தாய்ப்பாலில் மட்டும்தான் பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால் அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது.
அது போலத்தான் பசும்பாலில் caesin-whey புரோட்டீன்தான் இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ whey புரோட்டீன். இந்த whey புரோட்டீன் தாய்ப்பாலில் மட்டும்தான் உள்ளது. இந்த புரோட்டீன்தான் பச்சிளம் குழந்தைகளுக்கு பொருத்தமான வகை புரோட்டீன். பசும்பாலில் இப்படி பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எதுவும் சரிவிகிதத்தில் இல்லாததனால் பச்சிளம் குழந்தையின் மெத்தென்ற குடலில் அலர்ஜி உண்டாகும். இதனால் டயரியா ஆகும். மோஷனில் கண்ணுக்குத் தெரியாமல் பிளீடிங் கூட ஆகும்.
தாய்ப்பாலால் குழந்தைக்கு மேற்சொன்ன பிரச்சனைகள் எதுவும் வராது. தாய்ப்பாலில் உள்ள மைக்ரோ நியுட்ரிஷியன்ஸ் குழந்தைக்குத் தேவையான இன்பெக்ஷன் எதிர்ப்புச் சக்தியைத் தரும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிக குறைவு. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம்.
குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தாய்க்கு அலுவலகத்திலிருந்து கட்டாய ஓய்வு தேவை. தவிர இந்த மூன்று மாத கால அவகாசம் குழந்தைக்கு தாய்ப்பால் முழுமையாக கொடுக்கவும் பயன்படுகிறது. அதன் பின் தாய் ஒருவாரம், பத்து நாளில் வேலைக்குப் போகவேண்டும் என்றால், தாய்ப்பாலை முன்கூட்டியே எடுத்து வைத்து விட்டால் நான்கு மணி நேரம் வரை அந்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். குளிர்சாதன பெட்டியில் பத்திரமாக வைத்தால் 7 முதல் 10 நாள்வரை தரலாம்.
தாய்ப்பாலை குளிர்சாதனபெட்டியிலிருந்து வெளியில் எடுத்துவைத்து, அது அறையின் சீதோஷன நிலைக்கு சரியாக வந்தவுடன் கரண்டி அல்லது பாலாடையில், குழந்தைக்குப் புகட்டலாம். கண்டிப்பாக பாட்டில் பழக்கப் படுத்தாதீர்கள். அப்படி பாட்டிலில் கொடுத்தால் காதுவலி, அல்லது டயரியா வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
குளிர்சாதன பெட்டியில் அல்லது பிரீஷரில் வைத்திருக்கும் பாலை எடுப்பதற்குள் குழந்தை அழுகிறதென்றால் எப்படி உடனடியாக பால் ஊட்டுவது?
கவலை வேண்டாம், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் தாய்ப்பாலை விட்டு, அதை கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் உள்ளே வைத்துவிடுங்கள். பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்தவுடன் பாலை குழந்தைக்குப் புகட்டுங்கள். எச்சரிக்கை : தாய்ப்பாலை நேரடியாக சூடு செய்யக்கூடாது.
அலுவலக நேரங்களில் கூட, தாய்மார்கள் மார்பகத்தில் ஊறியிருக்கும் தாய்ப்பாலை பம்ப் செய்து எடுத்து அலுவலக பிரிட்ஜில் வைத்து பின் வீட்டில் எடுத்து வந்து வைக்கலாம்.