புகைப்பிடிப்பவர்களுடன் இருப்பவர்கள் சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகையை முகர்வதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இதில் அதிர்ச்சி தரும் வகையில் புகைப்பழக்கம் உடையவர்கள் அவர்களை சுற்றி உள்ள பிறருக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.
சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களால் சுவாசிக்கப்படும்போது அவர்களது உடலில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை மாற்றம் பெறுகிறது.
இதனால் உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டில் இருந்து வெளியாகும் புகையில் சுமார் 4000 இரசாயனங்கள் உள்ளன. அவற்றில் சில புற்று நோய் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானது. இந்த புகை மனிதனின் செல்களில் உள்ள அடிப்படை அமைப்பை மாற்றியமைத்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட உட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பெஞ்சமின் பிக்மான் மற்றும் பால் ரெனால்ட்ஸ் ஆகியோர் எலிகளை கொண்டு இதனை நிரூபித்துள்ளனர்.
மனிதனின் செல்லில் செரமைட் எனும் கொழுப்பை தூண்டுவதன் மூலம் எடையை அதிகரிக்கக்கூடிய சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.