Home ஆரோக்கியம் மார்பகப் புற்றுநோய் வருமா? எளிதில் கண்டறியலாம்

மார்பகப் புற்றுநோய் வருமா? எளிதில் கண்டறியலாம்

26

பெண்களை அச்சுறுத்தும் நோயாக உருவாகி வரும் மார்பகப்புற்றுநோயை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எளிய இரத்த பரிசோதனை மூலம் கண்டறியமுடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பெண்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை தற்காத்துக்கொள்ளலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 46000 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான பெண்கள் உயிரிழக்கவும் நேரிடுகிறது. பெண்களை அச்சுறுத்தும் இந்த நோய்க்கு தீர்வு ஏற்படும் வகையில் லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் பிளானகன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் 1,380 பெண்களின் இரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர். இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நாளடைவில் இவர்களில் 640 பேருக்கு மார்பக புற்றுநோய் உருவானது. இந்த 640 பேரின் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களில் இருக்கும் ஏடிஎம் எனப்படும் குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படும் மாறுதல் இந்த பெண்களின் மார்பக புற்றுநோயை தூண்டியதாக இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதன் அடுத்த கட்டமாக, இந்த குறிப்பிட்ட மரபணு ஏன் மாற்றமடைகிறது என்பதை இவர்கள் ஆராய்ந்தபோது, இந்த மரபணுவின் மேற்புறத்தில் இருக்கும் மிதைலேடன் எனப்படும் குறிப்பிட்ட ரசாயனப்பொருளில் ஏற்படும் மாற்றமே, மரபணுவின் மாற்றத்தை தூண்டுவதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.ஆன்டி ஆஸ்ட்ரோஜன் மருந்துகளை சரியான அளவில் செலுத்துவதன் மூலம் இந்த புற்றுநோயை குணப்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரத்த பரிசோதனைகள் மூலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்கூடும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கமுடிவதால் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து மார்பகப் புற்றுநோய் வராமலேயே தடை செய்து விடலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.