இந்தப் பிள்ளையாலை தூக்கமில்லை எனக்கு. கண் சோருது’ என்றாள் தாய்.
‘அடி போட்டுத்தான் இதைத் தூங்க வைக்க வேணும் போலிருக்கிறது’ எனச் சினந்தார் தகப்பனார்
அடிபோட்டு தூங்க வைப்பது முடியிற காரியமா?
தூக்கமின்மை அல்லது தூக்கக் குழப்பம் என்பது வயதானவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, எந்த வயதினரையும் தாக்கலாம். இரா இராவாக அழுது அடம் பிடித்துவிட்டு பகல் முழவதும் தூங்கும் குஞ்சுப் பாலகர்களைக் காண்பது அதிசயமல்ல
சில பள்ளிக் குழந்தைகளும் அவ்வாறு இரவில் தூங்காமல் பிரச்சனை கொடுப்பதுண்டு.
காரணங்கள் என்ன?
உங்களது குழந்தை இருளுக்குப் பயப்படுகிறதாக இருக்கலாம். ஏசாமல் பேசாமல் இதமாக கண்டறிய முயலுங்கள். இரவு லைட் ஒன்றை ஒளிரவிடுவது பிரச்சனையைத் தீர்க்கும்.
பயங்கரக் கனவுகள் காரணமாகலாம். நல்லாகத் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென அலறி விழித்து எழுந்தால் அதுதான் காரணம் எனக் கொள்ளலாம். விழித்த பின் பெரும்பாலான கனவுகள் மறந்து போகின்ற காரணத்தால் குழந்தையால் விளக்க முடியாதிருக்கும். படுக்கப் போகும் முன்னர் பயங்கரமான கதைகள், திடுக்கிட வைக்கும் ரீவீ நிகழ்ச்சிகளை படிப்பதை, பார்ப்பதை, கேட்பதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளை படுக்கப் போகும் முன்னர் அரவணைத்து குட் நைட் சொல்லி நல்ல சிந்தனைகளுடன் மகிழ்ச்சியாகப் படுக்க விடுங்கள்.
பல பிள்ளைகளுக்கு பாடசாலைப் படிப்பு, ரியூசன், மியூசிக் கிளாஸ், டான்ஸ், விளையாட்டு பேச்சுப் போட்டிகள் என வேலை அதிகம். களைத்துவிடுவார்கள். அதற்கு மேலாக அடுத்த நாள் முகம் கொடுக்க வேண்டிய விடயங்கள் பற்றிய மனப்பதற்றமும் காரணமாகலாம்.
வாழ்க்கை முறையில் ஏற்படுகிற தாக்கங்கள் குழந்தைகள் மனத்தில் ஆழமான பதற்றத்தை விதைத்துவிடலாம். நெருங்கிய உறவினரின் இறப்பு, தகப்பன் அல்லது தாயைப் பிரிந்திருக்க நேருதல், வீடு மாறுதல், புதிய பாடசாலைக்கு செல்ல நேருதல், நோய் வாய்ப்படுதல் போன்ற பலவாகலாம். காரணத்தைக் கண்டறிந்து அமைதிப்படுத்துங்கள்.
உடல் ரீதியான அசௌகரியங்களும் காரணமாகலாம். கடுமையான வெக்கையும் வியர்வையும், கடும் குளிர், பசியோடு தூங்கச் சென்றமை, படுக்கையை இரண்டு மூன்றுபோர் பகிர்வதால் ஏற்படும் இட நெருக்கடி போல எதுவாகவும் இருக்கலாம்.
பெற்றோர்களே குழந்தைகள் தூங்கவில்லை எனில் சினப்படாதீர்கள்.
நிதானமாகக் காரணத்தைக் கண்டறிய முயலுங்கள்
அதை நிவர்த்தியுங்கள்
அமைதியான தூக்கம் குழந்தையை மட்டுமின்றி உங்களையும் அரவணைக்கும்.