வாழ்க்கையில சுவாரஸ்யமே இல்லையே என்று நினைப்பவரா? உற்சாகமின்றி கவலையோடு காணப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள் உங்களுக்காகவே ஒரு சுவாரஸ்யமான வைத்தியத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். இது வசூல்ராஜா படத்தில் கமல் சொன்னதுதான். உங்களுக்கு புரிந்து விட்டதா? அதேதான். உங்களுடைய வாழ்க்கைத் துணையை தினசரி நான்கு முறையாவது கட்டிப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
நோ டென்சன் ரிலாக்ஸ்
கட்டிப்பிடிப்பதோடு மட்டுமல்லாது முத்தமழையும் பொழியவேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்’ இருக்குமாம். கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்று ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் தம்பதியரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தினசரி நான்கு முறை
கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். வீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்’ அடித்து விடுமாம். அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம்.
பொழுது போக்கு அம்சங்கள்
கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்’ அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் `கிக்` இருக்குமாம். ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம். மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம்.
ரொமான்ஸ் டச்
கடற்கரை ஓரங்களில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம். இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண்டுமாம்.
அப்போது ஹேட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை நன்றாக ரசித்து வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.
கிப்ட் வாங்கி கொடுங்கள்
மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம். இவ்வாறு சின்ன சின்ன சந்தோசங்களோடு வாழ்க்கையை வாழ்ந்தால் வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இல்லற வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வாளர்கள்.
ஆய்வு நடந்த இடம் அமெரிக்கா என்றாலும் நம் ஊருக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா என்று கேட்பது காதில் விழுகிறது. தனியாக ஊர் சுற்றுவது, அடிக்கடி கிப்ட் வாங்கிக் கொடுப்பது என இல்லையென்றாலும் கட்டிப்பிடி வைத்தியத்தை கடைபிடிக்கலாம் தானே? அந்த வைத்தியம் எல்லா நாட்டு மக்களுக்கும் ஒர்க் அவுட் ஆகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
‘வசூல் ராஜா’வே சக்ஸஸ்புல்லாக அமல்படுத்திய வைத்தியமாச்சே கட்டிப்புடி, நம்பிக்கையோட கட்டிப்புடிங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும்… !