Home பெண்கள் தாய்மை நலம் பிரசவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

பிரசவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

26

captureபிரசவ வலி (Labour pain) எப்படி? எப்போது?

ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்றும் அந்த நிமிடங்களை அவளால் என்றுமே மறக்க முடியாது.

பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன?

மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் ஊட்ட வசதியாக முன் பக்கம் திறப்பு வைத்த உடை, நீண்ட கவுன் போன்ற மாற்று உடைகள், காலணிகள், குழந்தைக்குத் தேவையான துணிகள், ஈரம் உறிஞ்சும் துண்டுகள் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

அதேபோல் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் தேவையான உடைகள், சோப்புகள், நாப்பிகள், துப்புரவுத் துணிகள் போன்றவற்றை தயாராக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவர், மருத்துவமனை, கணவர், நண்பர், அவசரத்திற்கு கூப்பிட்டால் ஓடிவரும் உறவினர்கள் போன்றோரின் செல்நம்பர்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அவசர நேரத்தில் அவர்களை அழைப்பதற்கு உதவியாக இருக்கும். பிரசவத்தின் போது மருத்துவமனைக்குச் செல்லும் வாகன ஏற்பாட்டையும் தயார் செய்துகொள்ளுங்கள். முதன்முறையாக குழந்தை பெறும்போது பிரசவ நேரம் பொதுவாக சுமார் பதிமூன்று முதல் பதினான்கு மணிநேரம் வரை ஆகலாம். ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தால் சுமார் எட்டு முதல் ஒன்பது மணி நேரமே நீடிக்கும்.

கர்ப்பகாலம் முழுவதும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து பிரசவத்திற்குத் தயாராகும். கர்ப்பத்தின் கடைசிக் காலத்தில் இந்த சுருக்கங்கள் அடிக்கடி நிகழும். தொடக்கத்தில் மிகக்குறைந்த அளவிலான தசைச் சுருக்கங்களே காணப்படும். ஒவ்வொரு சுருக்கத்திற்கும் சிறிது இடைவெளி இருக்கும். படிப்படியாக சுருக்கங்கள் அதிகமாகி, அடிக்கடி வரத் தொடங்கும்.

இந்த நேரத்தில் ஏற்படும் வலி சற்று அதிகமாகவே இருக்கும். இதுதான் பிரசவம் நிகழப்போகும் நேரம். பிரசவவலி எப்போது எடுக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அதிகமாக வலி எடுத்தால் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளை குளிப்பாட்டுவர். இளஞ்சூடான நீரில் குளித்தால் ஆரம்பகால பிரசவ வேதனையை சற்று தணிக்கும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.

தாங்க முடியாத வலி ஏற்படும்போது சில குறிப்பிட்ட வலி நிவாரணிகளை மருத்துவர் தருவார். பேறு காலத்தில் ஏற்படும் வேதனையை நினைத்து கவலைப்படுவதால் வலி அதிகரிக்கும். எனவே, வலியைக் குறைக்க மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

சுவாசிக்கும்போது மார்பகச்சுவர் விரி வடைந்து, உதரவிதானம் அதிகளவு கீழ் இறங்குவது தான் முழுமையான சுவாசம்.

நீங்கள் சரியான வழியில் சுவாசித்தால் குழந்தைப்பேற்றின்போது மிகச்சுலபமாக குழந்தை வெளித்தள்ளப்படும். பிரசவவலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின் முதற்கட்டத்திலேயோ, கருப்பைக் கழுத்துப் பகுதியிலிருந்து கோழையானது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதற்கு `பிரசவத்திற்கு முன்னான கோழைக் கசிவு’ என்று பெயர்.

இது பசைத்தன்மையுடன் இளஞ்சிவப்பு நிறமான சளியாக இருக்கும். பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் இந்தக் கசிவின்போது, சளியுடன் கலந்து சிறிது ரத்தமும் வெளியேறும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். பிரசவ வலி ஆரம்பித்தவுடன் குழந்தை மிதந்து கொண்டிருக்கிற பனிக்குடம் உடைந்து விடும்.

இந்த பனிக்குட நீர் உங்களின் பிறப்புறுப்பு வழியாக தாரை தாரையாக வெளியேறும். பிரசவத்தில் மொத்தம் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பைக் கழுத்து படிப்படியாக விரிகிறது. அப்போது தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும். வலி அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு முறை தசைச்சுருக்கம் வரும்போதும் கருவை உந்திவெளியே தள்ளவேண்டும் என நினைப்பீர்கள். கருப்பைக் கழுத்து முற்றிலுமாகத் திறந்து குழந்தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்கல் கூடாது. கர்ப்பிணிகளுக்கு இந்த நேரத்தில் மன உளைச்சலும், அயர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

இரண்டாவது நிலை 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கூட நீடிப்பதுண்டு. கருப்பை தசைச்சுருக்கம் அதிகமாகி, குழந்தையைப் பிடுங்கி வெளியே போட்டுவிடலாமா என்று கூட எண்ணத் தோன்றும். கருப்பை வாய் போதுமான அளவு அகலமாகத் திறந்தவுடன், தசைச்சுருக்கங்கள் தங்கள் இயல்பு நிலையை மாற்றிக்கொண்டு அதிவேகத்தோடு இயங்கும்.

ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பிறகும் கருப்பையின் தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறுகத் தொடங்கும்.

இதனால் குழந்தையோனிக்குள் தள்ளப்படுகிறது. யோனித்திறப்பில் குழந்தையின் தலை அரைப்பாகம் தெரிய ஆரம்பித்த உடனேயே வாயால் காற்றை உள்ளிழுத்து வேகமாக, அதேசமயம் நேர்த்தியாக முக்க வேண்டும்.

இல்லையென்றால் தசைகளும், திசுக்களும் கிழிந்து போக வாய்ப்பு ஏற்படும். தலை வெளியே வந்ததும், அடுத்தடுத்த முக்குதல்கள் மூலம் எஞ்சியுள்ள உடற்பகுதிகள் சுலபமாக வெளியே வந்துவிடும். சில சமயங்களில் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள்.

எல்லா நேரங்களிலும் சிசேரியன் செய்ய வேண்டிய அவசியமில்லை. பனிக்குடத்தில் அதிக நீர் இருத்தல், கருப்பைக் கோளாறுகள், பிரசவத்தின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, குழந்தை தடம் மாறியிருத்தல், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படுதல் போன்ற சிக்கலான நேரங்களில் மட்டுமே சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. மயக்கமருந்து கொடுத்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும்.