கர்ப்பம் என்பது மிகுந்த மகிழ்ச்சியான அனுபவம் என்பது உண்மைதான். ஆனால் அந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய கடினமான விஷயங்களைப் பற்றி பலரும் பேசுவதில்லை. கர்ப்பமாக இருக்கும்போது அந்த ஒன்பது மாதங்களும் ஒரு பெண் எவ்வளவு சிரமங்களைத் தாங்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இந்தக் காலகட்டத்தில் குமட்டல், கர்ப்பத்தின்போது ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள், தசைப்பிடிப்பு வலிகள், கால் வலி, உடல் வீக்கம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பது, களைப்பு என பல பிரச்சனைகளை ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இந்தப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும்! அதுமட்டுமின்றி, சில குறிப்பிட்ட உணவுகளை கர்ப்பத்தின்போது உட்கொள்வதும் நல்லதல்ல.
இந்த உணவுகளைத் தவிர்த்தால் மிகவும் நல்லது. அவற்றைத் தவிர்த்தால் தேவையற்ற தொந்தரவுகள், பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
இரைப்பை அழற்சி ஏற்படுத்தும் உணவுகள் :
சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் C நிறைந்தவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது வரக்கூடிய நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு அவையே காரணமாகலாம்.
எண்ணெயில் மூழ்கப் பொறித்த (டீப் ஃப்ரை) உணவுகள், காரமான உணவுகள்: எண்ணெய் அதிகமுள்ள உணவுகள் குமட்டலை அதிகரிக்கலாம். சாதாரணமாகவே கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படும். கொழுப்பு நிறைந்த, எண்ணெயில் மூழ்கப் பொறித்த உணவுகளும், அதிக மசாலா சேர்த்த மற்றும் அதிகம் ஊறவைத்த உணவுகளும் செரிப்பது கடினமாகும். இந்தத் தேவையற்ற உணவுகளால் செரிமான மண்டலத்திற்கு அதிக சிரமம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
தக்காளியும் சிவப்பு மிளகும்: தக்காளி, சிவப்பு மிளகு இரண்டுமே நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி ஏற்படக் காரணமாகும். அசிடிட்டி பிரச்சனை வராமல் தடுக்க, இவற்றை சமையலில் சேர்க்காமல் தவிர்க்கவும்.
வைட்டமின் A: உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறிய அளவு வைட்டமின் A போதுமானது. வைட்டமின் A அதிகமுள்ள உணவுகள் எதுவும் கருவிலுள்ள குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கலாம். ஈரல் மற்றும் ஈரலால் செய்த பண்டங்களைத் தவிர்க்கவும்.
மீன் மற்றும் கடல் உணவுகள்: கர்ப்பமாக இருப்பவர்களுக்கு என்று வரும்போது, எல்லா மீன்களும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுவதில்லை. பெரிய மீன்களும் கடல் உணவுகளும் அதிக அளவிலான பாதரசத்தால் மாசுபட்டிருக்கின்றன. இந்தக் கடல் உணவுகளில் இருந்து பிற வேதிப்பொருள்களும் உங்கள் உடலை வந்து சேர வாய்ப்புள்ளது. சமைக்காத மீன் எதையும் சாப்பிடக்கூடாது. இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
பாச்டுரைஸ் செய்யாத சீஸ் மற்றும் பால்: பாச்டுரைஸ் செய்யாத சீஸ் மற்றும் பாலில் அதிகளவில் பாக்டீரியா இருக்கலாம். இவை எளிதில் உங்கள் உடலுக்குள் நுழைந்து உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். கொழுப்பு போன்றவற்றை கடைந்து நீக்காத பாலுக்கு பதில் கடைந்த பாலைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் எடை கூடுவதைத் தவிர்க்கலாம்.
காஃபின், ஸ்போர்ட்ஸ் பானங்கள், காற்பனேற்றப்பட்ட பானங்கள்: தேநீர், காபி, கோலா, சோடா மற்றும் ஆற்றல் பானங்கள் போன்றவற்றில் காஃபின் உள்ளது. உடல் கால்சியத்தையும் இரும்புச்சத்தையும் உட்கிரகிக்கும் திறனை காஃபின் பாதிக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு இந்த ஊட்டச்சத்துக்கள் மிக முக்கியமானவை. காஃபின் அதிகமாக எடுத்துக்கொள்வது கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும். காபி அருந்துவதால் குமட்டலும் அதிகரிக்கக்கூடும்.
இந்த உணவுகளைத் தவிர்த்து, கர்ப்பத்தின்போது நீங்கள் அனுபவிக்கும் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான கர்ப்பகாலம் பெற்று அருமையான குழந்தை பெற்று மகிழ்ச்சியோடு வாழுங்கள்!