கணவர் செய்யும் சிறுசிறு தவறுகளைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத படித்த இந்தியப் பெண்கள் இந்தக் காலத்தில் கோர்ட் படியேறிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஓரளவே படித்த அல்லது படிப்பறிவே இல்லாத பெரும்பாலான இந்தியப் பெண்கள், தங்கள் கணவர் எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்தாலும் பெட்டிப் பாம்பாக அடங்கியே இருக்கின்றனர்.
இதுபோன்ற ஆண்கள் தங்கள் மனைவிகளைக் கடுப்படிக்கும் விதங்களான சம்பந்தமே இல்லாமல் கோபப்படுவது, கோபம் வரும்போது சாப்பாட்டுத் தட்டை விசிறியடிப்பது, எப்போதுமே அடிமையாக நடத்துவது என்று அவர்களுடைய மோசமான பழக்கங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
• இந்தியக் கணவன்மார்களின் மிக மோசமான பழக்கங்களில் இதுவும் ஒன்று. காலையில் குளித்து விட்டு டவலோடு வரும் ஆண்கள், அதை அப்படியே கட்டிலிலேயே போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். எத்தனை முறை இது குறித்து மனைவிமார்கள் சொன்னாலும் கேட்பதே இல்லை.
• விடுமுறை வந்து விட்டால் போதும், நம் இந்திய ஆண்கள் காலையில் நேரத்தோடு எழுந்திருப்பதே இல்லை. அவர்களுக்கு காபி, உணவு எல்லாம் கட்டிலுக்கே வந்தாக வேண்டும். குளிக்க கூட மாட்டார்கள். இந்தச் செய்கைகள் யாவும் எந்த மனைவியையும் கடுப்படிக்கத்தான் செய்யும்.
• வீட்டிலிருக்கும் போது, சில சமயம் கணவன்மார்கள் எப்ப பார்த்தாலும் டி.வி. பார்ப்பது, ஃபேஸ்புக்கில் மூழ்குவது, வாட்ஸ் ஆப்பில் சாட் பண்ணுவது அல்லது நியூஸ்பேப்பர் படிப்பது என்று அவற்றில்தான் மூழ்கிக் கிடப்பார்கள். மனைவி சாப்பிடக் கூப்பிட்டால், “இதோ வந்துட்டேன்மா” என்ற குரல் மட்டும்தான் வரும். ஆனால் அவர்கள் வருவதற்குள் உணவுகள் எல்லாம் ஆறி உலர்ந்து போய்விடும்.
• திருமணத்திற்கு முன் எப்போதுமே நீட்டாக ஷேவ் செய்யும் ஆண்கள், திருமணத்திற்குப் பின் ஆஃபீஸுக்குச் செல்லும் போது மட்டும் தான் ஷேவ் செய்வார்கள். வார இறுதியிலோ முழுக்க முழுக்க தாடியுடன் தான் திரிவார்கள். இப்படி தேவதாஸாக இருந்தால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்கும்?
• இரவு தூங்கும்போது நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்குவது பெரும்பாலான கணவன்மார்களின் வழக்கம். ஆனால் மறுநாள் காலை எழுந்ததும் தன்னால் சரியாகவே தூங்க முடியவில்லை என்றும், அதற்கு மனைவி தான் காரணம் என்றும் புகார் கூறிக் கொண்டிருப்பார்கள்.