Home சூடான செய்திகள் குறை சொன்னால் தாம்பத்தியம் சுவைக்காது

குறை சொன்னால் தாம்பத்தியம் சுவைக்காது

53

உமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது இல்லை. சமைப்பதில் ருசி பத்தவில்லை. இப்படி உப்புக்கு சப்பு இல்லாத விஷயங்களில் மனைவி கலா மீது குறை சொல்லி கொண்டிருப்பான். இவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகன் உண்டு. அவன் பள்ளித் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்தால் கூட கலாவை திட்டுவதுதான் உமாநாத்தின் வழக்கமானது.

இதைத் தொடர்ந்து, படுக்கையறையில் உமாநாத் தொட்டால் கலாவுக்கு எந்தவிதமான செக்ஸ் உணர்ச்சியும் வருவது இல்லை. உமாநாத்தும் அவளுக்கு மூடு வரவழைக்க பலவிதமாக முயற்சி செய்து பார்ப்பான். படுக்கையில் எந்த உணர்ச்சியும் இன்றி கட்டை போல கிடப்பாள். பாலியல் மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைக்கு கலாவை அழைத்து போனான். இருவரிடமும் தனித்தனியே பேசிப் பார்த்தார் மருத்துவர்.

கலாவிடம் விசாரித்த போது தனது கணவன் மீது அவளுக்கு பெரிய கோபம் எதுவும் இல்லை. அந்த ஆசையுடன் உமாநாத் நெருங்கும் போது எல்லாம் இவளுக்கு அவன் தன் மீது சொன்ன குறைகள் மட்டும் நினைவுக்கு வருவதால் செக்ஸ் ஆர்வம் இல்லாமல் போய்விட்டதாகச் சொன்னாள். கலாவின் மனநலம் உமாநாத்தின் குறை கூறும் வார்த்தைகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உமாநாத்துக்கு அறிவுரை சொன்னார் மருத்துவர். மனைவியின் மீது குறை கண்டுபிடிப்பதை நிறுத்திவிட்டு
அன்பாகப் பேசும்படி அறிவுறுத்தினார்.

தம்பதிகள் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசிக் கொள்வது கூட மனநிலையை பாதித்து செக்ஸ் ஆர்வத்தை குறைக்குமா என்றால் கண்டிப்பாக குறைக்கும். எப்படி? எவர் மீதும் எப்போதும் குறை சொல்பவர்கள், மட்டம் தட்டி பேசுபவர்கள் யார் என்று பாருங்கள்? தன்னம்பிக்கை இல்லாதவர்கள், சுய முனைப்பு இல்லாதவர்கள் மட்டும்தான் அடுத்தவரை குறை பேசுவார்கள். இப்படி தம்பதிகள் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தால் மனரீதியான பாதிப்பு ஏற்பட்டு அடுத்து அவர்களது அந்தரங்கமான செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கும்.

மனைவியை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அவருக்கு தன்னை விட அறிவு இருக்கக் கூடாது என்று பிற்போக்கு எண்ணம் உடையவர்களும் இதே வேலையை செய்கிறார்கள். இப்படி செய்வதால் தம்பதிகள் இருவருக்குமே நஷ்டமே விளையும். மனைவி, கணவரை இப்படி மட்டம் தட்டிப் பேசினால் கணவனுக்கு ஏற்படும் மனரீதியிலான பாதிப்பால் உடலுறவின் போது ஆண்குறியின் விறைப்புத்தன்மையில் பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் இவ்வாறான மன பாதிப்பில் செக்ஸில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பில் சரியான அளவில் திரவம் சுரக்காது.

இதனால் உறவு கொள்ளும் போது வலி அதிகமாக இருக்கும். செக்ஸ் என்பது இருவருக்கும் மனமகிழ்ச்சியை தரும் விஷயமாக இருக்க வேண்டும். மனரீதியிலும், உடல்ரீதியாகவும் வலி தரும் அனுபவமாக ஆகிவிடக் கூடாது. பெண்களுக்கு சம உரிமை தருவது அதிகமாகி வருகிற இத்தகைய காலகட்டத்தில் பெண்களை மட்டம் தட்டி அடக்கிவிடலாம் என நினைப்பது ஒரு வகையில் முட்டாள்தனம். கணவன், மனைவி யாராக இருந்தாலும் குறை கூறி தனது இணையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்ற எண்ணத்தை அடியோடு விட்டுவிட வேண்டும்.

தம்பதிகள் அவர்களுக்குள் இருக்கும் குறையை பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும். ‘இந்த விஷயத்தை சரி செய்து கொள்ளலாமே’ என அன்பாகக் கூற வேண்டும். கணவர் நல்லபடியாக அன்பாக நடந்து கொண்டால் மனைவியும் அப்படியே நடப்பார். இதுதான் இயற்கை. குறைகள் இல்லாத நிறைவான மனிதர்கள் யாரும் உண்டா? இல்வாழ்க்கை என்பது பூத்துக் குலுங்கும் சோலைவனமாக மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் குறைகள் பேசி ஒரு போதும் அதை பாலைவனமாக மாற்றிவிடக் கூடாது.