Home ஆரோக்கியம் வாய் துர்நாற்றத்தைப் போக்கும் வழிகள்

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் வழிகள்

59

வாய் துர்நாற்றம் என்பது என்ன? (What is bad breath?)
வாய்க்குழியிலிருந்து கெட்ட அல்லது அருவருக்கத்தக்க வாடை (நாற்றம்) வீசுவதே வாய் துர்நாற்றம் எனப்படும்.
மருத்துவத் துறையில் இதனை சுவாசத் துர்நாற்றம் (ஹைலிடோசிஸ்) என்று கூறுவர். மேலும் மருத்துவத் துறையில் இது, ஃபீட்டர் ஒரிஸ் ஓரல் மால்ஆடர், ஃபீட்டர் எக்ஸ் ஒர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
தோரயமாக 50% மக்கள் தங்களுக்கு வாய் துர்நாற்றம் இருப்பதாகக் கருதுகிறார்கள். சிலர் வாய் துர்நாற்றம் இல்லாமலே, தனக்கு வாய் துர்நாற்றம் இருப்பதாக நினைத்து மிகவும் கவலைப்படுவதுண்டு. வாய் துர்நாற்றம் இருந்தும் அதைப் பற்றித் தெரியாமலும் சிலர் இருப்பதுண்டு. நமக்கு வாய் துர்நாற்றம் இருக்கிறதா என்பதை நாமே சரியாகக் கண்டறிந்துகொள்வது கடினம் என்பதால், உங்கள் நெருங்கிய நண்பரிடமோ உறவினரிடமோ கேட்டு அறிந்துகொள்வது நல்லது.

வாய் துர்நாற்றம் ஏற்படக் காரணங்கள் என்னென்ன? (What are the causes of bad breath?)
90% பேருக்கு, வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் வாய்க்குள்ளேயே இருக்கின்றன. மீதமுள்ளவர்களுக்கு உள்ளுறுப்புகளில் இருக்கின்றன.
வாயில் உணவுத் துணுக்குகள் சிக்கித் தங்கிவிடுவதும், பற்களின் மேலும் நாக்கின் மேலும் பாக்டீரியா படலம் உருவாவதுமே வாய் துர்நாற்றத்திற்கு பெரும்பாலும் காரணங்களாக உள்ளன. இந்த பாக்டீரியாக்கள் உணவுத் துணுக்குகளைச் சிதைக்கும்போது சில அருவருக்கத்தக்க மணம் கொண்ட வாயுக்கள் வெளிவருகின்றன, குறிப்பாக எளிதில் ஆவியாகக்கூடிய சல்பர் சேர்மங்கள் இது போன்ற துர் மணம் கொண்டுள்ளவை.
துர்நாற்றம் ஏற்படுவதற்கான சில காரணங்கள்:
பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பது: தினமும் பற்களை நன்கு துலக்காவிட்டால், அவ்வப்போது பல் இடுக்குகளை சுத்தம் செய்யாவிட்டால் (ஃப்ளாசிங்), அல்லது சாப்பிட்ட பிறகு வாயை சுத்தம் செய்யாவிட்டால், உணவுத் துணுக்குகள் வாயிலேயே தங்கிவிடும். இப்படியே தொடர்ந்து பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருந்தால், பற்களின் மேல் ஒட்டும் தன்மை உள்ள பாக்டீரியா படலம் (ப்ளேக்) உருவாகி ஈறுகளில் எரிச்சலை ஏற்படுத்தலாம் (ஜிஞ்சிவைட்டஸ்), மேலும் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் ப்ளேக் உருவாகலாம் (பெரியடான்டைட்டிஸ்). நாக்கின் மேலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து துர்நாற்றம் ஏற்படக்கூடும். செயற்கைப் பற்களைப் (டென்ச்சர்ஸ்) பொருத்தியிருப்பவர்கள் பற்களை அவ்வப்போது சுத்தம் செய்யாவிட்டால், அவற்றின் மீது பாக்டீரியா வளர்ந்து சுவாசத்தில் துர்நாற்றம் ஏற்படலாம்.
உணவு: குறிப்பாக சில வகை உணவுப் பொருள்கள் பற்களுக்கு இடையே தங்கிவிடக்கூடியவையாக உள்ளன, அவை வாய் துர்நாற்றத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. வெங்காயம், பூண்டு மற்றும் சில காய்கறிகளும் சில மசாலா வகைகளும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் (சிகரெட் அல்லது பீடி வாடை) ஏற்படலாம். புகையிலைப் பொருள்களை வாயில் போட்டு மெல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கும் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது, வாய் துர்நாற்றத்திற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாகும்.
வாயில் நோய்த்தொற்று (இன்ஃபெக்ஷன்) ஏற்படுதல்: பற்சிதைவு, ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள், வாய்ப்புண், பல் பிடுங்குதல் அல்லது வாயில் அறுவை சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட காயங்கள் ஆகியவற்றாலும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.

