Home குழந்தை நலம் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் தாய்ப்பால்!

குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் தாய்ப்பால்!

19

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால்தான் அருமருந்து. தாய்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேசமயம் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் அபாரமாக இருக்கும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தாய்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாவும் இருக்கின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

5 மற்றும் 7 வயதுடைய குழந்தைகளையும், 11 மற்றும் 14 வயதுடைய குழந்தைகளையும் ஆய்வாளர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொண்டனர்.

இதில் தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் வாசிக்கும் திறன், எழுதும் திறன் கொண்டவர்களாக இருந்தனர். கணக்கு, அறிவியல் பாடத்தில் அதிக திறன் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர்.

இங்கிலாந்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது அரிதாகிவருகிறது. 35 சதவிகித சிசுக்கள் ஒருவாரம் மட்டுமே தாய்ப்பால் குடிக்கின்றனராம். 21 சதவிகித குழந்தைகள் நான்கு வாரம் தாய்ப்பால் குடிக்கின்றனர். 7 சதவிகித குழந்தைகள் நான்கு மாதமும், 3 சதவிகிதம் குழந்தைகள் மட்டுமே 6 மாதம் வரை தாய்ப்பால் குடித்திருக்கின்றனராம். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், தாய்ப்பால் குடிக்காத குழந்தையின் மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பால் மூலம் குழந்தையின் உடல் வேண்டுமானால் நன்கு வளர்ச்சியடையலாம். ஆனால் மூளை வளர்ச்சிக்கு உரியது தாய்ப்பால்தான். எனவே அந்த அரிய தாய்ப்பாலை அன்னை தனது குழந்தைக்கு நிச்சயம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.