Home குழந்தை நலம் கர்ப்ப காலத்தில் சிசுவுக்கு ஏற்படும் கண் பார்வை கோளாறு

கர்ப்ப காலத்தில் சிசுவுக்கு ஏற்படும் கண் பார்வை கோளாறு

27

download (3)அழுகையோடு பிறக்கும் குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும்போது அதன் பார்வை எப்படி இருக்கும்?

அப்போது எதையும் குழந்தையால் முழுமையாக பார்க்க முடியாது. பெரியவர்களின் பார்வைசக்தியில் ஆறில் ஒரு பங்கு அளவே குழந்தையால் அந்த தருணத்தில் பார்க்க முடியும்.

குறைபிரசவ குழந்தை என்றால், அதன் பார்வை சக்தி இதைவிடவும் குறைவாகத்தான் இருக்கும்.

குழந்தை பிறக்கும் அறையில் வெளிச்சம் சற்று அதிகமாக இருந்தால், குழந்தை கண் திறக்கவே சிரமப்படும். பின்பு நாளுக்கு நாள் குழந்தையின் பார்வை சக்தி மேம்பட்டுக்கொண்டே இருக்கும். பிறந்த மூன்று வாரத்தில் வெளிச்சத்தை எதிர்கொள்ள குழந்தையின் கண்கள் தயாராகிவிடும். பிறந்த ஒரு மாதத்தில் அம்மாவின் முகத்தை அடையாளங்கண்டு அம்மாவின் முகம் தென்படும்போதெல்லாம் சிரிக்கத் தொடங்கும்.

‘தொட்டிலின் மேல்பகுதியில் குழந்தையை கவரும் விதத்தில் வண்ணமயமான விளையாட்டு பொருட்களை தொங்கவிடுகிறார்களே அது தேவையா?’ என்ற கேள்வி, இளந்தாய்மார்களுக்கு ஏற்படத்தான் செய்யும்.

வண்ணமயமான விளையாட்டு பொருளை குழந்தையின் பார்வையில்படும்படி கட்டி தொங்கவிடுவது மிக அவசியம். அதன் மூலம் குழந்தையின் கண் இயக்கத்தை தாயால் கண்டறிய முடியும். விளையாட்டு பொருளின் அசைவுக்கு தக்கபடி குழந்தையின் பார்வை திரும்புகிறதா? கவனம் அதில் பதிகிறதா? என்றெல்லாம் பார்க்கலாம்.

குழந்தைக்கு தாய் செய்யக்கூடிய கண் பரிசோதனையாக இதை எடுத்துக்கொள்ளலாம். இதற்காக தாய்மார்கள் அடர்ந்த நிறத்திலான விளையாட்டு பொருட்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.

குழந்தையின் பார்வை சக்தி வாரத்துக்கு வாரம் மேம்படுகிறதா என்பதையும் தாய்மார்கள் கவனிக்கவேண்டும். பிறந்த இரண்டு வாரத்தில் அடர்ந்த நிறத்திலான ஒரு பொருளை குழந்தையின் முன்னால் காட்டினால், அதன் கவனம் அதை நோக்கி ஒரு நிமிடமாவது திரும்பவேண்டும். பின்பு பார்வையை வேறு பக்கம் திருப்பலாம்.

நான்கு மாதம் ஆகிவிட்டால் தனக்கு எது பிடிக்கிறதோ அதில் குழந்தை முழு பார்வையையும் செலுத்தி கவனிக்கும்.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன பின்பு முன்பெல்லாம், அம்மாக்கள் அதன் முன்னே கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவார்கள். மறைந்திருந்துவிட்டு திடீரென்று தோன்றி குழந்தையை சிரிக்கவைக்கும் இந்த விளையாட்டு மூலம் குழந்தை, குறிப்பிட்ட பொருளுக்கு அப்பால் இருந்து தோன்றுவதையும் பார்க்கத் தொடங்கும். இதுவும் குழந்தையின் பார்வைத்திறனை தாயார் உணர்ந்துகொள்ளும் பயிற்சிகளில் ஒன்றுதான்.

9 மாதம் வரை தாய் மீது மட்டுமே பதியும் அதன் பார்வை, அதன் பின்பு தன்னை அடிக்கடி சந்திக்கும் மற்றவர்கள் மீதும் பதியும். உறவினர்களையும் கவனிக்கத் தொடங்கும்.

தாய் வயிற்றில் கருவாக இருக்கும் சிசுவுக்கு 16–வது வாரத்தில் விழித்திரை வளர்ந்து, 40–வது வாரத்தில் முழுமையடையும். கண் முழுமையான வளர்ச்சி பெறாமல் இருப்பது, சிறிய கண்களாக இருப்பது, கண்புரை, கண் புற்று போன்றவைகளை தாய் வயிற்றிலே 20 வாரத்திற்கு பிறகு கண்டுபிடிக்கலாம்.

சில குறைபாடுகளை 32–வது வாரத்தில்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனாலும் வயிற்றுக்குள்ளேவைத்து சிசுவின் கண்களுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கவாய்ப்பில்லை.

