சிலுக்கு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு இந்தியில் பெரும் வெற்றி பெற்ற டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் கன்னட ரீமேக்கில் வீணா மாலிக் நடிக்கவிருப்பது பழைய செய்தி. ஆனால் அதற்கு முன்பு கன்னட பிரபலங்கள் சிலரை அணுகினராம். ஆனால் அய்யய்யோ வேண்டாமே என்று அவர்கள் பயந்து ஓடி விட்டார்களாம்.
தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் தமிழிலும் ரீமேக்காகிறது. அனுஷ்கா, சில்க் அவதாரம் எடுக்கவுள்ளார். இந்த நிலையில் கன்னடத்திலும் இதே ரீமேக்காகுகிறார்கள். டர்ட்டி பிக்சர்ஸ்-சில்க் சக்காத் மகா என்று பெயரிடப்பட்டுள்ள அதில் பாகிஸ்தான் கவர்ச்சி குண்டு வீணா மாலிக் நடிக்கப் போகிறார்.
ஆனால் வீணாவை முயற்சிப்பதற்கு முன்பு கன்னடத்தில் பிரபலமாக உள்ள சிலரை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள் பின்வாங்கியதால்தான் வேறு வழியில்லாமல் கவர்ச்சி நிறைந்து வழியும் வீணாவைப் பிடித்துள்ளனர்.
முதலில் அணுகப்பட்டவர்களில் ஒருவர் நிகிதா துக்ரால். ஆனால் நிகிதா தயங்கவே, அடுத்து பூஜா காந்தியை பிடித்துள்ளனர். ஆனால் அவரும் நிராகரித்து விட்டாராம். இதுகுறித்து பூஜாவிடம் கேட்டபோது, என்னை அணுகியது உண்மைதான். ஆனால் அதை நான் பரிசீலிக்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரை, இந்தியில் அந்தப் படத்தை அருமையாக உருவாக்கியிருந்தனர். அதை ரீமேக் செய்வது என்பது பொருத்தமாக இருக்காது என்பது எனது எண்ணம். இதனால்தான் அதை நான் ஏற்கவில்லை. இத்தோடு விட்டுவிடலாமே இதை… என்கிறார்.
ஏன் சில்க் வேடம் வேண்டாம் என்றீர்கள் என்று நிகிதாவிடம் கேட்டால், சில்க் கதை என்றுதான் சொல்கிறார்கள். படத்தின் பெயரும் அப்படித்தான் உள்ளது. ஆனால் ஒரு விபச்சாரியின் கதையைத்தான் படமாக்கப் போகிறார்கள். கதை அப்படித்தான் செல்கிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை.
மேலும் இது சில்க் ஸ்மிதாவுக்கும் மரியாதை செய்வதாக இருக்காது. இந்தப் படத்தை நான் செய்தால் அது கன்னட ரசிகர்களை ஏமாற்றுவற்குச் சமம். இந்தப் படத்தில் நான் இல்லை என்பதே மகிழ்ச்சியாக உள்ளது என்று புது குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் இந்தப் புகாரை படத்தின் இயக்குநரான திரிஷூல் மறுத்துள்ளார்.
இதுவே ஒரு பெரிய கதையாக இருக்கும் போலிருக்கே…!