வாய் வறட்சி: வாய் வறட்சியும் வாய் துர்நாற்றத்தின் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். வாயில் சுரக்கும் உமிழ் நீர் (சலைவா) வாயை சுத்தம் செய்து, துர்நாற்றத்தை ஏற்படுத்தும் துணுக்குகளை சுத்தம் செய்கிறது. ஜெரோஸ்டோமியா (வாய் வறட்சி) எனும் பிரச்சனை உள்ளவர்களுக்கு உமிழ் நீர் சுரப்பது குறைந்து, அதனால் சுவாசத் துர்நாற்றம் ஏற்படுவதுண்டு. மூக்கடைப்பு இருப்பவர்கள் வாயின் வழியாக சுவாசிப்பதால் வாய் வறண்டு போவதாலும் சுவாசத் துர்நாற்றம் ஏற்படலாம். தூங்கும்போதும் வாய் வறட்சி ஏற்படும். வாயைத் திறந்தபடி தூங்கும் பழக்கமுள்ளவர்களுக்கு இது அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன், சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் வாய் வறட்சி ஏற்பட்டு அதன் விளைவாக வாய் துர்நாற்றம் ஏற்படக்கூடும்.
தொண்டை மற்றும் மூக்கில் ஏற்படும் பிரச்சனைகள்: உள்நாக்கில் நோய்த்தொற்று (டான்சில்ஸ் இன்ஃபெக்ஷன்) பிரச்சனைகள் உள்ள சிலருக்கு உள்நாக்கில் பாக்டீரியப் படலம் அல்லது பாக்டீரியா படர்ந்த சிறு கற்கள் இருக்கலாம், இதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். மூக்கு, சைனஸ் அல்லது தொண்டையில் நீண்டகாலமாக இருந்துவரும் நோய்த்தொற்றுகளாலும் சுவாசத் துர்நாற்றம் ஏற்படும்.
மற்ற காரணங்கள்: மேலும் சில நோய்களும் வளர் சிதை மாற்றத்திலான கோளாறுகளும் குறிப்பிட்ட சில வேதிப்பொருள்களை உருவாக்கலாம், அவற்றால் ஒரு வகையான நாற்றம் ஏற்படலாம். உணவானது வயிற்றிலிருந்து உணவுக்குழலில் மேலேறி எத்தனிக்கும் பிரச்சனையை நெஞ்செரிச்சல் நோய் (கேஸ்ட்ரோ-இசோஃபஜீயல் ரிஃப்ளக்ஸ்) என்கிறோம். இந்தப் பிரச்சனை நீண்டகாலமாக இருப்பவர்களுக்கு இவ்வாறு எத்தனிக்கும் உணவு சிதைவதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.
வாய் துர்நாற்றம் எப்படி வகைபடுத்தப்படுகிறது? (How are the causes of bad breath classified?)
i) உண்மையான வாய் துர்நாற்றம்
உடலியல் காரணங்கள்: இதில் உடலில் பிரச்சனை எதுவும் இல்லை, ஆனால் முக்கியமாக உணவு சிதைவதாலேயே துர்நாற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில் நாக்கின் பின்புறம் இருந்து துர்நாற்றம் வருகிறது.
நோயியல் (பெத்தாலாஜிக்) காரணங்கள்
வாய் சம்பந்தப்பட்ட காரணங்கள்: வாயின் குறிப்பிட்ட நிலைகள் அல்லது கோளாறுகள் மற்றும் வாய் வறட்சி அல்லது பெரியடான்டைட்டிஸ் போன்ற பிரச்சனைகளின் காரணமாக நாக்கின் மேல் உருவாகும் படலங்களால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.
வாய்க்கு வெளியே உள்ள காரணங்கள்: சில சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கான காரணம் மூக்கு, தொண்டை (குரல்வளை) அல்லது சுவாசக்குழாயிலும் இருக்கலாம். சில சமயம் சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் கோளாறுகளால் கல்லீரலில் இருந்து வெளிவரும் வேதிப்பொருள்களாலும் துர்நாற்றம் ஏற்படலாம்.
ii) போலி வாய் துர்நாற்றம்: சிலர் வாய் துர்நாற்றம் இல்லாமலே, தங்களுக்கு வாய் துர்நாற்றம் இருப்பதாக பிடிவாதமாக நம்புவார்கள், ஆனால் மற்றவர்களுக்கு அப்படி இருப்பதாகத் தெரியாது.
iii) ஹெலிட்டோஃபோபியா : சிலர் வாய் துர்நாற்றம் அல்லது போலி வாய் துர்நாற்றத்திற்கான சிகிச்சை பெற்ற பின்பும் தங்களுக்கு வாய் நாற்றம் இருப்பதாக நினைத்துக்கொண்டு பயப்படுவர். ஆனால் உண்மையில் வாய் நாற்றதிற்கான எந்த ஆதாரமும் இருக்காது.
வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடுவது எப்படி? (How to get rid of bad breath?)
வாய் துர்நாற்றம் உள்ளது என்று தெரிந்ததும், அதற்கான காரணத்தினைக் கண்டு கொள்வது மிகவும் முக்கியம். துர்நாற்றத்திற்கான காரணங்கள் பெரும்பாலும் வாயிலேயே இருப்பதால், பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

