உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள உடற்பயிற்சி சிறந்த வழி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதற்காக பலரும் தினமும் ஜிம்மில் சேர்ந்து, உடற்பயிற்சிகளை செய்து வருவோம். சிலர் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவழிப்பார்கள்.
ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில், தினமும் வாக்கிங் சென்றால் முதுமையைத் தடுப்பதோடு, நம் வாழ்நாளை அதிகரிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. இதுக்குறித்து விரிவாக காண்போம் வாருங்கள்.
சார்லாந்து பல்கலைகழகம், ஜெர்மனி
ஜெர்மனியில் இருக்கும் சார்லாந்து பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், உடற்பயிற்சி முதுமையைத் தடுப்பதாகவும், தினமும் 25 நிமிட வாக்கிங் மேற்கொண்டால் வாழ்நாளில் 3-7 வருடங்கள் அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர்.
முதுமையைத் தடுக்கும் பயிற்சிகள்
அதே சமயம் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி, வலிமை பயிற்சி மற்றும் உயர் தீவிர இடைவெளி பயிற்சி (high intensity interval training) போன்றவை முதுமையைத் தள்ளிப் போடுவதாக கண்டறிந்துள்ளனர். அதிலும் முக்கியமாக தாங்குதிறன் பயிற்சி (Endurance training) மற்றும் உயர் தீவிர இடைவெளி பயிற்சி போன்றவை உடலில் சிறந்த ஆன்டி-ஏன்ஜிங் செயலைத் தூண்டுகிறதாம்.
உடற்பயிற்சி செய்யாதவர்களைக் கொண்ட ஆய்வு
இதுவரை உடற்பயிற்சி செய்யாத 30-60 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆறு மாதம் கழித்து அவர்களின் இரத்தத்தை பரிசோதனை செய்ததில், அவர்களின் டிஎன்ஏ-வானது தன்னைத் தானே புதுப்பித்து, முதுமையைத் தள்ளிப் போட்டிருப்பது தெரிய வந்தது.
70 வயதிலும் முடியும்
மேலும் விஞ்ஞானிகள் 70 வயதினரும் தினமும் 25 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.
சுறுசுறுப்பு தான் முக்கியம்
மேலும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை, எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவது தான் முக்கியம் என்றும் கூறுகின்றனர். எனவே நீங்கள் இதுவரை எந்த ஒரு உடற்பயிற்சியையும் செய்யாமல் இருந்தால், இன்று முதல் தினமும் 25 நிமிடம் வேகமான நடையை மேற்கொண்டு வர ஆரம்பியுங்கள். இதனால் கண்டிப்பாக உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படுவதைக் காணலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதய நோயாளிகள்
இதய நோயாளிகள் சுறுசுறுப்புடன் இருக்க ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். அதற்கு அவர்கள் ஓடுவதைத் தவிர்த்து, வேகமான நடைப்பயிற்சியை தினமும் 25 நிமிடம் மேற்கொண்டாலே போதும் என்றும் சொல்கின்றனர்.
Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தினமும் 25 நிமிடம் வாக்கிங் மேற்கொண்டால், 7 ஆண்டுகள் ஆயுள் அதிகரிக்குமாம்