Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகளுக்கு வாய் சுத்தம் அவசியம்! ஆய்வில் தகவல்

கர்ப்பிணிகளுக்கு வாய் சுத்தம் அவசியம்! ஆய்வில் தகவல்

18

கர்ப்பிணிப்பெண்களின் வாயில் பாக்டீரியா பாதிப்பினால் நோய்கள் ஏற்பட்டால் குறைபிரசவதில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான குழந்தை மட்டுமே உலகத்தோடு இணைந்து வாழமுடியும். பிறக்கும் குழந்தை சரியான எடை, வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியோடு இருந்தால் மட்டுமே எந்த வித நோய் தாக்கினாலும் ஆரோக்கியமாக வாழமுடியும். இல்லையெனில் உலகில் உள்ள நுண்ணியிரிகள் குழந்தைகளை எளிதில் தாக்கி அவற்றை உயிரிழக்கச் செய்துவிடும்.

குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு வளர்ச்சியும், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாகவே இருக்கும். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதோடு வாழ்நாள் முழுவதும் அந்தக்குழந்தை நோய்களை எதிர்த்து போராடவேண்டியிருக்கும். இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் நூறு பிரசவங்களில் 33 குழந்தைகள் குறைபிரசவங்களில் பிறப்பதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. ஆசியா கண்டத்தில் 100க்கு 15 குறைபிரசவக்குழந்தைகள் பிறக்கின்றனவாம்.

இதற்குக் காரணம் கடுமையான வாய்நோய்கள் உள்ள பெண்களில் இத்தகைய குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகள் 75 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக தாய்க்கு ஏற்பட்டுள்ள நோய்களைக் கண்டறிந்து பிரசவம் எவ்வாறு இருக்கும் எனத் தெரிவிக்கும் கருவிகள் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

வாய்நோய்களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தப்போவதில்லை என்று கருதப்பட்டு வந்த நிலையில் உடலின் மற்ற உறுப்புகளை பாதிக்கும் அமைதியான கொலையாளியாக வாய்நோய்கள் உருவாகிவருகின்றன என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதயநோய், புற்றுநோய்களைப் போன்று, இந்த வாய்நோய்களுக்கு சிகிச்சை பெற அதிக அளவு மருந்துகளோ, அதிகப் பணச் செலவோ தேவையில்லை என்றாலும் வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும், சிறு வயது முதற்கொண்டே நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதும்தான் வாய் நோய் ஏற்படாமல் தடுக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களின் மாற்றம் காரணமாக வாய்நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே கருத்தரிக்கும் முன் வாய் நோய்கள் பற்றிப் பரிசோதித்துக் கொள்வதுடன், கருவுற்ற காலம் முழுமையிலும் வாயை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். தினமும் இரு முறை பல் துலக்கவும்; உணவு உண்டபின் வாயை நன்கு கொப்பளிக்கவும். உங்களது பற்களை நீங்கள் சுத்தம் செய்யும்போது, உங்களது இரத்தக் குழாய்களை நீங்கள் சுத்தம் செய்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

உங்களது நாக்கை அடிக்கடி சுத்தம் செய்யவும்; பற்களில் சிக்கிக்கொள்ளும் உணவைத் தவிர்த்துவிட்டு, நார்ச் சத்துணவை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும். ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும் ஒரு நல்ல பல்மருத்துவரிடம் 6 மாதங்களுக்கு ஒரு முறை சென்று ஆலோசனை பெறுவது அவசியம். நொறுக்குத் தீனியைத் தவிர்க்கவும்; வெற்றிலைப்பாக்கு, போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.