உடல் ரீதியான வாய் துர்நாற்றம், வாயில் நோய்த்தொற்று ஏற்படுவதால் உருவாகும் வாய் துர்நாற்றம் மற்றும் போலி வாய் துர்நாற்றம் ஆகியவற்றுக்கு பல் மருத்துவர் சிகிச்சையளிக்க முடியும். வாய் சம்பந்தப்பட்டதாக இல்லாமல், பிற நோயியல் காரணங்களால் ஏற்படும் வாய் துர்நாற்றத்திற்கு மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரால் சிகிச்சை அளிக்க முடியும். ஹெலிட்டோஃபோபியாவிற்கு மருத்துவர் அல்லது உளவியல் நிபுணர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கலாம்.
நாக்கை சுத்தம் செய்தல்: பெரும்பாலும், நோயியல் காரணங்களால் ஏற்படும் வாய் துர்நாற்றத்திற்கு நாக்கின் பின்புறமே காரணமாக உள்ளது, நாக்கின் மேல் படிந்திருக்கும் படலத்தினால் துர் நாற்றம் ஏற்படலாம். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு, நாக்கை சுத்தம் செய்வதே சிறப்பான பலனளிக்கும் சிகிச்சையாக இருக்கலாம். நாக்கு சுத்தம் செய்யும் சிறிய பிரஷ் அல்லது குழந்தைகளுக்கான பல் துலக்கும் பிரஷைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது நல்லது. நாக்கு வழிக்கும் சாதனம் (டங் கிளீனர்) அல்லது பெரியவர்கள் பல் துலக்கும் பிரஷைக் கொண்டு லேசாகத் தேய்த்து சுத்தம் செய்வதும் பலனளிக்கும். ஆனால் முரட்டுத்தனமாகத் தேய்த்தால் நாக்கின் மேல் பரப்பு சேதமடையலாம்
பல் சம்பந்தப்பட்ட தீர்வுகள்: வாயின் சுத்தம் சம்பந்தப்பட்ட காரணங்களால் துர் நாற்றம் ஏற்பட்டால், பல் மருத்துவரின் ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படலாம். உங்கள் பல் மருத்துவர் பின்வரும் ஆலோசனைகளைக் கூறலாம்:
பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான சிகிச்சை: ப்ளேக்கை நீக்குவதற்காக பல் மருத்துவர் உங்கள் பற்களை சுத்தம் செய்யலாம். இதற்கு முன்பு பல் நிரப்பு சிகிச்சை செய்திருந்து, அந்தப் பாகங்கள் சேதமடைந்திருந்தால், அவற்றைப் புதிதாக நிரப்ப வேண்டும் என்று உங்கள் பல் மருத்துவர் பரிந்துரைக்கலாம். பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் ஏதேனும் இருந்தால், அதற்கு சிகிச்சையளிப்பதற்கு பல் ஈறு மருத்துவரிடம் (பெரியடாண்ட்டிஸ்ட்) செல்லுமாறு உங்கள் பல் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
மவுத் வாஷ் மற்றும் டூத்பேஸ்ட்: பற்களின் மீது பாக்டீரிய வளர்ச்சி (ப்ளேக்) இருப்பதே வாய் துர்நாற்றத்திற்குக் காரணம் என்று உங்கள் பல் மருத்துவர் கருதினால், கிருமிகளை எதிர்க்கும் தன்மை கொண்ட மவுத் வாஷ் அல்லது டூத்பேஸ்ட்டைப் பயன்படுத்துமாறு அவர் பரிந்துரைக்கலாம்.
வாய் துர்நாற்றத்தை எப்படித் தடுப்பது? (How to prevent bad breath?)
வாய் துர்நாற்றத்தைத் தடுக்க உதவும் பல வழிமுறைகள் உள்ளன:
தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்: ப்ளேக் மற்றும் உணவுத் துணுக்குகளை அகற்றுவதற்கு, தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். இரவு உறங்கச் செல்லும் முன்பு பல் துலக்குவது மிக முக்கியம், ஏனெனில் இரவில் பல் துலக்குவதால் உணவுத் துணுக்குகள் நீங்கி, இரவில் பாக்டீரியாக்கள் வளர்வது குறையும்.
நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்: நாக்கை சுத்தம் செய்யும் வசதியுடன் கூடிய பிரஷ் அல்லது டங் கிளீனரைப் (டங் ஸ்க்ராப்பர்) பயன்படுத்தி (மருந்து கடைகளில் கிடைக்கும்) நாக்கில் இருக்கும் படலத்தை மெதுவாகத் தேய்த்து அகற்றவும். நாக்கில் தடிமனான படலம் உருவாகும் நபர்களுக்கு பாக்டீரியா வளர்வதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது.
சாப்பிட்ட பிறகு வாயைக் கொப்பளித்தல்: வாயில் தங்கியிருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்ற, சாப்பிட்ட பிறகு வாயைக் கொப்பளிக்கவும். நீர் கிடைக்காதபட்சத்தில், இதற்குப் பதில் சுகர்லெஸ் சுவிங்கத்தையும் பயன்படுத்தலாம்.

