Home ஆரோக்கியம் 40 வயதுக்குப் பிறகு ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்

40 வயதுக்குப் பிறகு ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்

40

நீங்கள் நாற்பது வயதடைந்தவர் அல்லது அதற்கும் அதிக வயதானவர் என்றால், தொடர்ந்து நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள சில குறிப்புகளை இந்தக் கட்டுரை வழங்குகிறது. வயதாகும்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றியும் அதற்கேற்ப எப்படி நம் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்துகொள்வது என்பது பற்றியும் இப்போது காணலாம்.

எடை குறைப்பது கடினமாகிவிடும் (Weight loss becomes difficult)
தினமும் உடற்பயிற்சி செய்துகொண்டே இருப்பீர்கள், ஆனால் எடையைக் குறைப்பது கடினமாக இருக்கும். வயது அதிகமான பிறகு, உடலின் தசை நிறை இழக்கப்படுவதன் காரணமாக, உடலின் வளர்சிதைமாற்றத்தின் வேகம் குறைந்துவிடுவதே இதற்குக் காரணம். முப்பது வயதிற்குப் பிறகு, ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் 3%-5% தசை நிறையை இழக்கிறோம் என்று கூறப்படுகிறது. இது உடலின் கலோரிகளை எரிக்கும் திறனைப் பாதிக்கிறது.

இதற்கு என்ன செய்வது? (What You Can Do)
நடை பயிற்சி, படியேறுதல், டென்னிஸ் போன்ற உடல்எடையைத் தாங்கும் பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் பலனளிக்கும். புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், சிறிதளவு மாவுச்சத்து, போதுமான அளவு நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ள சரிவிகித உணவுப் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது சிறிய அளவில் சாப்பிடுவது நல்ல யோசனை.
பார்வையில் மாற்றங்கள் (Vision Changes)
முப்பதுகளின் பிற்பகுதி முதல் நாற்பதுகளின் நடுப்பகுதி வரை, பலருக்கு பார்வையில் மாற்றங்கள் ஏற்படலாம், குறிப்பாக வாசிக்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். கண்ணின் குவிக்கும் திறனில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாகும். இது ப்ரெஸ்பியோப்பியா எனப்படுகிறது. இது வயது அதிகமாக அதிகமாக மேலும் அதிகரிக்கும்.

இதற்கு என்ன செய்வது? (What You Can Do)
கண்ணாடி அணிய வேண்டிய தேவை உள்ளதா என்றறிய, கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்துகொள்ளவும். ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள், பவர் மாறியுள்ளதா என்று பார்க்கவும் அல்லது இரு மடிப்பு அல்லது பல மடிப்பு கொண்ட லென்சுக்கு மாறவும்.
அதிக காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டும், இவற்றில் ஆன்டிஆக்ஸிடண்டுகளும் வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளதால் இவை கண் பார்வை இழப்பைத் தாமதமாக்கும். இதனால் பார்வையையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக்கொள்ளலாம்.
பல்வேறு அளவீடுகளில் மாற்றம் (Changing numbers)
வயது அதிகரிக்கும்போது, இரத்த அழுத்தம், கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இதயத் துடிப்பு வீதம் போன்ற உடலின் பல்வேறு அளவீடுகள் படிப்படியாக மாறக்கூடும்.

இதற்கு என்ன செய்வது? (What You Can Do)
முதலில், அடிக்கடி பரிசோதனைகள் செய்து இவற்றின் அளவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் இவற்றை தொடர்ந்து கண்காணிக்கலாம். இரண்டாவது, போதிய உடலுழைப்புள்ள வாழ்க்கை முறைக்கு மாறுதல், போதுமான அளவு நன்கு தூங்குதல், தீய பழக்கங்களை விடுதல், ஆரோக்கியமான உணவுப்பழக்கத்திற்கு மாறுதல், போன்ற மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும்.
44 முதல் 84 வயது வரையிலான சுமார் 6,000 பேர் பங்கேற்று நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு பிரிவினர் புகைப்பழக்கத்தை நிறுத்தினர், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தனர், அதுபோன்ற ஆரோக்கியமான மாற்றங்கள் இன்னும் சிலவற்றை மேற்கொண்டனர். இந்தப் பிரிவினர் ஆரோக்கியமான உடல் எடை கொண்டிருந்ததும், அவர்கள் மரணமடையும் அபாயம் 80% வரை குறைந்ததும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

எலும்புகள் பலவீனமடைதல் (Weaker Bones)
25-30 வயது வரை, எலும்புகளின் அடர்த்தி இயல்பாக அதிகரித்துக்கொண்டே வரும். ஆனால் அதற்குப் பிறகு எலும்புகளின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்துகொண்டே வரும். இதனால் எலும்பின் நிறையும் குறையும். பெண்களின் எலும்புகள் சிறியவையாக இருப்பதால் அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இதற்கு என்ன செய்வது? (What You Can Do)
வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், எலும்பு நிறை இழப்பைக் குறைப்பதற்கு, வைட்டமின் D மற்றும் கால்சியம் போதுமான அளவு கிடைக்கும் வகையில் உணவுத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். தொடர்ந்து, லேசானது முதல் மிதமானது வரையிலான உடற்பயிற்சிகளைச் செய்யலாம், அது தசை நிறையை அதிகரிக்க உதவும். இதனால் சுற்றியுள்ள எலும்புகளும் உறுதிப்படும், எதிர்பாராமல் கீழே விழுவதும் தடுக்கப்படும்.
ஆகவே, நீங்கள் நாற்பதை நெருங்கும் நபர் எனில் அல்லது நாற்பதை சமீபத்தில் கடந்தவர் எனில், இங்கே குறிப்பிட்ட அறிவுரைகளை மனதில் கொண்டு வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்தால், தொடர்ந்து ஆரோக்கியமாக நெடுநாள் வாழலாம்!