Home ஆரோக்கியம் நீரிழிவு நீரிழிவு நோய் பாதிப்பு இந்தியாதான் நம்பர் 1: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை

நீரிழிவு நோய் பாதிப்பு இந்தியாதான் நம்பர் 1: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை

50

துபாய்: உலக அளவில் நீரிழிவு நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினத்தை ஒட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

34.7 கோடி மக்கள் பாதிப்பு


நீரிழிவு நோய் இன்றைக்கு அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. நீரிழிவின் தொடர்ச்சியாக பல்வேறு நோய்கள் மனிதர்களை பாதிக்கின்றன. உலக நாடுகளில் 347 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியா நம்பர் 1


ஆசிய நாடுகளில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நீரிழிவு நோயினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

டாப் 5 நாடுகள்


நீரிழிவு நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளில், இந்தியாவில் மட்டும் 50.8 மில்லியன் மக்கள் நீரிழிவினால் அவதிப்படுகின்றனர். சீனாவில் 43.1 மில்லியன் மக்களும், அமெரிக்காவில் 26.8 மில்லியன் மக்களும் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 9.6 மில்லியன் மக்களும், பிரேசில் நாட்டில் 7.6 மில்லியன் மக்களும் நீரிழிவு பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனத்தில் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்


நீரிழிவு நோய் அமைதியாக இருந்து, எவ்வித எச்சரிக்கைகளையும் வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளே அழித்து வருவது. இதை முன்கூட்டியே கண்டறிந்து, உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வந்தால், அந்நோயின் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து மீண்டுவிடலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

வரும் முன் காக்க வேண்டும்

 

நீரிழிவு நோய் குறித்த சரியான விழிப்புணர்வு இன்மையினாலேயே பெரும்பாலோனோர் அதிகம் பாதிப்பிற்குள்ளாவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நீரிழிவு நோயின்றி ஆரோக்கியமாக வாழ உணவுக்கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. மேலும் எந்த நோய் என்றாலும் வந்த பின் அதற்கான மருந்துகளை உட்கொள்வதை விட வரும்முன் பாதுகாப்பதே சிறந்தது.

உடற்பயிற்சியும் உணவும்


நீரிழிவு நோயை மூன்று வழிகளில் கட்டுப்படுத்தலாம். முறையான உணவுக்கட்டுப்பாடு, சரியான உடற்பயிற்சி, நீரிழிவு நோய்க்கான மருந்துகளை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலையில் எழுந்த உடன் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி அவசியம் மேற்கொள்ளவேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்கவேண்டும். கொழுப்பு குறைவான, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள், பச்சை காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள், உண்ணவேண்டும் அவ்வப்போது எடையை கண்காணிக்க வேண்டும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு இருப்பவர்கள் தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.