தினசரி பல் இடுக்குகளை சுத்தம் செய்தல் (ஃப்ளாசிங்): ஃப்ளாசிங் செய்வதால் பிரஷ் நுழைய முடியாத, பற்களுக்கு இடையே உள்ள உணவுத் துணுக்குகளும் ப்ளேக்கும் அகற்றப்படும். இதைச் செய்யாவிட்டால், இந்த இடைவெளியில் உணவுத் துணுக்குகள் சேர்ந்து, வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.
வாயை ஈரமாக வைத்திருக்கவும்: வாய் வறண்டு போகாமல் தடுக்க அதிகமாக நீர் அருந்தவும். சுகர்லெஸ் சுவிங்கம், சாக்லேட் போன்றவை உமிழ்நீரைச் சுரக்க வைத்து, வாயை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் வாய் வறட்சி ஏற்பட்டால் அல்லது நீண்ட காலமாக உங்களுக்கு வாய் வறண்டு போகும் பிரச்சனை இருந்தால், உங்கள் பல் மருத்துவரின் ஆலோசனை பெறவும், அவர் உங்களுக்கு செயற்கை முறையில் உமிழ்நீர் சுரப்பதற்கான சிகிச்சை அளிக்கலாம்.
புகைப்பழக்கத்தையும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதையும் நிறுத்தவும்: புகைபிடிப்பதால் வாய் துர்நாற்றமும் வாய் வறட்சியும் ஏற்படுகிறது. புகையிலை பொருட்கள் வாய் வறட்சியை ஏற்படுத்தும் குணமுடையவை. இந்தப் பழக்கங்களை விடுவது உங்கள் வாய் துர்நாற்றப் பிரச்சனையைத் தீர்க்க உதவும்.
உணவுப் பழக்கத்தில் மாற்றம்: சுவாசத் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உணவு வகைகளையும், ஒட்டும் தன்மையுள்ள சர்க்கரை உள்ள உணவுப்பொருள்களையும், பாக்டீரிய வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் பானங்களையும் தவிர்க்கவும்.

செயற்கைப் பற்கள் அல்லது பல் சம்பந்தப்பட்ட சாதனங்களை சுத்தம் செய்யவும்: பல் சம்பந்தப்பட்ட சாதனங்கள் அல்லது செயற்கைப் பல்லை வைத்திருந்தால், அவற்றை அடிக்கடி சுத்தம் செய்யவும். அதற்கு உங்கள் பல் மருத்துவர் பரிந்துரைக்கும் பிராடக்ட்டைப் பயன்படுத்தவும்.
அவ்வப்போது பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளவும்: வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உங்கள் பல் மருத்துவரிடம் சென்று பல் சம்பந்தப்பட்ட சோதனைகளைச் செய்துகொண்டு பற்களைச் சுத்தம் செய்துகொள்வது, பல் சம்பந்தப்பட்ட நோய்களையும் சுவாசத் துர்நாற்றத்தையும் தடுக்க உதவும்.