. ஆசிரியர்கள் கடுமை காட்டினாலேயே, ‘எதற்காக அப்படி திட்டுகிறீர்கள்?’ என்று கேள்வி கேட்கும் நிலைதான் இருக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்களை திட்டினால் அது அவர்களின் நலனுக்காகத்தான் இருக்கும் என்ற எண்ணம் பெரும்பாலான பெற்றோர்களிடம் இல்லை.
ஒருசில பெற்றோர் குழந்தைகள் தவறு செய்தால் கடுமையாக கண்டிப்பார்கள். கண்டிப்பு மட்டுமே அவர்களை சீர்படுத்தாது. அவர்கள் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கூறி, இனி அவ்வாறு செய்யாமல் இருக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களை மனம்விட்டு பாராட்டவும் வேண்டும். பாராட்டுகளில் ஒருபோதும் குறைவைக்கக் கூடாது. பெற்றோரின் பாராட்டு குழந்தைகளுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர் களுடைய செயல்திறன், சிந்தனை ஆற்றலை மேம்படுத்தும். எல்லா காரியங்களையும் அவர்கள் ஈடுபாட்டோடு செய்யும் மனநிலையை உருவாக்கும்.
இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளை கூடுதல் அரவணைப்புடன் வளர்க்க வேண்டும். எப்போதும் அவர்களுடன் இணைந் திருந்து அவர்களின் செயல்பாடுகளை ரசித்து ஊக்கப்படுத்த வேண்டும். 4 வயது முதல் 7 வயது வரை குழந்தைகளை அவர்களின் போக்குக்கு விட்டுவிட வேண்டும். அதே சமயம் நம்முடைய நேரடி கட்டுப்பாட்டில் அவர்களை கண்காணித்துவர வேண்டும்.
7 வயது ஆன பிறகும் அரவணைப்பை தளர்த்தாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வளர்க்க நினைப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். ஓடி விளையாட ஆசைப்படும் அவர்களை கட்டுப் படுத்தக்கூடாது. ஓடியாடி விளையாடும் குழந்தையை இடுப்பில் வைத்திருந்தால் சவலைப்பிள்ளையாக மாறி விடும். அதற்கேற்ப அவர்களுடைய குணாதிசயங்களும் அமைந்துவிடும். 7 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளை அவர்கள் விருப்பப்படி செயல்பட விட வேண்டும்.
10 முதல் 17 வயது வரை உள்ள கால கட்டம்தான் மிக முக்கியமானது. அப்போதுதான் உடல் வளர்ச்சி ஏற்படும். அவர்களுடைய உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் ஏற் படும். இதை ஒரு சுனாமி கால கட்டம் என்றும் சொல்லலாம். உடல் ரீதியான மாற்றங்கள் அவர்களின் நடவடிக்கையை புரட்டி போட்டுவிடும். இந்த காலகட்டத்தை ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது என்பார்கள். அதற்கேற்ப உடலில் அதிக சக்தி வெளிப்படும். ஓரிடத்தில் உட்கார் என்று சொன்னாலும் உட்காரமாட்டார்கள். எங்கும் தனியாகவே சென்று வர விரும்புவார்கள். சுதந்திரமாக உலாவர நினைப்பார்கள்.
சிறுவயதில் பெற்றோர் விருப்பத்திற்கு அவர்கள் முடி அலங்காரம் செய்திருக்கலாம். ஆனால் டீன்ஏஜ் பருவத்தில் தங்கள் சிகை அலங்காரத்தை தாங்களே தீர்மானிக்க ஆசைப்படுவார்கள். கண்ணாடி முன்பு நின்று கொண்டு மணிக்கணக்கில் தலைமுடியை விதவிதமான ஸ்டைல்களில் சீவி அலங்கரிப்பார்கள். பின்னர் இரண்டே விநாடிகளில் சிகை அலங்காரத்தை கலைத்தும் விடுவார்கள். அதை எல்லாம் பார்த்து திட்டிக்கொண்டிருக்காதீர்கள். நாளாக, நாளாக அவர்களாகவே இயல்புநிலைக்கு திரும்பி வந்துவிடுவார்கள். இந்த விஷயங்களுக்கெல்லாம் பெற்றோர் டென்ஷனானால் பிள்ளைகளின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். நம்மை கட்டுப்படுத்துகிறார்கள் என்று பிள்ளைகள் நினைக்கத்தொடங்கிவிடுவார்கள்.
தான் சின்னப்பிள்ளை அல்ல என நினைக்கும் பருவம் டீன்ஏஜ்! பூனையாக இருப்பவர்கள் கூட முக கண்ணாடியில் புலியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள். தன்னை மிகுந்த தைரியசாலியாக அடையாளத்தை காட்ட விரும்புவார்கள். நண்பர்களுக்கு முக்கியத்துவம் தர நினைப்பார்கள். இந்த வயதில் பெற்றோர் சொல்வது எதுவும் அவர்களுக்கு புரியாது. காது கொடுத்து கேட்கவும் மாட்டார்கள்.
மூளையில் சிறுமூளை, பெருமூளை என இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் வாலிப வயதினருக்கு சிறுமூளைதான் சட்டென்று வேலை செய்யும். பெற்றோருக்கு பெருமூளை வேலை செய்யும். இதுதான் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் உள்ள வித்தியாசம்.
அதுநாள் வரை அவர்களுடைய ஒவ்வொரு தேவைக்கும் பெற்றோர்களை எதிர்பார்த்து இருந்திருப்பார்கள். ஆனால் டீன் ஏஜ் பருவம் எதையும் தானே செய்ய துணியும் மனஓட்டத்தை உருவாக்கியிருக்கும். அவர்களுடைய போக்கிலேயே சென்று அவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டும்.
17 முதல் 25 வயது பருவத்தினரை, பெற்றோர்கள் தங்களை போன்று சரிசமமாக பார்க்க வேண்டும். 25 வயதுக்கு மேல் பெற்றோர்களை, பிள்ளைகள்தான் வழி நடத்த விரும்புவார்கள். சிறியவர்களாக இருந்தபோது அவர்கள் பெற்றோரின் கையை பிடித்துக்கொண்டு நடந்திருப்பார்கள். பெற்றோருக்கு வயதாகிவிட்டால் அவர்கள், பிள்ளைகளின் கையை பிடித்துச்செல்ல தயக்கம் காட்டக்கூடாது. இந்த மாற்றத்தை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள்தான் சரியான பெற்றோர்கள்!