குழந்தை பிறந்த உடன் டாக்டர்கள் அதன் கண்களை பரிசோதனை செய்வார்கள். சுகபிரசவம் என்றாலும் கண்களில் தொற்று ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு கண்சிவப்பு, கண்களில் அழுக்கு வருவது போன்றவை இருந்தால் அதை உடனே தாய்மார்கள் கவனிக்கவேண்டும்.

35 வாரங்களுக்கு முன்பே பிறந்தால் அவைகளை குறைமாத குழந்தைகள் என்கிறோம். பொதுவாக இந்த குழந்தைகள் 2 கிலோவுக்கும் குறைவான எடையுடன் இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு கண்பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலை அதிகம். அதனால் பிறந்த 30 நாட்களுக்குள் விழித்திரை நிபுணர் மூலம் குழந்தைகளின் கண்களை பரிசோதனை செய்யவேண்டும்.

குறைமாத குழந்தைகளுக்கு ‘ரெட்டினோபதி ஆப் ப்ரிமெச்சூரிட்டி’ என்ற (ஆர்.ஓ.பி) பாதிப்பு பெரும்பாலும் ஏற்படும்.

இந்த பாதிப்பு கொண்ட குழந்தைகளில் 100–ல் 50–க்கு கண் பார்வை மிக மோசமாக இருக்கும். 50 குழந்தைகளுக்கு பார்வை அரைகுறையாகவே இருக்கும். உலகத்திலே அதிகமான அளவு குறைமாத குழந்தைகள் இந்தியாவில் பிறப்பதால், உலகிலே ஆர்.ஓ.பி. பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதனால் குறைமாத குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள் அதன் கண்களில் அதிக கவனம் செலுத்தி, அவைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்குங்கள்.

மாறுகண், ஒன்றரை கண் என்று சொல்லப்படும் கண்பாதிப்பை சிலர் ‘அதிர்ஷ்டத்தின் அடையாளம்’ என்று சொல்கிறார்கள். அது தவறு. மாறுகண் இருந்தால் இரு கண்களையும் ஒரே திசையில் செலுத்தமுடியாது. சிலநேரங்களில் அவர்கள் வேறு எங்கோ பார்த்ததுபோல் இருக்கும். தொடக்கத்திலே கண்டறிந்தால் இதை ஆபரேஷன் மூலம் சரிசெய்திடலாம்.

வயதானவர்களுக்குத்தான் பொதுவாக கண்புரை நோய் ஏற்படும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே ஒரு கண்ணிலோ, இருகண்ணிலோ புரை ஏற்படுகிறது. தாய் கர்ப்பிணியாக இருக்கும்போது அம்மை போன்ற நோய்கள் ஏற்பட்டாலோ, சத்துக் குறைபாட்டாலோ, பாரம்பரிய பிரச்சினைகளாலோ பிறக்கும் குழந்தைக்கு புரை ஏற்படலாம். இதனை உடனடியாக கண்டறிந்தால் வலி இல்லாத, தையல் இல்லாத நவீன அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்திடலாம்.

பிறந்த குழந்தைகள் சிலவற்றுக்கு தொடர்ச்சியாக கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டேயிருக்கும்.

கண்களையும், மூக்கையும் இணைக்கும் பாதையில் தடை ஏற்பட்டால் இந்த பாதிப்பு தோன்றும். குழந்தை பிறந்த உடன் இந்த இணைப்பு பாதை திறந்து நீர், மூக்கிற்கும்– வாய்க்கும் செல்லும். சில குழந்தைகளுக்கு அந்த பாதை திறக்காமலே இருந்தால் கண்ணீர், கண்கள் வழியாக ஒழுகிக்கொண்டே இருக்கும்.

குழந்தைக்கு இத்தகைய பாதிப்பு இருந்தால் கண்களுக்கு கீழே, மூக்கின் அருகில் எதிர்திசையில் மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். பெரும்பாலும் சரியாகிவிடும். இல்லாவிட்டால் டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும்.

பெண்களுக்கு ஆரோக்கியம் மிக அவசியம். ஆரோக்கியமான பெண்களால்தான், கண்பாதிப்பற்ற குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். ரத்த சொந்தம் கொண்டவர்களை திருமணம் செய்தாலும், 16, 17 வயதிலே (பெண்கள்) திருமணம் செய்துகொண்டாலும் குறைமாத குழந்தைகள் பிறக்கும் சூழ்நிலை அதிகமாகிவிடும். அதுவே கண்பாதிப்புகளுக்கும் காரணமாகிவிடக்கூடும். பெண்கள் 21 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்ளவேண்டும். 28 வயதுக்குள் பிரசவித்துவிடவேண்டும். கர்ப்பகாலத்தில் சத்துணவுகளை சாப்பிடவேண்டும்.

பச்சைக் காய்கறிகள், கேரட் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்க்கவேண்டும். பாலில் குங்குமப்பூ கலந்து பருகவேண்டும். பழங்கள் மிக அவசியம். மாதுளை முக்கியம். பாதாம் பருப்பும் சாப்பிடவேண்டும்.

கர்ப்பிணி பெண்களே! உங்கள் குழந்தையின் உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது கண்கள். அதனால் பிரசவித்த உடன் அதன் கண்களை கவனியுங்கள். உங்கள் சந்தேகங்களையும் அதற்குரிய நிபுணர்கள் மூலம் நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்.