நான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும்.
சென்ற சிலகாலங்களில் மூன்று பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கொண்டு வந்திருந்தார்கள்.
அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பது உண்மைதான்.
ஆயினும் நபரைக் குறிப்பிடாது விடயத்தை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.
கணவன் நீண்டகாலம் வெளிநாட்டில் இருக்க இங்கு கர்ப்பமானாள் ஒருத்தி.
சென்ற ஆண்டு வன்செயலில் கணவனை இழந்தவள் வயிற்றில் மூன்று மாதக் கர்ப்பத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றாள்.
சிறு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கன்னிப் பெண்ணின் சிறுநீர்ப்பரிசோதனையில் அவளுக்கு கர்ப்பம் தங்கியிருப்பது நிச்சமாயிற்று.
கேட்கவே கோபம் வருகிறதா?
அல்லது வன்புணர்வின் பலனாக ஏற்பட்டதா என்பதைக் கூட கேட்கவில்லையே நீங்கள்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாலுணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது நிறைவு செய்யப்பட வேண்டியது என்பதில் மறு கருத்து இருக்க முடியாது.
ஆனால் இவர்களது பாலுறவுச் செயற்பாடானது சற்று மாறானது என்பது உண்மையே. அதாவது எமது சமூகத்தின் ஒழுக்க வரன்முறைகளை மீறியதாக இருக்கிறது.சமூக, சட்ட ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்ற போதும் அதனை மீறி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?
அதனைத் தீர்ப்பதற்கான மாற்று வழி என்ன?
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே எமது பண்பியல் தடத்தின் மிகக் கௌரவமான அம்சமாகக் கொள்ளப்படுகிறது.
ஆனால் அதே தமிழினத்தின் இலக்கியங்கள்தாம் பரத்தைகள், விலைமாதர்கள் ஆகியோருடன் ஆடவர்கள் கொண்ட உறவு பற்றியும் சொல்லுகிறது.
குலமாதர்களை விலைமாதர்களிடமிருந்து வேறுபடுத்தி ஒழுக்கக் கோவைகளை முன்னோடியாக இயற்றியதும் எமது பண்டைய இலக்கியங்களே.
எனவே அத்தகைய வரன் மீறிய உறவுகள் பண்டைக் காலம் முதல் இருந்து வருவது உண்மையே.
சரியோ பிழையோ அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.
கேட்கவே மனசு கூசுகிறது, திகில் அடைகிறது அல்லவா?
யாருக்கும் எதுவும் நடக்கக் கூடிய காலம் அல்லவா இது?
எனவே இப்பிரச்சனையை திறந்த மனத்துடன் அணுகுவது அவசியம்.
கருக்கலைப்புச் செய்கிறார்கள். கருக்கலைப்பு இங்கு சட்டபூர்வமானது அல்ல என்பதால் ஒளித்து மறைத்து செய்கிறார்கள். எந்தவிலை கொடுத்தேனும் செய்கிறார்கள்.
ஒளிவு மறைவாகச் செய்யப்படுவதால் மருத்துவர் அல்லாதவர்களால்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.
பயிற்சி அற்றவர்கள் செய்வதால் இசகுபிசகாகச் செய்யப்பட்டு பல உயிரிழப்புகள் நடக்கின்றன.
அத்தோடு இவற்றில் பல, சுகாதார முறைப்படி செய்யப்படாததால் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டு மேலும் இழப்புகள் தொடர்கின்றன.
தனது பிரசைகளின் நல்வாழ்க்கை, ஆரோக்கியம், உயிர் உத்திரவாதம் ஆகியவற்றை காக்கும் கடமை அரசுக்கு உண்டு.சட்ட உருவாக்கத்தில் உள்ளவர்கள் பண்டைய வாழ்வின் பெருமைகளை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காது கண்ணைத் திறந்து இன்றைய நடப்பைக் கவனிக்க வேண்டும். அவர்கள் பிரச்சனையை மனிதாபிமான உணர்வுடன் அணுக வேண்டும்.
எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.
எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.